நடப்பாண்டில் 2,15,778 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டு தமிழக வனத்துறை சாதனை


தனுஷ்கோடியில் ஆமை குஞ்சுகள் மலர் தூவி கடலில் விடப்படுகிறது.

ராமேசுவரம்: தமிழக கடலோரத்தில் 2,58,775 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து, அவற்றிலிருந்து 2,15,778 ஆமை குஞ்சுகளை கடலில் விடப்பட்டுள்ளன.

கடல் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடல் ஆமைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன. இதன் மூலம் மீன்வளம் காக்கப்படுகிறது. ஆனால், பருவநிலை மாற்றம், கடல் மாசுபாடு, தடை செய்யப்பட்ட மீன்பிடித்தல் ஆகியவை கடல் ஆமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருகின்றன.

1076 கிலோமீட்டர் நீளமுள்ள தமிழக கடற்கரையில் ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை. ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை, லெதர்பேக் ஆமை என ஐந்து வகையான கடல் ஆமைகள் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் துவங்கி முட்டைகள் இடுவதற்காக வருகின்றன. இதில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன.

இந்த முட்டைகள், நாய், பறவைகள் மற்றும் மனிதர்களாகல் சேதமடைவதை தடுக்கும் விதமாக அவற்றை சேகரித்து வனத்துறையினர் மீனவர்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் அதற்கென அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொறிப்பகங்களில் அடைகாத்து பாதுகாக்கப்படும்.

தனுஷ்கோடியில் மீனவர் வலையில் சிக்கிய ஆமைகள் மீண்டும் கடலில் விடப்படுகிறது.

நடப்பாண்டில் தமிழக கடலோர மாவட்டங்களில் 53 ஆமை குஞ்சு பொரிப்பகங்களை வனத்துறையினர் அமைத்து 2363 குழிகளிலிருந்து 2,58,775 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இவற்றிலில் பொறிந்த 2,15,778 ஆமைக் குஞ்சுகளை கடலுக்கு அனுப்பட்டுள்ளன. இது தமிழக கடற்கரையில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையில் அதிகபட்சமாகும். கடந்த ஆண்டு 1,82,917 குஞ்சுகள் அனுப்பப்பட்டன.

கடல் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு, கடல் ஆமை முட்டையிடும் பகுதிகளுக்கு அருகில் மீனவர்களுக்கு மீன்பிடிப்பு செய்யாமல் இருக்கவும், மீன்பிடிக்கும்போது கடல் ஆமை பிடிபடும் சூழ்நிலையில் ஆமைகளை எவ்வித பாதிப்புமின்றி கடலில் மீள விடுவித்திட ஏதுவாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கடலோர பகுதிகளில் உயர்மட்ட விளக்குகளை இரவு 09.00 மணியிலிருந்து காலை 05.00 மணி வரை அணைத்து வைப்பது என கடல் ஆமை முட்டையிடும் பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வனத்துறையினர் மேற்கொள்கின்றனர்.