சிறகை விரி உலகை அறி-38 மதம்... அரசு... சமாதானம்!


பைசாண்டியம் மற்றும் கிறிஸ்தவ அருங்காட்சியகத்தின் உள்ளே...

டெல்பியில் இருந்து கிளம்பினேன். உள்வாங்கிய கடல் நீர் திட்டுத்திட்டாய் விட்டுச் செல்லும் மணல்போல, கடந்துபோன வரலாறுகள் மனத்திரையில் படிந்தன. சீனாவில் பார்த்த 2,200 ஆண்டுகள் பழமையான டெரகோட்டா போர் வீரர்களும், டெல்பியின் 2,500 ஆண்டுகால வெண்கல போர் வீரரும் கண்ணுக்குள் நின்று காவியம் பாடினர். மனமெல்லாம் ஓவியம் தீட்டினர்.

இலைச் சுருளில் உறங்கும் புழுவைப்போல களைப்பில் எல்லோரும் தூங்கித் துவண்டபோது, மாலை 5 மணிக்கு பேருந்து மீண்டும் ஏதென்ஸ் நகருக்குத் திரும்பியது. இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக விமான நிலையம் சென்றால் போதும் என்பதால், மீதம் இருக்கின்ற மூன்றரை மணி நேரத்தைப் பயன்படுத்த நினைத்தேன். எங்கு செல்லலாம்? கடந்த நான்கு நாட்களாக ஏதென்ஸைச் சுற்றி வருகையில் பழமை மாறாத கிறிஸ்தவ ஆலயங்கள் பலவற்றைப் பார்த்திருந்தேன். உள்ளே சென்றால், எந்தக் கோயிலிலும் சுரூபங்கள் இல்லை. ஓவியங்களே இருந்தன. தங்க முலாம் பூசப்பட்டதுபோன்று மின்னிய காட்சிகளை கண்ணுக்குள் பொத்தி வைத்திருந்தேன்.

தத்துவ பூமியில் எழுந்த கேள்விகள்

ஏன் சுரூபங்கள் இல்லை? தத்துவம் தழைத்தோங்கிய, எண்ணற்ற கடவுள்களும், தேவதைகளும், புராணங்களும் நிறைந்த கிரேக்க நிலத்தில், ஒரே கடவுள் கேட்பாடுடைய கிறிஸ்தவம் பதியமானது எப்படி? கிரேக்க ஓவியங்களிலும், சிலைகளிலும் உள்ள ஆண், பெண் முகங்கள், கிறிஸ்தவ சமய புனிதர்களின் முகங்களாகவே தெரிகிறதே ஏன்? கேள்விகளுக்கான விடை அறிய விரும்பினேன்.

பைசாண்டியம் மற்றும் கிறிஸ்தவ அருங்காட்சியக முகப்பு...

சிண்டாக்மா சதுக்க தொடர்வண்டி நிலையம் சென்று, அங்கிருந்து ‘அறியாத வீரரின் கல்லறை’யைக் கடந்து. பாராளுமன்றக் கட்டிடத்தைத் தாண்டி பைசாண்டியம் மற்றும் கிறிஸ்தவ அருங்காட்சியகத்துக்குள் (Byzantine and Christian Museum) நுழைந்தேன். இந்த தேசிய அருங்காட்சியகத்தில், கி.பி. 3-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் உள்ளன.

பைசாண்டியம் மற்றும் கிறிஸ்தவ அருங்காட்சியகத்தின் உள்ளே...

