நீலகிரி அருகே ஒற்றை யானை தாக்கி பழங்குடியின முதியவர் உயிரிழப்பு: அச்சத்தில் பந்தலூர் மக்கள்


யானை தாக்கி உயிரிழந்த சென்னான்.

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நேற்றிரவு (திங்கள்கிழமை) ஒற்றை யானை தாக்கியதில் சென்னான் என்ற பழங்குடியின முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் பந்தலூர் அருகே பென்னை 1-ம் நம்பர் பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு காட்டுநாயக்கர் இனத்தைச் சார்ந்த பழங்குடியின மக்கள் பல்வேறு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த சென்னான் (67) என்ற முதியவர் நேற்று இரவு 8.30 மணிக்கு வேலைக்குச் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பிய நிலையில் வழியில் அங்குள்ள ஒரு கடைக்கு பொருள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது அக்கிராமத்திலுள்ள செடிகளுக்கு நடுவே மறைந்திருந்த ஒற்றை யானை அவரை கடுமையாக தாக்கியது. இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பிய நிலையில் யானை அங்கிருந்து ஓடி மறைந்தது. தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சென்னானை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், சென்னான் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவரின் உடல் பந்தலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, மாறன் என்ற பழங்குடியின முதியவரை, இதே பகுதியைச் ஒட்டிய காரமூலா என்ற இடத்தில், யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தப் பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றை யானை இங்குள்ள பழங்குடி மக்களை தொடர்சியாக தாக்கி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த யானை இன்னமும் அதே பகுதியில் நின்றிருப்பதால் வனச்சரகர் ரவி தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒற்றை யானை அதே பகுதியில் சுற்றி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

x