இசைவலம்: காதலின் கீதம் ஒன்று!


காதலின் அன்பை உருக்கமான வார்த்தைகளில் சுபஸ்ரீ ப்ரியா வடித்திருக்கும் இந்தப் பாடலுக்கு, இசையமைத்து புட்சட்னி அமைப்புக்காகப் பாடியிருப்பவர் கார்த்திகேய மூர்த்தி. அவருடன் சிந்தஸைசர் கலைஞர் விஜய், கிதார் ராஜா, டிரம்ஸ் ஸ்ரீஹரி ஆகியோரின் இசையும் துல்லியமாக இணைந்து ஓர் அற்புதமான இசைக்கோலத்தைப் படைத்திருக்கிறது. கலைக்கு உண்மையாக இருக்கும் கலைஞனை எந்தவொரு கலையும் கைவிடுவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலின் நேர்த்தி, இதில் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள் பலரையும் நிச்சயம் ஒரு படி உயர்த்தியிருக்கும் என்பதற்கு கார்த்திகேய மூர்த்தியே சிறந்த உதாரணம்.

பின்னாளில் ‘மெட்ராஸ் ட்யூன்ஸ்’ எனும் இசைக் குழுவின் வழியாக இவர் வெளிப்பட்டார். சிறந்த சுயாதீனப் பாடல்களைப் பாடும் குழுவாக இவரின் குழுவைத் தேர்ந்தெடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ‘கே.டி (எ) கருப்புதுரை’ படத்தின் இசையமைப்பாளராகி, தற்போது பாஃப்டாவால் அடையாளம் காணப்பட்ட இசைக் கலைஞராகவும் ஆகியிருக்கிறார்.

“நான் இசையமைத்த ‘கே.டி (எ) கருப்புதுரை’ படத்துக்கான இசைதான், பாஃப்டாவால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு என்னை தகுதி உள்ளவனாக ஆக்கியிருக்கிறது. அயல்நாட்டில் இருக்கும் பிரபல இசைக் கலைஞர்களோடு சேர்ந்து இசையமைக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும். இந்த அங்கீகாரம் எனக்குக் கிடைத்ததை இறைவனின் அருள் என்றுதான் சொல்வேன். இன்னமும் உத்வேகத்துடன் செயல்படுவதற்கான உறுதியை இந்தப் பாராட்டு எனக்கு கொடுத்திருக்கிறது. அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு திரைப்படம், ஓடிடி தளங்களில் வெளியாகவிருக்கும் சில படங்களுக்கும் இசையமைத்துள்ளேன்” என்றார் கார்த்திகேய மூர்த்தி.

காதல் கானத்தை ருசிக்க:

https://www.youtube.com/watch?v=0FAtj6x18DM

இந்த நாள் இனிய நாள்!

கணேச பஞ்சாட்சரம், சிவாஷ்டகம், நமோ நமோ பரதாம்பே, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், பவானி அஷ்டகம், ராம அஷ்டகம் போன்றவை இறைவனின் அருளைப் பெறுவதற்கு அருளாளர்களால் படைக்கப்பட்டவை. ஆதி சங்கராச்சார்யா அருளிய அச்யுதாஷ்டகம் துதியை, பதச் சேதம் ஏதும் ஏற்படாமல் ஸ்ருதி சுத்தத்துடன் உச்சரிப்பு நேர்த்தியுடன் சூர்யகாயத்ரி பாடியிருக்கும் காணொலி இது.

கோட்டயம் ஜமனீஷ் பாகவதர் இந்தத் துதிக்கு இசையமைத்திருக்கிறார். அச்யுதாஷ்டகம் துதியை வைகறைப் பொழுதில் கேட்டபடி உங்களின் நாள் தொடங்கட்டும். குறிப்பாக, ஹெட்போன் அணிந்து கேளுங்கள். இந்தக் காதில் நுழைந்து அந்தக் காதில் வெளியேறாமல், அந்த ஸ்லோகத்தின் பயன்கள் உங்களுக்குள்ளேயே நிலைத்திருக்கும்!

அருளை வழங்கும் துதியைக் கேட்க:

https://www.youtube.com/watch?v=XLb7tnvAJtM

கிருஷ்ணைகளின் பிரதிநிதி!

