இசைவலம்: கவிதைக்குப் பொய் அழகில்லை!


கடந்த ஆண்டில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்ட மேடையில், அமெரிக்கவாழ் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த கவிஞர் அமெண்டா கவிதை படித்த நிகழ்வு, பலரின் புருவத்தையும் உயர்த்தியது. பைடன் அதிபராக பதவியேற்று ஓராண்டு முடிந்திருக்கும் நிலையில், அமெண்டாவின் அந்தக் கவிதைக்கு ஏற்ற இசையை பியானோவில் வழங்கியிருக்கிறார் ஜோரிஸ் வூர்ன். தன்னுடைய கவிதையில் அமெண்டா, மலைக்கு அமெரிக்காவை (Metaphor) உருவகமாக்கியிருப்பார். மலை என்றாலே ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்தானே! அதற்கேற்றபடி இசையும் உணர்வுபூர்வமாக அவரது கவித்துவ வார்த்தைகளோடு பயணிக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் வாசிக்கப்பட்ட அந்தக் கவிதைக்கு இசையமைத்திருக்கும் ஜோரிஸ் வூர்ன், இதை அமெண்டாவுக்கும், கறுப்பின மக்களுக்கும், உலகில் வாழும் அனைவருக்கும் அர்ப்பணித்திருக்கிறார்.

அமெண்டாவின் அமெரிக்காவைப் பற்றிய கவிதைச் சித்திரத்தில், ‘கவிதைக்குப் பொய் அழகு' எனும் பாசாங்கு இல்லை. அமெரிக்காவில் வாழும் மக்களிடையேயும் படிந்திருக்கும் இன வெறுப்பு, ஆளும்வர்க்கத்தின் பிடிவாதம் போன்றவற்றை அமெண்டா கவிதையில் விவரிக்கும் உண்மைகள் முகத்தில் அறைகின்றன. அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மலேயேறும் ஒரு சாகசத்தைப் போன்றுதான், அமெரிக்காவை அமெண்டா தன்னுடைய கவிதையில் சித்தரித்திருக்கிறார். மலையேறும் சாகசப் பயணத்தில்தான் மக்கள் இருக்கிறார்களே தவிர, இலக்கை அடைந்துவிடவில்லை. இன்னும் முன்னேறுவதற்கான தூரம் அதிகம் இருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

அமெரிக்க வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பதிவாகியிருக்கும் இனவெறி கறைகளை சறுக்கல்கள் எனும் பதத்தில் தன்னுடைய கவிதையில் உணர்த்துகிறார் அமெண்டா. அப்படியொரு சறுக்கலிலிருந்து நாம் மீண்டிருக்கிறோம் என்பதை, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றைக் கூறுவதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பைடனுடைய பதவியேற்பின்போது வாசிக்கப்பட்ட கவிதை இது என்பதால், ஓர் இனவெறி அரசின் ஆளுமையில் இருந்து மீண்டுவிட்டோம் என்பதை, அதற்கு முந்தைய டிரம்பின் ஆளுமை என்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதிபர் பதவியேற்பின்போது கவிதை படிக்க வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக, பைடனை இந்திரனே... சந்திரனே என்றெல்லாம் அமெண்டா புகழவில்லை. நாட்டில் எல்லாருக்குமான சம வாய்ப்பு, சமூக நீதி, இனம், மொழி, நிறம், கலாச்சாரத்தால் வேறுபட்டிருப்பவர்களையும் சகிப்புத் தன்மையோடு ஆட்சியாளர்கள் நடத்த வேண்டியதன் அவசியத்தை நோக்கி இந்தப் பயணம் இருக்க வேண்டும் என்கிறார்.

எல்லாருக்குமான சமூக நீதி இங்கே உறுதிசெய்யப்பட்டால்தான், அடுத்துவரும் தலைமுறைக்கு நடுநிலைமையான அமெரிக்காவை நாம் விட்டுச்செல்ல முடியும். ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக, ஒரு கறுப்பினப் பெண் கவியாக அதிபராகும் கனவுக்கு அச்சாரமாக, முதல் அடியாக இன்றைக்கு என்னால் கவிதை பாடமுடிந்திருக்கிறது. இலக்கை அடைவதற்கான தூரம் அதிகம்தான். ஆனாலும் தொடர்ந்து பயணிப்போம் எனும் நம்பிக்கை வெளிச்சம் அமெண்டா கவிதையின் கருப்பொருளாக நம்மை வசீகரிக்கிறது.

அமெண்டாவின் கவிதையை இசையுடன் கேட்க: https://www.youtube.com/watch?v=WhuL5vHnVhQ

அன்பாலே ஒரு பாடல்!

