திருமழபாடியில் பள்ளி வாகனம் மீது மினி லாரி மோதி விபத்து: 15 குழந்தைகள் காயம்


அரியலூர்: திருமழபாடியில் பள்ளி வாகனம் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 15 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் தனியார் (பிரைமரி ) பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் வந்து செல்லும் வகையில் பேருந்து, வேன் உள்ளிட்டவை பள்ளி நிர்வாகம் சார்பில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜூன் 18) காலை திருமானூர் மஞ்சமேடு, காரைப்பாக்கம், அன்னிமங்கலம், பாளையபாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் (வேன்) பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருமழபாடியில் எதிரே வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் 15 குழந்தைகள் லேசான காயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்த குழந்தைகள் அனைவரும் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் மற்றும் திருமானூர் போலீஸார் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளை பார்வையிட்டனர். சம்பவம் குறித்து திருமானூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.