சிறகை விரி உலகை அறி-36: கடல் சொல்லும் காவியம்


போரஸ் தீவு மணிக்கூண்டு

ஐரோப்பிய கோடைக்காலம். மாலை 9 மணி. கையொன்று எடுத்து கண் மறைத்து சிரிக்கும் பெண்ணாக மேகத்தினுள் ஒளிர்ந்த சூரியன், வான சாலையில் வண்ணக் குழந்தைகளை அனுப்பிவிட்டு மெல்ல மறைந்தது. குழந்தைகள் அந்தியின் முந்தி இழுத்து முத்துப் பரல்களில் நடந்தார்கள். கைகளைக் கோர்த்து களித்தார்கள், பிரிந்தார்கள், ஓடிவந்தணைத்தார்கள். தம்முலகில் தங்கள் இயல்போடு களித்தவர்கள் நிலவு வரும் நேரமானதால் வண்ணங்களைக் களைந்துவிட்டு கலைந்தார்கள்.

பின்தொடரும் பறவைகள்

இரவு 10.30 மணி. மெல்லிருள் பூசிய வானில் விண்கண்கள் சிமிட்டின. விதவிதமான பறவைகள் எழுப்பிய ‘கீச்... கீச்’ ‘கிடுகிடுகிடு…’, ‘கிட் கிட்’, ‘கிடுகிடு... கிடுகிடுகிடு’, ‘ச்..ச்சு..ச்..ச்சு’ ஒலிகள் நட்பு, காதல், ஊடல், கூடல், பிரிவு, போராட்டம் நிறைந்த பேச்சொலிகளாகக் கிறங்கடித்தன. இயற்கை பந்தியில் மனம் மகிழ்ந்தது. ஒரு யூரோவுக்கு வாங்கிய செர்ரி பழங்களால் இரவில் வயிறு நிறைந்தது. அறைக்குத் திரும்பினேன்.

கோடைக்கால பகல் நேரம் அதிகமென்பதால், மூன்று நாட்களுக்காகத் திட்டமிட்ட இடங்களை இரண்டே நாட்களில் பார்த்துவிட்டேன். கூடுதலாகக் கிடைத்த ஒருநாளைப் பயன்படுத்த கூகுளில் தேடினேன். மூன்று தீவுகளைப் பார்க்க கப்பல் பயணத்துக்கு முன்பதிவு செய்தேன். குளித்து, ஆடைகளைத் துவைத்து, இமைக்குள் இருளைக் குடியேற்றி உறங்கினேன். இமை வருடிய ஒளியால் காலையில் கண் விழித்தேன். படகுத்துறைக்குக் கிளம்பினேன்.

பல்வேறு மொழிபேசும் மக்களால் தனி உலகம் போன்றிருந்தது படகுத்துறை. ஏதென்ஸைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகளுக்கும் அரைநாள், ஒருநாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்களென சுற்றுலா அழைத்துச் செல்லும் கப்பல்கள் பல நங்கூரமிட்டிருந்தன. எனக்கான கப்பலில் ஏறினேன். கப்பலில் விற்கப்படும் உணவு மற்றும் ஒயின் உள்ளிட்ட மது வகைகளின் விலைப்பட்டியலில், ‘ஆண்டுகள் அதிகமானால், வெள்ளை ஒயினின் நிறம் கறுத்துப் போகிறது. அதேவேளையில், சிவப்பு ஒயின் வெளிர் நிறமாகிறது’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஹைட்ரா தீவு

ஹைட்ரா

கடலும் கப்பலும் ஆடிக்களித்த கவின் பொழுதில் இரண்டு மணி நேரம் பயணித்து ஹைட்ரா (Hydra) தீவில் இறங்கினோம். கி.பி.15-ம் நூற்றாண்டில் துருக்கியர்களின் ஆட்சியில் கடல் பயணத்துக்கான மையமாக விளங்கிய தீவு இது. இங்குதான், கிரேக்கத்தின் முதல் கடற்படை அகாடமி (The National Merchant Marine Academy) 1749-ல் கட்டப்பட்டது. திறமையான எண்ணற்ற மாலுமிகளைத் தந்த அகாடமி, முதலில் படகுகளையும், பிறகு சரக்குக் கப்பல்களையும் கட்டியது. ஆட்டமன் பேரரசருக்கு எதிரான, கிரேக்க சுதந்திரப் போரில் (1821-1829), கிரேக்கத் தீவுகளிலேயே மிகவும் பலமிக்க கடற்படைத் தளமாகவும் ஹைட்ரா திகழ்ந்தது. நீராவிக் கப்பல்களின் வருகைக்குப் பிறகு, இங்குள்ள கப்பல் தளமும் தீவும் பொலிவிழந்தன. 1956-ல், நடிகை சோபியா லொரன் (Sophia Loren) இத்தீவுக்கு வந்து Boy on a dolphin படத்தின் சில காட்சிகளை படமாக்கியதும் மீண்டும் இத்தீவு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