‘தெய்வப்பிறவி' படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயண கவியின் ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்’ பாடலை சி.எஸ்.ஜெயராமன் மந்திர ஸ்தாயியில் பாட, அதற்கு இணையாக எஸ்.ஜானகியின் ஆலாபனையும் ஹம்மிங்கும் கேட்பவர்களை அப்படியே `ஜிவ்'வென்று மானசீகமாகப் பறக்க வைத்துவிடும். அந்த ‘ஜிலீர்' அனுபவத்தை இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் அடைந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், இன்றைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களின் பிரதிநியாக அந்தப் பாடலைக் கேட்டதோடு அதைத் தன்னுடைய ரசிகானுபவத்தையும் சேர்த்து அனுபவித்துப் பாடி காணொலியாக வெளியிட்டுள்ளார் கீர்த்தனா வைத்தியநாதன். “இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போது ஏற்படும் பரவசம் பாடும்போதும் எனக்கு ஏற்படும். அந்த அனுபவப் பகிர்வுதான் இந்தக் காணொலி” என்கிறார் கீர்த்தனா. கீர்த்தனாவின் குரலோடு இணைந்து பயணப்படும் அக்ஷய் யசோதரனின் கிதாரின் தந்திகளும் பாடல் தரும் இன்பத்தை நம்முள் மீட்டுகின்றன!

ஒரு பழைய திரைப்படப் பாடல், இளம் தலைமுறையைச் சேர்ந்த கர்னாடக இசைப் பாடகியால் புத்தாக்கம் பெற்றிருப்பது சிறப்பு. உருவாக்கமும் கவனம் ஈர்க்கிறது. கீர்த்தனா மற்றும் பல கலைஞர்களின் உழைப்பும் மெனக்கெடலும் பாடலை உயிர்ப்போடு கொண்டுசேர்த்திருக்கிறது.

அந்த மெய்சிலிர்க்கும் அனுபவத்துக்கு நீங்களும் தயாராகுங்கள்:

https://www.youtube.com/watch?v=WA_KTistyPo

அக்கரை சகோதரிகளின் அக்கறை!

நாகர்கோவிலிலிருக்கும் அக்கரை எனும் சிற்றூரில் பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள், இசை உலகத்தில் ‘அக்கரை சகோதரிகள்’ என அழைக்கப்படும் அக்கரை சுப்புலஷ்மி, அக்கரை சொர்ணலதா. பிரபல வயலின் வித்வானான இவர்களின் தந்தை சுவாமிநாதனே இவர்களுக்கு வயலின் இசைப்பதற்கு குருவாக இருந்து கற்றுக் கொடுத்தார். மிகவும் சிறிய வயதிலேயே வாய்ப்பாட்டு, பக்கவாத்தியம் வாசிப்பது என்று கர்னாடக இசை மேடைகளில் ஜொலித்தவர்கள் இவர்கள். அண்மையில் கன்னியாகுமரியின் விவேகானந்தர் பாறை, அய்யன் திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து வயலின் வாத்தியத்தில் ஓர் இசை வேள்வியை `சிந்து பாரதம்' எனும் தலைப்பில் வாசித்து, அதை 73-வது குடியரசு தினத்தை ஒட்டி நாட்டு மக்களின் செவிகளுக்கு அர்ப்பணித்துள்ளனர்.

ஆல்பத்தின் பெயரில் ‘சிந்து' இருப்பதாலோ என்னவோ, சிந்துபைரவி ராகத்தையே முதன்மையாக எடுத்துக்கொண்டு ஒரு முழு கச்சேரியைக் கேட்ட அனுபவத்தை சகோதரிகளின் இந்த ஆல்பம் நமக்குத் தருகிறது. சுவாதி திருநாளின் ‘விஸ்வேஸ்வர் தர்ஷன் கர்', சுப்பிரமணிய பாரதியின் ‘நெஞ்சுக்கு நீதியும்', புரந்தரதாசரின் ‘தம்பூரி மித்தித்வா', அன்னமாச்சார்யாவின் ‘ஆதி தேவ பரமாத்மா', ஆனை வைத்தியநாதய்யரின் ‘சந்திரசேகர இஷா', லால்குடி ஜெயராமனின் தில்லானா, முத்தாய்ப்பாக பண்டிட் பீம்சென் ஜோஷி பாடிய ‘மிலே சுர் மேரா துமாரா' என மிக மிக கவனமாக ஒவ்வொரு முத்தையும் எடுத்து சிந்துபைரவி என்னும் சரடில் கோத்து, முத்து மாலையாக நம் சுதந்திர அன்னைக்கு மரியாதை செய்திருக்கின்றனர் அக்கரை சகோதரிகள்.

அவர்களின் அக்கறைக்கு ஒரு ராயல் சல்யூட்!

https://www.youtube.com/watch?v=5CUpIYpJys4

x