மேகேதாட்டு அணைக்கு மத்திய அரசின் சமரசம் தேவையில்லை! -பி.ஆர்.பாண்டியன் காட்டம்


பி.ஆர்.பாண்டியன்

‘சட்டப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தில் மட்டும்தான் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முறையிட முடியும் என்பதால், காவிரி மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் சமரசம் தேவையில்லை’ என்று மத்திய அரசுக்கு பிஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

“காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் 50 ஆண்டுகளுக்கும் மேலான தீவிரப் போராட்டத்தின் விளைவாக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2018-ல் மத்திய அரசு சட்டவிரோதமாக மேகேதாட்டு அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயார்செய்ய அனுமதி கொடுத்ததைப் பயன்படுத்தி, கர்நாடகா வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்து, அதை உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக மத்திய நீர்வளத் துறை ஆணையத்திடம் வழங்கியுள்ளது. அதைக் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவைத்து, ஒத்த கருத்தை உருவாக்குவதாகக் கூறி மத்திய அரசு தொடர்ந்து ஆணையத்தை நிர்பந்தித்து வருகிறது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கர்நாடக உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர், “தமிழகம், கர்நாடகம் இடையே ஒத்த கருத்து உருவாகும்பட்சத்தில் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும்” என்று அறிவித்தது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மத்திய அரசு ஒரு பார்வையாளராக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் குறித்தான 4 மாநிலங்களின் நிர்வாக அதிகாரம் முழுமையும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசினுடைய கருத்து, ஆணையத்தை அச்சுறுத்தும் வகையிலும் தமிழகத்துக்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஒருதலைப்பட்சமான சதி செயலாகும்.

மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கை தயார்செய்ய கொடுத்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும். ஆணையத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மட்டும்தான் கருத்து பரிமாறிக் கொள்ள முடியும். மத்திய அரசு பார்வையாளராக மட்டுமே பங்கேற்க இயலும். இதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சரின் 'தமிழகம் கர்நாடகம் இடையே ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும்' என்கிற கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அது எதிர்காலத்தில் அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்கு தமிழக அரசு உடனடியாக உரிய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து மேகேதாட்டு அணைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. அதை துரிதப்படுத்த சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

x