‘என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்’ எனும் பழைய பாடலில், ‘இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும்?’ என்ற கேள்வியை நாயகன் எழுப்புவான். அதற்கு நாயகி ‘முழுமை பெற்ற காதல் என்றால் முடிவுவரை ஓடிவரும்’ என்று பதில் அளிப்பாள். அப்படி முழுமைபெற்ற காதலர்களாக இருந்தவர்கள் தங்களின் இணையை ‘மரணம்’ எனும் தவிர்க்க முடியாத காரணத்தால் இழக்க நேரும்போது, துடித்துப் போய்விடுவார்கள். பலவிதமான மன இறுக்கத்துக்கு ஆளாவார்கள். இந்தக் காணொலியில் தன்னுடைய மனைவிக்காக ஒரு பாடலை எழுதி, அதற்கான இசையை அமைப்போரிடம் கொடுத்து இசையமைத்து, தகுந்த பாடகரைக் கொண்டு பாடவைத்து, அந்தப் பாடலை சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருக்கிறார் ஒரு மனிதர். மனைவியை இழந்த கணவர்களுக்கு இந்தப் பாடலை அர்ப்பணித்தும் இருக்கிறார்.
மனைவியின் பிரிவை வார்த்தைகளில் நிரப்பி வாழ்க்கையை கடத்தியிருக்கிறார், பாடலாசிரியரும் ஆல்பத்தின் தயாரிப்பாளருமான பாலு ஜமுனா. பாடலுக்கு வி.கே.கண்ணன் இசையமைத்திருக்கிறார்.
இளம் தலைமுறையினரிடையே பக்தி இசையைப் பரப்பும் வகையில் தாசர் பாடல்கள், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றுக்கு இசையமைத்து அதை யூடியூபில் பதிவேற்றும் பணியைச் செய்துவருபவர் இசையமைப்பாளர் வி.கே.கண்ணன்.
“பகவத் கீதையின் 80 ஸ்லோகங்களுக்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம். அதில் சில ஸ்லோகங்கள் தாளத்தில் அமையும். பல ஸ்லோகங்கள் தாளத்தில் அமையாது. விருத்தமாக இருக்கும். பெரிய சவாலான பணியை இறைவன் அருளால் பரிபூரணமாகச் செய்திருக்கிறோம் எனும் மன திருப்தி கிடைத்திருக்கிறது. விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கும் இசையமைத்திருக்கிறேன். பகவத் கீதையை சீனிவாசலு, பிரசன்னா, பென்னி கிருஷ்ணகுமார் ஆகியோர் பாடியிருக்கின்றனர். இது இன்னமும் வெளியாகவில்லை” என்றார் கண்ணன்.
தொடர்ந்து, “பக்திப் பாடல்களுக்கு இடையில் மனைவிக்காக ஒரு பாடலை எழுதி எடுத்துவந்து, அதை முறையாகப் பதிவுசெய்து வெளியிட வேண்டும் என்று எண்ணத்தோடு பாலு சார் கேட்டபோது, மறுக்க முடியவில்லை. பக்தி இசைக்கு தரும் அதே ஈடுபாட்டை இந்த உணர்வுபூர்வமான பாடலுக்கு அளித்து ஒலிப்பதிவு செய்தோம். பாடலின் கருத்து மனைவியை நேசித்தவர்களையும் நேசிக்க மறந்தவர்களையும் ஒருங்கே உருக்கும்!” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் கண்ணன்.
https://www.youtube.com/watch?v=KiTmMVuHX0I
டிஸ்கோ இசையின் எல்லை!
‘இப்படியெல்லாம்கூட வாத்தியத்திலிருந்து ஒலி வருமா?’ என்று கேட்பவர்களைத் திகைக்க வைத்தவர் பப்பி லஹிரி. இசையமைப்பாளர், பாடகர் என இந்தியா முழுதும் புகழ்பெற்றிருந்த அவர், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சியவர். அவருடைய இசையைப் போன்றே அவருடைய ஆடை, அணிகலன்களின் தேர்வும் வித்தியாசமாக இருக்கும். இந்தியத் திரை இசையில் டிஸ்கோ மியூசிக் எனும் வகைமையைத் தொடங்கிவைத்தவர் அவர்தான்.