இயேசுவின் முடிவும் எழுச்சியும்

கி.பி. 33-ம் ஆண்டு இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். யூத தலைவர்களும், மறைநூல் அறிஞர்களும், சட்ட வல்லுநர்களும் கருத்துப் புரட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக களிநடனம் புரிந்தார்கள். அவர்கள் நம்பியதைப் போலவே, இயேசுவின் சீடர்கள் ஓடி ஒளிந்தார்கள், பாரம்பரிய வேலைக்குத் திரும்பத் தயாரானார்கள். ஆனால், “இறந்தவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார், எங்களுக்கு காட்சி தந்தார்” என்று சில பெண்கள் அறிவித்தார்கள். தாங்களும் உயிர்த்த இயேசுவைப் பார்த்ததாக சீடர்களும் சொன்னார்கள். துணிந்து, சமத்துவ சகோதரத்துவ கருத்துப் புரட்சியை முன்னெடுத்துச் சென்றார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் ‘கிறிஸ்தவர்கள்’ ஆனார்கள்.

சிந்தனை எழுச்சியுடன், புதிய மதம் உருவானதை பேரரசர்கள் எதிர்த்தார்கள். புதிய மதத்தைப் பின்பற்றவும், வழிபாடு நடத்தவும் அனுமதி மறுத்தார்கள். மீறியவர்களை மிகக் கொடூரமாக கொலை செய்தார்கள். விலங்குகளுக்கு உயிரோடு இரையாக்கி, அதை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உருவாக்கி மகிழ்ந்தார்கள். கொலை செய்யப்படும் வேளையிலும், ஏன் கிறிஸ்தவ நம்பிக்கையில் இவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள்? என்று வியந்தவர்களால், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

மூன்று நூற்றாண்டுகள் நிகழ்த்தப்பட்ட சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் பிறகு, கி.பி. 313-ல், உரோமை பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவ மதத்தை அங்கீகரித்தார். தன் எல்கைக்குள் மதத்தைப் பின்பற்றவும். கோயில்கள் கட்டவும் அனுமதித்தார். கிறிஸ்தவம், உரோமையின் அதிகாரபூர்வ மதமானது. கொலைக்காட்சிகள் முடிவுக்கு வந்தன.

தோளில் கன்றுக்குட்டி!

கிரேக்க மாதிரிகள்

கி.பி. 330-ல் கான்ஸ்டன்டைன் தன் தலைநகரை பைசாண்டியம், அதாவது தற்போதைய துருக்கியின் இஸ்தான்புல் பகுதிக்கு மாற்றினார். கான்ஸ்தாந்திநோபுள் தலைநகரானது. உரோமை பேரரசரின் ஆதரவால் கிறிஸ்தவ ஓவியக் கலை கி.பி. 2-4 நூற்றாண்டுகளில் பிறந்து, செழித்து வளர்ந்தது. இயேசுவையும், அவர்தம் புதுமைகளையும், குணநலன்களையும் வரைவதற்கு அக்காலத்தில் இருந்த கிரேக்கர்களின் உருவங்களை, கலைஞர்கள் மாதிரியாக உள்வாங்கினார்கள். இயேசு, “நல்ல ஆயன் நானே” (யோவான் 10:11) என்று சொன்னது விவிலியத்தில் இடம்பெற்றுள்ளது. இதை விளக்க, கன்றுக்குட்டியைத் தோளில் சுமந்திருக்கும் கிரேக்க சிலையின் மாதிரியைப் பயன்படுத்தினார்கள். கி.மு. 570-ம் ஆண்டைச் சேர்ந்த அத்தகையதொரு சிலை தற்போதும் அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில் உள்ளதை, இரண்டு நாட்களுக்கு முன்பாக பார்த்தேன். இதனால்தான், கிரேக்கம் முழுக்க கிறிஸ்தவ புனிதர்களின் படங்கள் இருப்பதுபோன்ற தோற்றம் தெரிகிறது. உண்மையில், கிரேக்க உருவங்கள் கிறிஸ்தவத்தில் உள்ளன, என்பதே சரி.

