கொள்முதல் நிலையத்தில் பணம் கொடுக்காதீர்கள்; எச்சரிக்கும் விவசாய சங்கம்


விவசாய சங்க நிர்வாகிகள்

‘நெல் கொள்முதல் நிலையங்களில் அதன் ஊழியர்களால் கேட்கப்படும் லஞ்சத்தொகையை விவசாயிகள் யாரும் கொடுக்கக்கூடாது’ என்று காவேரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.

விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்லை விற்க கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுசெல்லும்போது, அங்குள்ள ஊழியர்கள் 40 கிலோ கொண்ட சிப்பம் ஒன்றுக்கு ரூ.40 முதல் 50 வரை லஞ்சமாகக் கேட்கிறார்கள். அதைக் கொடுக்காவிட்டால், அந்த விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் பல்வேறு சாக்குப்போக்குகளை கூறி அலைக்கழிப்பார்கள். அதனால் விவசாயிகள் பேசாமல் அந்தப் பணத்தை கொடுத்துவிட்டே நெல்லை விற்று வருகிறார்கள். இந்நிலையில், “விவசாயிகள் யாரும் கொள்முதல் நிலையத்தில் பணம் கொடுக்காதீர்கள்” என்று காவேரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

ஜனவரி 25, செவ்வாய் இரவு மயிலாடுதுறையில், சங்கத்தலைவர் குரு. கோபி கணேசன் தலைமையில் நடைபெற்ற அந்தச் சங்கத்தின் மாதாந்திர பொது உறுப்பினர் கூட்டத்தில், இதைத் தீர்மானமாக போட்டதுடன் தங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள்

விவசாயிகளின் கஷ்டத்தையும் ஆதங்கத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு, நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் மற்றும் உதவியாளர் ஆகியோர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. அதேபோல, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் கூலியாக சிப்பம் ஒன்றுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூபாய் 3-லிருந்து 10 ஆக உயர்த்தியிருக்கிறது. அவர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படுவதால், விவசாயிகள் எவரும் மேற்கொண்டு சிப்பத்துக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என இவர்கள் தீர்மானம் போட்டுள்ளனர்.

மீறி நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் கேட்பவர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும், அதற்கு உதவி தேவையெனில் சங்கப் பொறுப்பாளர்களை அணுகலாம். மாறாக எக்காரணத்தை முன்னிட்டும் பணம் கொடுக்க வேண்டாம் என்று விவசாயிகளை எச்சரித்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் முறையை கைவிட வேண்டும், சிறிதளவு பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், அண்டை மாநிலங்களில் வழங்குவதுபோல் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் ஊக்கத்தொகையை பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதைப்போல ஒவ்வொரு சங்கமும் தீர்மானம் போட்டு, அதை விவசாயிகளும் தீர்க்கமாக கடைபிடித்தால் நிச்சயம் நல்லதொரு விடிவு விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

x