மாசற்ற தீவு

ஹைட்ரா துறைமுகத்தில் இறங்குபோதே கண்ணில்படுவது, வரலாற்று ஆவண அருங்காட்சியகம் (Historical Archives Museum). உள்ளே சென்று, ஓவியங்கள், படகுகளின் மாதிரிகள், வரைபடங்கள், அரிதான புத்தகங்களைப் பார்த்தோம். வெளியில் வந்து, முகப்பிலுள்ள பழமையான நங்கூரங்களுடன் படமெடுத்தோம். 18-ம் நூற்றாண்டில், துருக்கிய கடற்படையின் தாக்குதலிலிருந்து தீவைக் காக்க ஹைட்ரா வீரர்கள் பயன்படுத்திய பீரங்கிகள் ஆங்காங்கே உயரமான இடத்தில் அப்படியே இருக்கின்றன.

பயணிகளைச் சுமக்கும் கழுதைகள்

கோவேறு கழுதை நிறுத்தம்

அருகிலேயே வாகன நிறுத்தம் உள்ளது. வாகன நிறுத்தமென்றால், பேருந்து நிறுத்தம் என்று நினைக்காதீர்கள்! கோவேறு கழுதைகள் நிறுத்தம். உண்மைதான், நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தைத் தவிர, வேறு மோட்டார் வாகனங்களே இத்தீவில் இல்லை. வடகிழக்கு மற்றும் தென் மேற்காக 21 கிலோமீட்டர் நீளமுள்ள இத்தீவுக்குத் தேவையான வணிகப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், மரச் சாமான்கள் மற்றும் சுற்றுலா பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுமப்பது 1,200-க்கும் மேற்பட்ட கோவேறு கழுதைகளும், சில குதிரைகளுமே. நாங்கள் நடந்தபோது, எங்களுக்கு முன்னே ஒரு பயணியைச் சுமந்து சென்ற கோவேறு கழுதை வழியில் சாணமிட்டது. உடனே, கழுதையோட்டி சாணத்தை அள்ளி பையில் சேகரித்தார்.

சாணம் சேகரிக்கிறார்

சுற்றுலா வழிகாட்டி ஒரு வீட்டைக் காட்டினார். அது, கனடா நாட்டு பாடல் எழுத்தாளர், லியோனார்டு கோகன் (Leonard Cohen) சில காலம் தங்கியிருந்து அவருக்கு மிகவும் பிடித்தமான Bird on the Wire பாடலை எழுதிய வீடு. வழிகாட்டியின் முகம் திடீரென மாறியது. என்னவென்று கேட்டபோது, “ஹைட்ரா என்றால் தண்ணீர்; துருக்கிய வார்த்தையில் தேவதாரு மரங்களின் பூமி. ஒரு காலத்தில் மரங்களும், நீர்ச்சுனைகளுமாக நிறைந்திருந்த இப்பகுதி இன்று காய்ந்துவிட்டது. ஏறக்குறைய தரிசு பூமியாக உள்ளது. தொட்டியில் சேகரிக்கும் மழைநீரும், ஏதென்ஸிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டுவரப்படும் நீருமே இத்தீவின் தற்போதைய நீராதாரம்! அண்மையில், 2014 முதல் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயலுக்கு வந்துள்ளது!” என்றார். தற்போதே, தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாட்டின் எதிர்காலமும் என் நினைவில் வந்து அச்சமூட்டியது. காலச் சுழலில் சுழன்று குழுவினருடன் அடுத்த தீவுக்குப் புறப்பட்டேன்.

போரஸ் தீவு

போரஸ் தீவு. கதவுகளின் மாதிரிகள்

போரஸ்

கடலுக்குள் மீன் விழிபோல் பிதுங்கியுள்ள மலைநகரம் போரஸ். 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இத்தீவு, எரிமலைப் பாறைகள் உறங்கும் ஸ்பைரியா (Sphairia) மற்றும் தேவதாரு மரங்கள் தேவகானம் மீட்டும் கலாவ்ரியா (Kalavria) எனும் இரண்டு தீவுகளை உள்ளடக்கியுள்ளது. வெண்கல காலத்திலேயே இங்கே மக்கள் குடியேறியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இங்கிருந்த மக்கள் பொசைதியோன் கடவுளை, அதாவது சேயுஸ் கடவுளின் சகோதரரை வணங்கியுள்ளனர். பொசைதியோன் கடவுளுக்காக இத்தீவில் கி.மு.5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலின் தடயங்கள் எஞ்சியுள்ளன.

