கொள்முதல் நிலையத்திலேயே இணைய பதிவு - அரசு உத்தரவு


விவசாயிகளின் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு. விவசாயிகள் இனி இணையதள மையங்களை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. கொள்முதல் நிலையத்திலேயே இணையவழி பதிவை மேற்கொள்ள நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பி.ஆர்.பாண்டியன்

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிலைய பணியாளர்களே, விவசாயிகளுக்கு டோக்கன் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேலாண்மை இயக்குநர், தமிழக அரசின் சார்பில் அனுமதி வழங்கி அதற்கான சுற்றறிக்கை நகலை இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.

இதைப் பயன்படுத்தி, விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இனி தடையின்றி தங்கள் நெல்லை விற்பனை செய்யலாம். இதுகுறித்து பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், “இணையவழியில் முன்பதிவு செய்வதற்கு இ சேவை மையங்களையும், தனியார் இணையதள மையங்களையும் விவசாயிகள் தேடிச்செல்ல வேண்டிய இக்கட்டான நிலை இருந்தது. அது மட்டுமல்லாமல் இணையதளத்தில் பதிவு செய்வதற்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதனால் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கொள்முதல் நிலையத்திலேயே கடந்த ஆண்டைப் போலவே கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழை வைத்துக்கொண்டு, இணையத்தில் பதிவு செய்து, டோக்கன் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தோம். விவசாயிகளின் அந்த நியாயமான கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதற்கு, விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

அரசின் இந்த உத்தரவு, அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவித்து வந்த விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது என்றே சொல்லலாம்.

x