அன்னை மரியா

இரண்டு தேசங்களின் பிறப்பு

கான்ஸ்டன்டைன் கி.பி.337-ல் இறக்கும்வரை ஒரே நாடாக இருந்த உரோமை பேரரசு, கி.பி. 395-ல் இரண்டு நாடுகளாக மலர்ந்தது. இத்தாலியின் உரோமை நகரை தலைமையாகக் கொண்டது மேற்கு ரோமன் பேரரசு; கான்ஸ்தாந்திநோபுளை தலைமையாகக் கொண்டது, கிழக்கு ரோமன் பேரரசு அல்லது பைசாண்டியன் பேரரசு. உரோமை நகரை மையமாக வைத்து வளர்ந்த கிறிஸ்தவ சமயத்தின் தலைவர் திருத்தந்தை (Pope) என அழைக்கப்பட்டார். பைசாண்டியம் பகுதியில் வளர்ந்த கிறிஸ்தவத்தின் தலைவரை பேட்ரியார்க் (Patriarch) என்று அழைத்தார்கள்.

கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தில் ஏற்படும் கருத்து முரண்கள், கோட்பாட்டு முரண்கள், இறையியல் தொடர்பானவைகளைப் பேசி தீர்ப்பதற்காக அவ்வப்போது திருச்சங்கம் (Council) கூடுவதுண்டு. முதல் ஏழு திருச்சங்கங்களில் உரோமை தலைவரும், பைசாண்டிய தலைவரும் சேர்ந்தே விவாதித்தார்கள். ஆனாலும்கூட, மொழி, கலாச்சாரம், அரசியல், இறையியல் மற்றும் வழிபாட்டுமுறை சார்ந்த சில முரண்பாடுகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. இருவருக்குமிடையே, யார் அதிக அதிகாரம் படைத்தவர்? என்கிற மோதலும் உருவானது. கி.பி. 1054-ல் உரோமையில் இருந்த திருத்தந்தை மூன்றாம் லியோ, கான்ஸ்தாந்திநோபுள் பேட்ரியார்க் மைக்கேல் செருலரியசையும் (Michael Cerularius) அவருடைய மொத்த சபையினரையும், திருச்சபையிலிருந்து நீக்கினார். ‘நீங்கள் என்ன என்னை நீக்குவது, உங்களையும் உங்கள் சபையினரையும் நான் நீக்குகிறேன்’ என்றார் பேட்ரியார்க் செருலரியஸ். பெரும் பிளவு ஏற்பட்டு, மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை உருவானது.

உரோமையில், கிறிஸ்தவம் அரச மதமாக இருந்தாலும், கி.பி. 476-ல், மேற்கு ரோமன் பேரரசு முடிவுக்கு வந்ததால், பெரிய அளவில் வலிமையோடு இல்லை. ஆனால், கான்ஸ்தாந்திநோபுளில் கிழக்கு ரோமன் பேரரசு வலுவுடன் நிலைத்திருந்தது. கிறிஸ்தவம் அரச மதமாக இருந்ததால், கிழக்கு ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை முக்கியத்துவம் பெற்று வளர்ந்தது. பிற தெய்வங்களை வணங்கியவர்கள் ஒடுக்கப்பட்டார்கள், அல்லது புறக்கணிப்புக்கு உள்ளானார்கள். ஏற்கெனவே இருந்த கிரேக்க வழிபாட்டுத்தலங்கள், கிறிஸ்தவ கோயில்களாக மாற்றப்பட்டன. பிரம்மாண்டமான புதிய கோயில்கள் கலைநயத்துடன் எழுப்பப்பட்டன. தத்துவப் பள்ளிகள் மூடப்பட்டன. ஒருகாலத்தில் கிறிஸ்தவம் ஒடுக்கப்பட்டது. தற்போது கிறிஸ்தவம் மற்ற மத நம்பிக்கையாளர்களை ஒடுக்கியது. கி.பி. 1453-ல் அட்டாமன் பேரரசிடம் வீழும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பைசாண்டிய பேரரசு ஆற்றலுடன் ஆட்சி செய்தது.