பொசைதியோன் கோவில்

தனித்தனி துறவு குடில்கள்

தீவுக்குள் கப்பல் நுழைந்தபோதே 1927-ல் கட்டப்பட்ட மணிக்கூண்டு, ஒவ்வொருவரின் கருவிழிகளிலும் நுழைந்து நின்றது. தீவில் இறங்கியதும் உணவகங்கள் வரவேற்றன. உணவுச் சுவையை ஓரங்கட்டிவிட்டு, படிக்கட்டுகளில் ஏறி கடைகளைப் பார்த்தோம். பாறைகளில் தாவி ஓடி, மணிக்கூண்டு அருகில் நின்று தீவின் அழகை விழிகளால் விழுங்கினோம். பாரம்பரியமிக்க வீடுகளையும் அதன் பலவண்ண ஜன்னல் கதவுகளையும் ரசித்தோம். மதிய உணவு முடித்து, நினைவுப் பரிசாகக் கதவு மாதிரிகளை வாங்கிக்கொண்டு அடுத்த இடம் புறப்பட்டோம். ஒருகாலத்தில், தேவதாரு மரங்கள் நிறைந்திருந்த மலையில், கிறித்தவ துறவிகள் தனித்தனியாக துறவு வாழ்வு வாழ்வதற்காக கட்டப்பட்ட பழமையான கற்குடில்களைப் பார்த்துக்கொண்டே சென்றோம்.

ஈஜினா

நாங்கள் மூன்றாவதாகச் சென்ற தீவு, ஈஜினா (Aegina). புராணக் கதையின்படி, ஆறுகளின் கடவுளான அசோபோஸ் (Asopus) மற்றும் அவரின் மனைவி மெட்டோப் (Metope) இருவருக்கும் பிறந்த மகள் ஈஜினா. தேவதை ஈஜினா மீது காதல் வயப்பட்ட கடவுள் சேயுஸ், இத்தீவுக்கு அவளைத் தூக்கி வந்தார். மகன் இயகஸை (Aeacus) பெற்றெடுத்தார் ஈஜினா. தன் தாயின் நினைவாக, இத்தீவுக்கு ஈஜினா என இயகஸ் பெயர் வைத்தார்.

தொடக்ககால கிரேக்கத்தில் நாணயம் அச்சடிப்பதில் ஈஜினா தீவு மிகவும் புகழ் பெற்றிருந்தது. மத்திய தரைக்கடல் பகுதிகளில் இந்த நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடற்படையிலும் ஈஜினா தீவு முக்கிய இடம் வகித்தது. கி.மு.5-ம் நூற்றாண்டில் புகழின் உச்சத்தில் விளங்கினாலும், காலப்போக்கில் இத்தீவு பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் இழந்தது. ஆனாலும், புதிதாக உருவான கிரேக்க நாட்டின் தலைநகராக இரண்டரை ஆண்டுகள் (11-1-1827 – 3-10-1829) ஈஜினா விளங்கியது குறிப்பிடத்தக்கது.

புனித அஜியஸ் நெக்டாரியஸ்

இங்குள்ள, கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் துறவுமடத்துக்கு அழைத்துச் சென்றார் வழிகாட்டி. கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையில் அதிகம் அறியப்பட்ட புனித அஜியஸ் நெக்டாரியஸ் (Agios Nektarios, 1846 - 1920) கோயில் அங்கிருந்தது. இறையியலாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் மெய்யியலாளரான அஜியஸ், ஈஜினா தீவின் பாதுகாவலராக திகழ்கிறார். தீவிலிருந்து ஏதென்ஸ் நோக்கி கப்பலில் வந்தபோது, இரண்டு பறவைகள் வெகுதூரம் எங்களைப் பின்தொடர்ந்தன. பயணிகள் எறிந்த உணவு கடலில் விழுவதற்கு முன்பாகவே பிடித்துத் தின்றன. எங்களை உற்சாகப்படுத்தின. பறவைகள் உணவுக்காக வந்தனவா, அல்லது, போகாதீர்கள்... இங்கேயே இருங்கள் என்று குழந்தைகள்போல கெஞ்சிக்கொண்டே வந்தனவா? தெரியவில்லை.

(பாதை நீளும்)

பாக்ஸ்

ஒரே நாடு ஒரே பணம்

ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல் என்றெல்லாம் சில ஆண்டுகளாக இந்தியாவில் கேட்கிறோம். அதில் நன்மைகள் நிறைந்திருப்பதாகவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி உண்டென்றும் நம்பச் சொல்கிறார்கள். இப்படித்தான் 1999, ஜனவரி 1 முதல், யூரோ எனும் பொது நாணய முறையை ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியது. இதனால் கிரேக்கத்தில் ஏற்பட்ட விளைவு என்ன என்பதை வழிகாட்டி சொன்னார். “எங்கள் நாட்டு நாணயத்தின் பெயர் திராக்மா. ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்றுக்கொண்டதால், நாங்கள் அனைவரும் யூரோ பயன்படுத்துகிறோம். இது, எங்கள் பொருளாதாரத்தை மிகவும் சிதைத்துவிட்டது. மேலும், திராக்மாவை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி சில்லறை கொடுப்பது என்பதெல்லாம் இத்தலைமுறையினருக்கு தெரியவில்லை. எதிர்காலத்தில், ஒருவேளை ஐரோப்பிய ஒன்றியம் உடைந்ததென்றால் எங்களுக்கென்று எந்த நாணயமும் இல்லாத கொடும் சூழல் உருவாகும் அபாயம் உள்ளது” என்றார்.

x