இசைவலம்: லதா மங்கேஷ்கர் எனும் சகாப்தம்!


இசைப் பெருவாழ்வு வாழ்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கருக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது. அதிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூலமாக அந்தத் தொடர்பு பலமாகியது. சிவாஜி கணேசனை தன்னுடைய அண்ணனாகவே மதித்தவர் லதா மங்கேஷ்கர். சிவாஜியும் தன்னுடைய உடன்பிறவாத் தங்கையாகவே லதா மங்கேஷ்கரை மதித்தார்.

ஹோட்டல்களில் தங்குவதற்கு லதா எப்போதுமே விரும்பமாட்டார் என்பதற்காக, அவர் சென்னைக்கு வந்தால் தங்குவதற்கு இரண்டே ஆண்டுகளில் லதாவுக்காக தன்னுடைய அன்னை இல்லம் வளாகத்துக்குள்ளேயே ஒரு சிறிய பங்களாவைக் கட்டிமுடித்தார் சிவாஜி. பின்னணிப் பாடல்களைப் பாடுவதற்காகச் சென்னைக்கு வரும்போதெல்லாம், அந்த பங்களாவில் தங்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் லதா. பாசமலருக்கு உதாரணமாக விளங்கியவர்கள் சிவாஜியும் லதாவும்!

1950-களிலேயே இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட ‘ஆண் முரட்டு அடியாள்’, ‘வனரதம்’ போன்ற திரைப்படங்களில் லதா மங்கேஷ்கரின் குரல் ஒலித்திருக்கிறது. ஆனாலும் லதாவின் குரல் இனிமையை தமிழ் மட்டுமே அறிந்த செவிகள் கண்டுகொண்டது, இளையராஜாவின் இசையில் பிரபு நாயகனாக நடித்த ‘ஆனந்த்’ திரைப்படத்தில் லதா பாடிய ‘ஆராரோ ஆராரோ’ எனும் காதல் தாலாட்டைக் கேட்ட பிறகுதான். இந்த வரிசையில் ‘என் ஜீவன் பாடுது’ திரைப்படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்து லதா பாடிய, ‘எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்’ அதிமுக்கியமானது. “என்னுடைய இசையில் உருவான எத்தனையோ பாடல்களைக் கேட்டபோதும் அடையாத பரவசத்தை நெகிழ்ச்சியை இந்தப் பாடலைக் கேட்கும்போது என்னுடைய மனைவியிடம் நான் கண்டேன். அதற்கு அந்தப் பாடலின் ஜீவனை அதி அற்புதமாக தன்னுடைய குரலில் கொண்டுவந்து பாடிய லதாஜியின் அபரிமிதமான திறமைதான் முக்கியக் காரணம்” என்று கூறியிருக்கிறார் இளையராஜா. அப்படிப்பட்ட பாடலைக் கேட்கும்போது எங்கிருந்தோ லதாவின் கீதம் நம்மை அழைக்கிறது. ஆசுவாசப்படுத்துகிறது. அமைதிப்படுத்துகிறது.

இதம் தரும் கீதம் கேட்க: https://youtu.be/kT9GDDMOHSQ

எல்லாருக்குமான குரல்!