எலக்ட்ரானிக்ஸ் இசையின் முன்னோடி. அதிநவீனமான இசை ஒலிக்கும் அதே சமயத்தில், மெலடியையும் அவருடைய பாணியில் கொடுப்பார். 80, 90-களில் வட இந்திய திருமண வீடுகளாக இருந்தாலும் சரி, தென்னிந்திய திருமண வீடாக இருந்தாலும் சரி, அங்கு நிச்சயமாக பப்பி லஹரி பாடியிருக்கும், ‘பம்பாய் ஸே ஆயே மேரே தோஸ்த்’ பாடல் ஒலிக்கும். அதேபோல் நண்பர்களின் பார்ட்டி என்றால் `ஜிம்மி ஜிம்மி ஜிம்மி... ஆஜா ஆஜா ஆஜா’ ஒலிக்கும். அவரது டிஸ்கோ இசை, உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.
அவரது இசையமைப்பில் பிளிறலாகச் செவிகளை ஆக்கிரமிக்கும் (பிராஸ் செக்ஷன்) டிரம்பட், சாக்ஸபோன் இசைக்கு உலகம் முழுதும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘அபூர்வ சகோதரிகள்’ என்னும் தமிழ்ப் படத்துக்கு எஸ்.ஜானகி பாடியிருக்கும் ‘அன்னை என்னும் ஆலயம்’ பாட்டின் காணொலி இது. பொதுவாக அன்னையைப் பற்றிய பாடல் என்றால் மெலிதான மயிலிறகின் வருடலான இசைதான் ஒலிக்கும். ஆனால், இந்தப் பாட்டைக் கேளுங்கள். ‘ராக் அண்ட் ரோ’லில் போட்டிருப்பார். அதுதான் பப்பி தா!
காதலைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் இல்லை. காதலுக்காகக் காதலர்கள் செய்யாத தியாகம் இல்லை. காதலுக்காகத் தங்களின் காதலையே தியாகம் செய்த காதலர்களும் உண்டு. காதல் கைகூட மரத்தடி ஜோசியராக இருந்தாலும் சரி, அவர்கள் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, காதல் களத்தில் தயங்காமல் இறங்குவார்கள் இளைஞர்கள். இந்தக் காணொலியில் காதலுக்கு பிள்ளையார்சுழி போடுவதே ஒரு மரத்தடி ஓவியர்தான்!
இளம் வயதில் இருக்கும் பையனிடம் காகிதத்தில் ஒரு பெண்ணின் முகத்தை வரைந்துகொடுத்துவிட்டு, “இவள்தான் உன்னுடைய ஆத்மசகி இவளைத் தேடிக் கண்டுபிடி” என்கிறார் ஒரு குறும்புக்கார பெரியவர். ஓவிய வரிகளில் காதலியின் முகவரியைத் தேடி ஒரு பிரபஞ்சப் பயணத்தை நடத்துகிறார் நாயகன். ஆல்பத்தின் பெயர் – ‘காதல் யுனிவர்ஸ்’.
காதல் என்றாலே இளமையுடன் தொடர்புடையது என்பதால், பிரவீன் மணியின் இசையிலும் இளமையின் துள்ளல் ஒவ்வொரு பீட்டிலும் தெறிக்கிறது. ஹரிசரண், இந்தப் பாடலைப் பாடுவதற்கான மிகவும் பொருத்தமான தேர்வு என்பதை நிரூபிக்கிறது கம்பீரமும், நெளிவும் குழைவும் சட்... சட்டென்று பிரதிபலிக்கும் அவரின் குரல் வளம்.
காணொலியில் தோன்றும் நடனக் கலைஞர்களும் நேர்த்தியாக அவர்களின் பணியைச் செய்திருக்கின்றனர். நவீனின் பாடல் வரிகள் கொஞ்சல் ரகம். பிரபஞ்சம் எங்கும் தேடியும் காதலி கிடைத்தாளா, இல்லையா என்பதைக் காணொலியைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!
https://www.youtube.com/watch?v=MDoCYtxqUYw
அறிவியலைக் கொண்டாடும் பாடல்!
சர் சி.வி.ராமன் தனது புகழ்பெற்ற ‘ராமன் விளைவு’ குறித்து உலகுக்கு அறிவித்த நாள், 1928 பிப்ரவரி 28. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் விருதும் வழங்கப்பட்டது. இதைக் கொண்டாடும் விதமாக, பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினத்தை, பிப்ரவரி 22 முதல் 28 வரை அறிவியல் திருவிழாவாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை நடத்துகிறது. இந்த 7 நாட்களில், அறிவியல் சார்ந்த திரைப்படத் திரையிடல் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றின் ஆசிரியர், மாணவர்களுக்கு உடல் உறுப்புகள் அவற்றின் செயல்பாட்டை பாட்டின் மூலமாகவே விளக்கும் இந்தக் காணொலியைப் பாருங்கள். அறிவியலைக் கொண்டாடுங்கள்!