‘காதலுக்கு இல்லை எல்லை’: காதலர் தினத்தில் கரம்பிடிக்கும் திருநங்கை திருநம்பி ஜோடி


ஜோடி சேரும் திருநம்பி மனு கார்த்திகா, திருநங்கை சியாமா பிரபா

திருநங்கை சியாமா பிரபாவுக்கும், திருநம்பி மனு கார்த்திகாவுக்கும் காதலர் தினத்தன்று, வரும் பிப்.14-ம் தேதி திருமணம் நடக்கிறது. காதலித்து கைப்பிடிக்கும் இந்த ஜோடி திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்தோடே தங்களது திருமணத்தைப் பதிவுசெய்யவும் முயற்சித்து வருகின்றனர்.

கேரளத்தின் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட திருநம்பி மனு கார்த்திகா(31), திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனித வள அதிகாரியாக உள்ளார். சியாமா பிரபா(31), கேரள அரசின் சமூகநலத் துறையின்கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக உள்ளார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம், மூன்றாம் பாலினத்தவர்களின் திருமணப் பதிவிலும் புதிய வரலாற்றை உருவாக்கும் முனைப்பில் உள்ளனர்.

திருநம்பி மனு கார்த்திகா இதுகுறித்து கூறும்போது, “எங்கள் காதல் சினிமாவில் வருவதுபோல் கண்டதும் காதல் இல்லை. அதற்குள் ஒரு ஆத்மார்த்தமான ஈர்ப்பு உண்டு. சியாமா மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். அவருக்கு மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் தன்மையும் அதிகம். அதுதான் அவர்மேல் எனக்குக் காதலை உருவாக்கியது.

சியாமா, வீட்டில் மூத்த பெண். அவள் திருநங்கையாக மாறியிருந்தாலும் தன் குடும்பத்தை அர்ப்பணிப்போடு கவனித்துக் கொண்டாள். எந்தக் கடமையில் இருந்தும் சியாமா பின்வாங்கவே இல்லை. நானும் என் வீட்டில் மூத்தவன். சியாமாவின் இந்த குணநலன்களைப் பார்த்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்பே என் காதலைச் சொல்லிவிட்டேன். சியாமா ஓராண்டுக்கு முன்புதான் சம்மதித்தார்.

சியாமா இப்போது முனைவர் படிப்புக்கும் விண்ணப்பித்துள்ளார். வழக்கமாக திருமணங்களைப் பதிவு செய்யும்போது ஆண், பெண் என்னும் அடையாளத்துடன் பதிவுசெய்வது வழக்கம். நாங்கள் எங்கள் திருமணத்தை இரு மூன்றாம் பாலினத்தவருக்கு இடையேயான திருமணம் எனப் பதிவுசெய்ய உள்ளோம். அப்படிப் பதிவு செய்வதில் நாங்கள் வென்றுவிட்டால், இந்தியாவிலேயே முதன்முதலில் அப்படி பதிவு செய்யப்பட்ட திருமணம் இதுதான்.

திருநங்கைகள் உரிமைகள் மசோதா 2014 மற்றும் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019 ஆகியவை இப்படிச் செய்வதற்கான உரிமையை வழங்குகிறது. இந்த அடையாளத்தோடே திருமணத்தைப் பதிவு செய்துவிட்டால், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை திருமண பந்தத்திலும் துணிச்சலுடன் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளும் சூழல் உருவாகும்.

நான் திருநம்பி எனத் தெரிந்ததும் என் அம்மா என்னை அரவணைத்தார். என் அக்கா கார்த்திகா என்னை சகோதரன் என சொல்லத் தொடங்கினாள். அதே அன்பை நான் சியாமாவிடம் பார்த்தேன். அதுதான் என்னைக் காதலில் வீழ்த்தியது. இருவீட்டார் சம்மதத்துடனே திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தோம். இப்போது அதில் வெற்றிபெற்றிருக்கிறோம்’’ என்றார்.

x