ஆப்கனின் விடுதலை நாளும், வரலாற்று விநோதங்களும்!


ஆப்கனிலிருந்து வெளியேறி தாயகம் திரும்பும் வீரர்களை வரவேற்கும் ரஷ்யர்கள்

1919, ஆகஸ்ட் 19 அன்று ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஆப்கானிஸ்தான் தேசத்துக்கு, நிஜமான விடுதலை நாள் அதன் பிறகு சுமார் 70 ஆண்டுகள் கழித்து வாய்த்தது. நீண்ட போர், லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் உயிரிழந்தது என, 1989ஆம் ஆண்டின் பின்னணியில் ஆப்கானிஸ்தானின் விடுதலை நாள் சிறப்பு பெறுகிறது.

சோவியத் ரஷ்யாவின் ஆளுகையில் சிக்கிய ஆப்கானியர்கள், அதிலிருந்து விடுபட ரஷ்யாவுக்கு எதிராக போரிட ஆரம்பித்தனர். ஆப்கானியர்களின் தன்னெழுச்சியான இந்த போராட்டத்தை முன்வைத்து ஏராளமான போராளிகள் உதயமானார்கள். தற்போது ஆப்கானை ஆண்டுகொண்டிருக்கும் தாலிபன் இயக்கத்துக்கான விதையும் இந்த ரஷ்யாவுக்கு எதிரான போரில்தான் முளைத்தது.

சுமார் பத்தாண்டுகளாக சோவியத் ரஷ்ய படைகளுக்கு எதிராக தொடர்ந்த ஆப்கானியர்களின் போரால் சுமார் 20 லட்சம் ஆப்கானியர்கள் உயிரிழந்தனர். இறுதியாக 1989ஆம் ஆண்டு பிப்.15 அன்று சோவியத் ரஷ்யா பின்வாங்கியதில் போர் முடிவுக்கு வந்தது. அதனால்தான் பிரிட்டனிடமிருந்து காலனியாதிக்க ஆப்கன் சுதந்திரம் பெற்ற தினத்தைவிட இந்த விடுதலை நாள் ஆப்கனில் சிறப்பு பெற்றது.

வெளியேறும் ரஷ்ய துருப்புக்களுக்கு விடைதரும் ஆப்கன் குழந்தைகள்

சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான ஆப்கானியர்களின் போரால் ஏராள விநோதங்கள் அரங்கேறின. அந்த வகையில் அப்போதும் அதன் பின்னருமான ஆப்கன் தேசத்தின் ரத்த வரலாறு உருவானது. பனிப்போர் உச்சத்திலிருந்த அக்காலத்தில், ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமாக களமாடிய அமெரிக்கா, ஏராளமான ஆயுதங்களை ஆப்கன் போராளிக் குழுக்களுக்கு வழங்கியது.

அதாவது தாலிபன்களை உருவாக்கிய அந்தப் போரில், அவர்களுக்கு ஆகமுடிந்த அத்தனை உதவிகளையும் அமெரிக்கா செய்தது. போர் முடிந்ததும் தங்கள் வசமிருந்த ஆயுதங்களை என்ன செய்வது என்று யோசனையே தாலிபன் அமைப்பை ஆயுததாரியாக உருவாக்கியது. இதே தாலிபன்கள் பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக சுமார் 20 ஆண்டுகாலம் போரிட்டதும் வரலாற்றில் சேர்ந்தது.

இன்னொரு விநோதம் ரஷ்யாவை சார்ந்து அமைந்தது. அமெரிக்க பின்னணியிலான ஆப்கன் போர், ஆப்கன் போராளிகள் தீரம் ஆகிய காரணங்களைவிட, சோவியத் கூட்டமைப்பு சிதறத் தொடங்கியதே ஆப்கனிலிருந்து ரஷ்யா வெளியேறக் காரணமானது. அன்றைய ஆப்கன் வீரர்களுடன் தோள் சேர்ந்திருந்த அமெரிக்கா, பின்னர் பிரதான எதிரியானதும், எதிரியாக இருந்த ரஷ்யா இன்று ஆப்கனின் ஆருயிர் தோழனாக மாறியிருப்பது வரலாற்றின் விநோதங்களில் சேரும். கூடுதல் விநோதமாக அன்று ஆப்கனை ஆக்கிரமித்திருந்த ரஷ்யா, தனது வரலாற்றிலிருந்து பாடம் கற்காது, இன்று உக்ரைனை ஆக்கிரமிக்க தீவிரமாக உள்ளது.

ஆப்கனுக்கு ஆதரவாக அமெரிக்காவில் தற்போதைய ஆர்ப்பாட்டம்

ஆப்கனிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த மக்கள், தங்கள் தாய்நாட்டுக்கு இரண்டாவது விடுதலை நாள் வேண்டும் என்று, பிப்.13 அன்று அமெரிக்காவின் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பால் இயக்கப்படும் தாலிபன்களிடமிருந்து ஆப்கனை விடுபடுவதே தங்கள் தாய்நாட்டின் இரண்டாவது விடுதலை நாளாக அமையும் என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

வல்லரசு தேசங்களான ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக வீரத்துடன் போரிட்ட ஆப்கன் போராளிகள் இன்று, நாட்டை ஆளவதற்கான நிர்வாகத் திறனற்றவர்களாக ஆப்கன் மக்கள் முன்பாக தலைகுனிருந்தப்பதையும் இந்த விநோதங்களின் வரிசையில் சேர்க்கலாம்.

x