கோயில் பீடம்

ஓவிய மொழி

உருவ வழிபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்கள், கிழக்கு ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையில் நடந்த முக்கிய நிகழ்வுகள், அடிப்படை நம்பிக்கைகள், விவிலியத்தில் உள்ள பகுதிகள், புனிதர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை விரிவாகவும் விளக்கமாகவும் ஓவியங்களாக வரைந்து கோயில்களில் வைக்கிறார்கள். இருபரிமாண முறையில் சுவர்களிலும், பலகைகளிலும் தங்க நிறம் கலந்து வரைகிறார்கள்.

‘கல்வியறிவற்றவர்களின் விவிலியமாக’ (Bible in illiterate), ‘இறையரசுக்கு வழிகாட்டும் ஜன்னல்களாக’ இந்த ஓவியங்கள் விளங்குகின்றன. ஆலயத்தினுள் கிழக்கே பீடம் இருக்கிறது. பீடத்துக்குப் பின்னால் உள்ள சுவரில் உயரே குவியத்திலிருந்து (apse) அன்னை கன்னி மரியா, இறைவனின் தாய், கீழே குனிந்து பார்ப்பதுபோல வரைகிறார்கள்.

மரியாவும் சீடர்களும்

திருமுழுக்கு யோவான்

சொர்க்கம், நரகம்

அன்னை மரியாவின் கடைசி நேரம்!

அன்னை மரியாவிடம் இயேசுவின் பிறப்பு குறித்து வானதூதர் அறிவித்ததைச் சொல்கிற, கி.பி.15-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த ஓவியம்; திராட்சைக் கொடியாக இயேசு, அதன் கிளைகளில் 12 சீடர்கள் உள்ள, கி.பி.1666-ல் தியோடோர் பவுலாகிஸ் (Theodore Poulakis) வரைந்த படம்; திருச்சபை மரத்தின் மையமாக மரியாவும், கிளைகளில் இயேசுவின் சீடர்களும், சொர்க்கம் நரகம், மரியாவின் கடைசி நேரம் உள்ளிட்ட படங்கள், மற்றும் ஆலய பீடத்தின் மாதிரி, குருக்கள் பயன்படுத்திய ஆடைகள், திருப்பலி பொருட்கள், இயேசுவின் முன்னோடி திருமுழுக்கு யோவானின் 17-ம் நூற்றாண்டு கற்சிலை போன்றவைகளை அருங்காட்சியகத்தில் பார்த்தேன். மீண்டும், பாராளுமன்றம் வழியாக நடந்து, ‘அறியாத வீரருக்கான’ காவலர்கள் பணி மாறுகிற அழகைக் கண்டு ரசித்து, சிண்டாக்மா தொடர்வண்டி நிலையத்திலிருந்து விமான நிலையம் சென்றேன்.

(பாதை நீளும்)

பாக்ஸ்

சமாதானம்!

1000 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக ஒத்த கருத்தில் இருந்த கிறிஸ்தவர்கள், கி.பி. 1054-ல் இரு பிரிவாகப் பிரிந்தார்கள். இந்நிலையில், திருத்தந்தை 6-ம் பவுல், பேட்ரியார்க் முதலாம் அத்தனாகோரஸ் (Athenagoras-I) இருவரும் 1965-ம் ஆண்டு ஜெருசலேமில் சந்தித்தார்கள். 1000 ஆண்டுகளுக்குமேல் ஒருவர் மற்றவர் மீதும், அவர்களின் திருச்சபையினர் மீதும் சுமத்தியிருந்த ‘திருச்சபையிலிருந்து புறம்பாக்குதல்’ என்கிற ஆணையைத் திரும்பப்பெற முடிவெடுத்தார்கள். டிசம்பர் 7-ம் தேதி, உரோமையில் திருத்தந்தையும், இஸ்தான்புல்லில் பேட்ரியார்க்கும் ஒரே நேரத்தில் இதை அறிவித்தார்கள். தற்போதும், 100 கோடிக்கும் அதிகமான மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபையினரும், 26 கோடிக்கும் அதிகமான கிழக்கு ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையினரும் தனித்தனியாகத்தான் செயல்படுகிறார்கள். ஆனால், சமாதானமாக!

x