நிழற்சாலை


பிரார்த்தனை


ஒவ்வொரு முறை வேகமாய்

வருகிறபோதும் அழித்துவிடக் கூடாதென்கிற பதற்றம் எனக்கு..

பிரவாகமாயிருப்பதால் தடுக்க சாத்தியமின்றி பிரார்த்தனை

மட்டுமே மிச்சமிருந்தது

அலைகளுக்கும் கேட்டிருக்க வேண்டும்

எத்தனை முறை எழுந்து வந்தாலும் கடைசி

வரை தொடவேயில்லை

குழந்தைகள் கட்டிவிட்டுச் சென்ற மணல் வீட்டை.


- ஆனந்த குமார்

உடைபடும் பூமியில் புலப்படும் தேசம்


தொலைத்த பால்யமும் தொலைந்த நாடும்

பச்சையம் பூத்த பாசியாகப் படர்ந்திருக்கும் நினைவுகளில்

வழுக்கியும் சறுக்கியும்

நசுங்கிப்போன தக்காளிச் சாறாக வாழ்வு பிசுபிசுத்தாலும்

பச்சைக்கறி வாங்கும்போது

அவ்வப்போது கண்ணில்படும்

சிறு பாலீத்தீன் பைகளில் அடைபட்ட சொடக்கை

யூரோக்களிலும் பவுண்ட்களிலும்

அதிக விலையென்றாலும் வாங்கிவிடுகிறோம்.

சொடக்கு தக்காளி என்பது சிறு உருண்டை அல்ல

எங்களுக்கான பெரிய உலகம்.

அதை உடைத்து உடைத்துதான்

எங்கள் தேசத்திற்குள் நுழைகிறோம்.

-வலங்கைமான் நூர்தீன்

நடை

இழுத்துக் கட்டப்பட்ட

எதிர்காலத்தின் விளிம்புகளில்

கால்வயிற்றுக் கஞ்சிக்கு

கயிற்றில் அந்தர வாழ்வு

தூக்கிலிடப்படாத வறுமையுடன்

பிழைத்தலின் விதியறியாது

கவனம் பிசகாத நடையில்

முன்னேறிக்கொண்டிருந்தாள்

கழைக்கூத்தில் சிறுமி!

- கா.ந.கல்யாணசுந்தரம்

தெரிவு


ஆயிரத்தெட்டு வேண்டுதல்களில்

அர்ச்சனைத் தட்டு மாறாதிருக்க

செருப்பு திருடப்படாதிருக்க

வேண்டியதை மட்டும்

குறித்துக்கொண்டார் கடவுள்.


- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

வடிவம் மாறிய உலகம்


நம் வாழ்வின் தேடலுக்குப்

பொருள் தருகிறது கூகுள்

பகிர்தலை அனிச்சைச் செயலாக்குகிறது முகநூல்

குழுவாய் வாழக் கூவியழைக்கும்

புலனம்

பேசித் தீர்த்துக்கொள்ள

இறைத்தூதனாக

க்ளப் ஹவுஸ்

அத்தனைக்குமான இன்ஸ்டாகிராம்

விடியற் சூரியனும்

அந்தி வரும் மதியும்

ஜிஎம் ஜிஎன்களில்

அடக்கம்

உலகம் உருண்டையெனச்

சொல்பவர்கள்

இனியாவது அறிக

கையடக்க உயிர்க் கோளின்

வடிவம் செவ்வகம்.

-கி.சரஸ்வதி

ஞாபகம்

மதுபாட்டிலில்

செய்த விளக்கு

ஒவ்வொரு முறை

அணையும்போதும்

புகையில் தெரிகிறது

அப்பாவின் ஆவி.

-ந.சிவநேசன்

பசியின் நிறம்

இரை கிட்டாத ஆடுகள்

அசைபோடுகின்றன

பசியினை...

குளமிருந்த இடத்தில்

மேய்ந்துகொண்டிருக்கிறது ஆடு

தாகத்தோடு.


- சாமி கிரிஷ்

வாழ்தல் நிமித்தம்

ராமன் வேடமிட்டு ஒருவர்

அனுமன் வேடமிட்ட ஒருவர்

கையால் வயிற்றைக் காட்டி

வாய் அருகே கை சென்று

வெறுங்கையை எதிரில் நீட்டுகிறார்கள்

பார்வையற்றவரின் பாடல் ஒன்று

வாயிற்படியில் ஒலிக்கிறது

பசி மீதான நம்பிக்கை

குறைந்துவருகிறது

இன்னும் வாழ்தலில்

ரகசியம் ஒன்றும்

இல்லையென்று

ஒவ்வொரு நாள் பசியிலும்

வயிற்றின் ரகசியமான மௌனச் சொற்களை

ஆறுதல் படுத்த

தொடுபவர்களைக் கடவுளாகப் பார்த்து

ஆழமான மனங்களைத் தேடி

சிறு புன்னகையையும் வலியையும்

தினம் கடத்துகிறது

மனிதர்கள் நிறைந்த இந்தச் சாலை.


- ப.தனஞ்ஜெயன்

x