இந்திய மொழிகள், அயல் நாட்டு மொழிகள் உள்ளிட்ட 36 மொழிகளில் லதா மங்கேஷ்கரின் குரலை உலகின் பல நிலப்பரப்புகளில் வாழ்ந்த மக்களும் துய்த்திருக்கின்றனர். காலங்களைக் கடந்து காற்றில் கலந்திருக்கும் அவரின் குரலில் ஒலித்த பாடல்களிலிருந்து சில பாடல்களை இங்கே நினைவுகூரலாம். 1949-ல் வெளியான 'பர்ஸாத்' படத்தின் 'ஹவா மே உட்த்தா ஜாயே', 1960-ல் வெளியான ‘தில் அப்னா அவுர் ப்ரீத் பராயி' படத்தின் ‘அஜீப் தஸ்தன் ஹை யே', அதே ஆண்டில் வெளியான ‘மொகல் ஏ ஆஸம்' படத்தின் ‘ப்யார் கியா தோ டர்னா க்யா', 1964-ல் வெளியான ‘வோ கவுன் தீ' படத்தின் `லக் ஜா கலே', 1972-ல் வெளியான ‘ஷோர்' படத்தின் ‘ஏக் ப்யார் கா நக்மா ஹை', 1981-ல் வெளியான ‘சில்சிலா' படத்திலிருந்து `தேகா ஏக் க்வாப்', 1993-ல் வெளியான ‘ருடாலி' படத்திலிருந்து ‘தில் ஹும் ஹும் கரே', 2006-ல் வெளியான ‘ரங் தே பஸந்தி' படத்திலிருந்து ‘லுக்கா சுப்பி' போன்ற எண்ணற்ற பாடல்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக் குழுக்களை நடத்திவருபவர்களின் விருப்பத் தேர்வாக இருந்திருக்கின்றன.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ‘மொகல் ஏ ஆஸம்' திரைப்படம் கிளாஸிக் ரகம். அதில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலும் அப்படிப்பட்டதுதான். பொதுவாக பின்னணிப் பாடகர்களுக்கு அவர்கள் பெரும்பாலும் யாருக்கு பின்னணிப் பாடியிருக்கிறார்களோ அவர்களின் பெயரை பின்னொட்டி புகழ்வார்கள். ஆனால் லதா மங்கேஷ்கரின் குரல் எல்லாருக்குமான குரலாக ஒலித்திருக்கின்றது. அந்தக் குரலுக்கேற்ற பாவனையை தன் முகத்திலும் நடிப்பிலும் கொண்டுவருவதற்கு நடிகைகளே பெரிதும் முயன்றிருக்கின்றனர். அந்த முயற்சியில் ‘மொகல் ஏ ஆஸம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் மதுபாலா சற்றே நெருங்கிவருகிறார் என்பது இசை அறிஞர்களின் கணிப்பு. அந்தக் கணிப்பை இந்தக் காணொலியின் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.

அழகும் இனிமையும் சங்கமிக்கும் பாடல்: https://www.youtube.com/watch?v=FzVG01dDTCA

இசைப் பாடமான லதாஜி!

இசையைத் தங்களின் பொழுதுபோக்குக்காக, பணிக்காக பலரும் கற்றுக் கொள்கின்றனர். அதில் தங்களின் இலக்கையும் அடைகின்றனர். ஆனால் இசையாகவே இசைக்கென்றே தங்களின் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்டவர்தான் லதா மங்கேஷ்கர். அவரின் மறைவையொட்டி பல பிரபலங்களும் தங்களின் அஞ்சலியை தெரிவிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், இசை ஆளுமையான லதா மங்கேஷ்கருடன் பயணித்த நெகிழ்ச்சியான தருணங்களை அவருக்கான அஞ்சலி காணொலியில் பதிவு செய்திருக்கிறார்.

“எத்தனை புகழ் அடைந்தாலும் எவ்வளவு திறமைகளைக் கொண்டிருந்தாலும் ஒரு மேடை நிகழ்ச்சிக்குப் பாட வேண்டும் என்றால், அவர் எப்படிப்பட்ட முன் தயாரிப்புகளை செய்துகொள்வார் என்பதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த முன் தயாரிப்புகளை நானும் கடைபிடிக்க ஆரம்பித்தேன். ‘நௌஷாத் 11 நாட்களுக்கு ரிகர்சல் வரச்சொல்வார். அதன் பிறகுதான் பாடல் பதிவு செய்வார். அதுவரை பயிற்சிதான்’ என்றார் ஒருமுறை லதாஜி. பழைய பாடல்கள் இன்றைக்கும் புடம்போட்டதுபோல் இருப்பதற்கு இந்தப் பயிற்சியே அடிப்படை என்பது புரிந்தது. இன்றைய இளைய தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு அவருடைய வாழ்க்கை ஒரு பாடம்தான். அவரின் பாடல்களைத் தொடர்ந்து கேட்பதும். அதில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நுட்பமான சங்கதிகளை, இசை நுணுக்கங்களை கவனிப்பதிலிருந்தே இளைஞர்களுக்கு நிறைய விஷயங்கள் புரியும்” என நெகிழ்ச்சியான தன்னுடைய அஞ்சலியில் குறிப்பிட்டிருக்கிறார் ரஹ்மான்.

லதா மங்கேஷ்கரின் ஆலாபனை ஸ்வரப் பிரஸ்தாரங்களோடு நிறைவடையும் ‘ரங் தே பஸந்தி’ படத்தின் ‘லுக்கா சுப்பி’ பாடலை அந்த மேதையோடு இணைந்து பாடிய தருணங்களைப் பற்றியும் ரஹ்மான் இந்தக் காணொலியில் பதிவிட்டுள்ளார்.

தலைமுறை தாண்டிய இசை மேதைகளின் பெருமை அறிய: https://www.youtube.com/watch?v=cen1jIhR_k0

x