செ.வை.சண்முகம்; ஒரு தலைமுறையின் வழிகாட்டி


பேராசிரியர் செ.வை.சண்முகம்

தமிழ் இலக்கணப் பேரறிஞர் செ.வை. சண்முகம் ஐயா மறைந்தார் என்ற செய்தி இடியெனத் தாக்கியது. இன்று சிதம்பரம் போக வாய்ப்பு ஏற்பட்டால், அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நேற்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் காலையில் இப்படி ஒரு செய்தி.

அகவை 91 ஆனாலும் சோர்வின்றித் தமிழில் எழுதிக் கொண்டிருந்த பெருமகனார் அவர். மொழியில் பின்புலத்தோடு செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களை ஆராய்ந்து அவர் எழுதி முன்வைத்த ஆய்வுகள் தமிழ் ஆய்வுலகுக்கு என்றும் பயன் சேர்ப்பவை.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றேன் என்றாலும் நான் மாணவனாக இருந்தபோது (1977-1983) அவரை அறிந்ததில்லை. 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எம்.ஏ.நுஃமான் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது, செ.வை.சண்முகம் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். அவரோடு நானும் சென்று, சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அன்பே உருவான அவரைப் பார்த்தபோது, தமிழறிஞர்கள் பலரைப் பற்றி படித்திருந்த செய்திகளின் மூலம் நான் மனதுக்குள் உருவாக்கி வைத்திருந்த தமிழறிஞர் குறித்த சித்திரம் உயிர்பெற்று வந்தது போல் இருந்தது.

கடந்த பத்தாண்டுகளில், மணற்கேணி ஆய்விதழில் அதிக அளவில் கட்டுரைகளை எழுதியவர் அவர்தான். பல்வேறு சிரமங்களுக்கிடையில் நடத்தப்படும் இந்த ஆய்விதழுக்குத் தமிழ் அறிஞர்களின் பங்களிப்பு இல்லையே என்று நாம் சோர்வடைந்த போதெல்லாம், என்னை உற்சாகமூட்டித் தொடர்ந்து இதழை நடத்த வைத்தவர் அவர். மணற்கேணிக்குக் கட்டுரை அனுப்புமாறு பலரை ஊக்கப்படுத்தியவர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் வாசு அரங்கநாதன், ஐயா செ.வை.ச அவர்களின் பரிந்துரைப்பில் மணற்கேணிக்காகக் கட்டுரை ஒன்றை அனுப்பியிருந்தார்.

மணற்கேணி 50 ஆவது இதழ் 300 பக்கங்கள் கொண்ட சிறப்பிதழாக வெளியானபோது, அதைப் படித்துவிட்டு உடனே மடல் எழுதியிருந்தார். “ கட்டுரைகள் சிறப்பாக அமைந்துள்ளன. அதன் பன்முகத் தன்மை என்னைக் கவர்ந்தது. ‘தலையங்க‘த்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த மொழி வரலாறு பற்றிக் கூடுதல் தகவல். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எழுதிய ‘தமிழ் மொழி வரலாறு’ என்று ஒரு நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது (1965). அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் வந்துள்ளது. அது வரலாற்று மொழியியல் நோக்கில் எழுதப்பட்ட ஆய்வு நூல். அது சிகாக்கோ பல்கலைக்கழத்தில் ஆற்றிய உரையைத் தழுவியது. அது மொழி வரலாற்றுக்கு நல்ல வழிகாட்டி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த அக்டோபர் மாதத்தில், ‘தொல்காப்பியத்தின் ‘முந்து நூல்’ என்ற விரிவான கட்டுரை ஒன்றை மணற்கேணிக்காக அனுப்பியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்காகத் தமிழ் ஆய்வாளர்களின் பெயர்களைப் பரிந்துரைத்து, பலருக்கு அந்த விருதுகள் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர். புதிய ஆய்வாளர்களை அடையாளங்கண்டு அவர்களிடம் பேசி உற்சாகப்படுத்தியவர். அவரைப்போல் ஒரு சிறந்த மனிதரைப் பார்ப்பது அரிது.

பேராசிரியர் கா.சிவத்தம்பி மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் மணற்கேணியில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் :

“ஆசிரியர் வேறு, கல்வியாளர் வேறு. பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் என்பவர் ஒரு துறை, அந்தத் துறையில் ஒரு பாடம் அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தேர்ச்சியாளர் என்று பொருள். மாறாகக் கல்வியாளர் என்றால் தேர்ந்தெடுத்த துறை அல்லது பாடம் மட்டும் அல்லாமல் முழு நிலையிலும் அந்தத் துறையின் அல்லது பாடத்தின் ஆழ அகலங்களை உணர்ந்து புதிய முறையில் இந்தத் தலைமுறையினர் பலருக்கும் வழிகாட்டுபவர் என்று பொருள். அந்த முறையில் சிவத்தம்பி ஒரு தலைசிறந்த தமிழ்க் கல்வியாளர். பல்துறை அறிவை ஒருங்கிணைத்து தமிழ் ஆய்வைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றவர்” எனப் பாராட்டியிருந்தார்.

அது ஐயா செ.வை.சண்முகம் அவர்களுக்கும் பொருந்தும். ஐயா ஒரு பேராசிரியராக மட்டும் திகழ்ந்தவரல்ல. இந்தத் தலைமுறையில் பலருக்கும் வழிகாட்டிய கல்வியாளர். அவருக்கு என் அஞ்சலி !

x