விளைவித்த விவசாயிக்கு 5 ரூபாய்; விற்கிற வியாபாரிக்கு 10 ரூபாய்!


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் 140 வரையில் விற்பனையானது. தொடர்மழை காரணமாக தக்காளிச் செடிகள் எல்லாம் அழுகிப் போனதாலும், வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் அப்படி விலை உயர்ந்ததாக கூறப்பட்டது.

இதனால் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தார்கள். கடந்த ஜனவரி மாதம் இறுதிவரையில் கூட தக்காளி விலை ரூ.40-க்குக் குறையவில்லை என்பதால், எப்படியும் இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பினார்கள்.

ஆனால், பிப்ரவரி தொடக்கத்தில் தென்மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தக்காளி அறுவடைக்கு வந்ததால், சந்தைகளில் மலைபோல தக்காளி குவிந்தது. வரத்து அதிகம், ஆனால் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் குறைவு என்பதால், விலை குறையத் தொடங்கியது. தற்போது, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அய்யலூர் சந்தைகளில் தக்காளி விலை மிக மிக மோசமாக சரிந்துவிட்டது.

கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ தக்காளி வெறும் 5 ரூபாய்க்குத்தான் போகிறது. அதாவது, 14 கிலோ கொண்ட பெட்டி 70 முதல் 90 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது. “நிலத்தை உழுது, தக்காளி நாற்றுப் பாவி, பாத்தி வெட்டி நடவு செய்து, தண்ணீர் பாய்ச்சி, மாதக்கணக்கில் பராமரித்து, களை வெட்டி, மருந்து அடித்து, பழங்களை அறுவடை செய்து, எல்லா வேலைகளுக்கும் கூலி கொடுத்து, வாகனங்களில் ஏற்றி சந்தைக்கு கொண்டுவரும் விவசாயிக்கு கிலோவுக்கு 5 ரூபாய்தான் கிடைக்கிறது.

அதேநேரத்தில், அந்த தக்காளியை விற்கிற வியாபாரிகளுக்கோ இருந்த இடத்திலேயே 10 ரூபாய் லாபம் கிடைத்துவிடுகிறது. கிலோ 15 ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள் அவர்கள். இதனால், சில விவசாயிகள் உள்ளூரில் தக்காளியை மொத்தமாக வாங்கி குட்டியானை எனும் வாகனத்தில் ஏற்றி ஊர் ஊராகப் போய், 3 கிலோ தக்காளி 50 ரூபாய், 6 கிலோ தக்காளி 100 ரூபாய் என்று விற்பனை செய்கிறார்கள். டீசல் செலவு போக இதில் பெரிய லாபம் எல்லாம் இல்லை என்றாலும், வெறும் 5 ரூபாய்க்கு விற்பதற்கு இது எவ்வளவோ மேல்” என்கிறார்கள் விவசாயிகள்.

x