தேசிய வாக்காளர் தினம்: ஒட்டிப்பிறந்த இரட்டையருக்கு தனி வாக்காளர் அட்டைகள்


மோஹன் -சோஹனுக்கு தனி வாக்களர் அட்டைகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பஞ்சாப்பின் ஒட்டிப் பிறந்த இரட்டையரான சோஹன் சிங் -மோஹன் சிங் ஆகியோருக்கு தனித்தனி வாக்காளர் அட்டைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வழங்கினர்.

பஞ்சாப்பில் சோஹன் சிங் -மோஹன் சிங் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டையர் மிகவும் பிரபலமானவர்கள். டெல்லியில் பிறந்த இவர்களை, பெற்றோர் கைவிட்டதால் அமிர்தசரஸில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தனர். ஒட்டிப் பிறந்த இரட்டையருக்கான சவால்கள் பலவற்றையும் கடந்து வளர்ந்த இவர்கள், சோஹ்னா - மோஹ்னா என பஞ்சாப் மக்களால் கனிவோடு அழைக்கப்படுகிறார்கள்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று(ஜன.25) நாடெங்கும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் உதயமான, 1950ஆம் ஆண்டு ஜன.25 தினத்தை சிறப்பிக்கும் வகையில், அன்றைய தினத்தை தேசிய வாக்காளர் தினமாக 2011 முதல் அதிகாரபூர்வமாக அனுசரித்து வருகிறோம். வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருதச்செய்வது, இளைஞர்கள் மத்தியில் வாக்களிப்பதை ஊக்குவிப்பது உள்ளிட்டவை, தேசிய வாக்களர் தினம்தோறும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒட்டிப்பிறந்த இரட்டையர் மோஹன் - சோஹன்

பஞ்சாப்பில் சோஹன் - மோஹன் இருவரும் பிரபலம் என்பதால் அவர்களைக் கொண்டே விழிப்புணர்வு மேற்கொள்ள முடிவு செய்யபட்டது. இந்த இரட்டையர் கடந்த வருடம்தான் தங்களது 18 வயதை பூர்த்தி செய்தனர். இதனையடுத்து, ஒட்டிப் பிறந்த இரட்டையர் இருவருக்கும் தனித்தனி வாக்களார் அடையாள அட்டை கொடுக்க முடிவானது. அதற்கான நிகழ்ச்சி இன்று விமரிசையாக நடைபெற்றது.

சோஹன் - மோஹன் இருவரும் வருகிற பிப்.20 அன்று நடைபெறவுள்ள பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது கன்னி வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். ஒட்டிப் பிறந்த இரட்டையரான இந்த இருவரில், ஒருவரின் வாக்களிப்பு இன்னொருவர் அறியாது நடத்தப்பட வேண்டும் என்பதால், இவர்களின் வாக்கு மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

x