நாகம் தீண்டிய வாவா சுரேஷ் உடல்நிலை: அண்மை நிலவரம்


வாவா சுரேஷ்

நாகம் தீண்டியதால் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த வாவா சுரேஷ் உடல்நிலை குறித்த அண்மை தகவலை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

கேரளத்தின் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ். அடர் வனங்களும் அதன் சிறப்பான வன உயிரிகளும் செறிந்த சேர நாட்டில், பாம்பு ரகங்களும் ஏராளம். திருவனந்தபுரம் பகுதியில் எங்கே விஷப் பாம்பு சிக்கினாலும், வாவா சுரேஷுக்கு தகவல் செல்லும். விரைந்து வரும் சுரேஷ், பாம்புக்கு எந்த சேதமும் இன்றி பிடிப்பதுடன், அதனை அடர் வனப்பகுதியில் சேர்க்கவும் ஏற்பாடு செய்வார்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்போர் மத்தியில், விஷப்பாம்புகளிடம் கிஞ்சித்தும் அஞ்சாத வாவா சுரேஷுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். மிகப்பெரும் ராஜநாகங்கள் வரை லாவகமாக கையாளும் வாவா சுரேஷால் உயிர் பிழைத்தோரும் அங்கே அதிகம். மேலும், பல்லாயிரம் அரிய பாம்பினங்களை உயிரோடு மீட்டு வனப்பகுதியில் சேர்த்ததில், கேரளாவுக்கு அப்பாலும் வாவா சுரேஷூக்கு அபிமானிகள் அதிகரித்தனர். எந்தவொரு உபகரணமும் இன்றி அநாயசமாய் நாகங்களுடன் சாகசம் செய்யும் சுரேஷ், பல முறை விஷப்பாம்புகளின் தீண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார். அப்படியான பாம்புக்கடிக்கு அண்மையிலும் ஆளானது, அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக தற்போது மாறியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் கோட்டயம் மாவட்டம் சங்கனச்சேரி பகுதியில் குடியிருப்பில் பெரிய நாகம் புகுந்ததில் பொதுமக்கள் கடும் அச்சத்துக்கு ஆளாகினர். உடனடியாக வாவா சுரேஷுக்கு தகவல் சென்றதில் அவர் விரைந்து வந்தார். நாகத்தை பிடித்து பை ஒன்றில் சேகரிக்க முயன்றபோது எதிர்பாரா விதமாய், அவரது தொடையில் நாகம் தீண்டியது. ஆழமான விஷக்கடி விழுந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவனையிலும், தொடர்ந்து கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சுரேஷ் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 தினங்களாக அவரது உடல்நிலை குறித்து கவலையூட்டும் செய்திகள் வெளியாகி வந்தன.

கேரளாவைச் சேர்ந்த அரசியல் மற்றும் பிறதுறை பிரபலங்கள் பலரும், வாவா சுரேஷ் குணமடைய வேண்டும் என்று பொதுவெளியில் தங்கள் நம்பிக்கையை வெளியிட்டு வருகின்றனர். கேரள மக்களின் பிரார்த்தனைகள் குறித்தும் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவின்பேரில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டு, அங்கு தனி மருத்துவக்குழுவின் மேற்பார்வையில் சுரேஷின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இன்றைய தினம் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், ’கடந்த 2 தினங்களாக மோசமடைந்திருந்த வாவா சுரேஷ் உடல்நிலையில் இன்று ஓரளவு முன்னேற்றம் தென்படுவதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை பாம்புகள் தீண்டி உயிர்பிழைத்தது போலவே இம்முறையும் வாவா சுரேஷ் விரைவில் எழுந்து நடமாட வேண்டும் என கேரளா மட்டுமன்றி தமிழகத்திலிருந்தும் சமூக ஊடகங்களின் வாயிலாக மக்கள் கோரி வருகின்றனர்.

x