கேரள ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி பிப். 21-ல் சாலை மறியல்


பி.ஆர். பாண்டியன்

“முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்றும் அதில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கிவைக்க அனுமதிக்க மாட்டோம்” என்றும் கேரள சட்டப்பேரவையில் உரையாற்றிய கேரள ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி, நாளை மறுதினம் (பிப்.21) சாலை மறியல் நடைபெறும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இதுகுறித்து தெரிவித்ததாவது:

“முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்றும், 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கிவைக்க அனுமதிக்க மாட்டோம் என கேரள சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப்கான் பேசி இருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவரது செயல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது மட்டுமின்றி, அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு குறித்த அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிற நிலையில் இவரது கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளது. இவரது கருத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டக் களத்துக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளா, தமிழகம் இடையேயான உறவுகளை சீர்குலைக்கும் இவரது நடவடிக்கையை குடியரசுத் தலைவர் அனுமதிக்கக் கூடாது. அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக பேசியுள்ள ஆளுநர் முகம்மது ஆரிப்கானை திரும்பப்பெற குடியரசு தலைவர் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வரும் 21-ம் தேதி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

மத்திய அரசு நேற்று (பிப்.18) முதல் அணைப் பாதுகாப்பு மசோதா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே, மசோதா குறித்து பாராளுமன்றத்தில் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அணைப் பாதுகாப்பு மசோதா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அதற்கு குடியரசு தலைவர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் வந்திருக்கிற செய்தி கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானதாக உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் உள்ள பல்வேறு நதிநீர் ஆணையங்களைவிட தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனிச்சிறப்பு பெற்றது காவிரி மேலாண்மை ஆணையம் ஆகும். மற்ற ஆணையங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி ஆணையம் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் தன் நேரடி கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. தற்போது ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுகிறது.

இந்நிலையில் அணைகள் பாதுகாப்பு மசோதா என்கிற பெயரில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் பறிக்கப்படுமா? ஆணையம் அணைப் பாதுகாப்பு அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படுமா? என்பது குறித்து, தமிழக முதல்வர் தெளிவான விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும்” என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

x