நீண்ட சடைமுடி, கழுத்தில் ருத்திராட்ச மாலைகள், கையில் ஒரேயொரு தந்தியுடன் இருக்கும் ஓர் இசை வாத்தியம், தோள்பட்டையில் ஒரு தாளவாத்தியத்தோடு வளையவருகின்றனர் வங்க நாட்டின் கிராமியப் பாடகிகள். பவுல் இனத்தவர்கள் என அழைக்கப்படும் இவர்களை ‘கிருஷ்ணைகள்’ என்று உலகத்தின் பிரபல இசை மேடைகளில் கொண்டாடுகின்றனர். அப்படி கிருஷ்ணைகளின் பிரதிநிதியாக உலக அரங்கில் ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் பார்வதி பவுல். கதை சொல்லி, ஓவியர், பாடகர் எனப் பல முகங்கள் இவருக்கு இருக்கின்றன.

40 நாடுகளின் புகழ்பெற்ற இசை அரங்குகளில் பார்வதியின் குரல் ஒலித்திருக்கிறது. ஷஷாங்கோ கோஷாய், சனாதன் தாஸ் பவுல் ஆகியோரிடம் பாரம்பரியமான பவுல் இசைவடிவத்தைக் கற்றிருக்கிறார் பார்வதி. தான் பாடும் மொழியை ‘சந்தியா பாஷா’ என்று அழைக்கும் பார்வதி, இது எப்படி, யாரால் தோன்றியது என்பதற்கான குறிப்புகள் இல்லை. தொடக்கத்தில் புத்த பிட்சுகள் இந்தப் பாஷையைப் பேசியிருக்கின்றனர் என்கிறார். பவுல் மார்க்கம் என்பது வித்தியாசமானது. எல்லோரும் பயணிக்கும் திசைக்கு எதிர்திசையில் பயணிப்பது. இறையை அடைய கீழே பயணிப்பது அல்ல உச்சத்துக்குப் பயணிப்பது என்கிறார். இந்த மார்க்கத்தைப் பரப்புவதற்கு திருவனந்தபுரத்தில் இவருக்கு ஆசிரமங்களும் இருக்கின்றன. அம்மணி பேசும் பாஷைதான் புரியவில்லை, ஆனால் உரையாடும் ஆங்கிலம் தெளிந்த நீரோடை!

இறையைப் போற்றும் இசை:

https://www.youtube.com/watch?v=Kxk1Pua1xwU

வீடே மேடை… உலகமே ரசிகர்!

“சுமாராப் பாடுவேன்பா… மேடை, மைக், ஸ்பீக்கர்லாம் இருந்தா எனக்குப் பாட வராது. நெர்வஸாயிடும்…” இப்படிக் கூச்சத்தோடு ஒதுங்கிவிடும் கூட்டம் கடந்த தலைமுறையில் இருந்தது. முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய திரைப்படங்களில்கூட ‘பாத்ரூம் சிங்கர்ஸ்’ எனும் சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்களைக்கூட அரவணைத்து அவர்களின் மனத்தடையைப் போக்கி, அவர்களையும் பொதுவெளியில் பாடகர்களாக்கியிருக்கும் தொழில்நுட்பம்தான் ‘ஸ்மூல்’.

நாட்டில் ஏகப்பட்ட ஸ்மூல் குழுக்கள் இருக்கின்றன. குறைவான உறுப்பினர்களோடு நிறைவான மனதோடு, முதல் ஆண்டு நிறைவுக்காகப் பிரத்யேகமான தனிப்பாடலையே யூடியூபில் வெளியிட்டு அசத்தியிருக்கிறது ‘ஸ்மூல் ஃபிரீஸர்ஸ்’ அமைப்பு. பாடலை கவிஞர் வடிவேலன் எழுத, ஜீவராஜா இசையமைக்க, பின்னணிப் பாடகர் முகேஷ் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பாடி, யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

கையணிந்த வளையலும்

கால்கொலுசு மணிகளும்

காதுக்குள்ளே முணுமுணுக்குது நில்லுங்க – அது

கல்யாணியா, காம்போதியா சொல்லுங்க…

ஃபிரீஸர்ஸ்... ஸ்மூல் ஃபிரீஸர்ஸ்...

என்று உறுப்பினர்களின் தன்மை குறித்து நளினமாகப் பாட்டின் வரிகளில் விளக்கியிருக்கிறார் கவிஞர் வடிவேலன். தொழில்முறைப் பாடகர்கள், ஆர்வத்தில் பாடுபவர்கள் என கலவையாகக் குழுவில் இருப்பவர்களைப் போல பாட்டின் மெட்டிலும் மேற்கத்திய பாணி இசை, கிராமிய இசை, கர்னாடக இசை எனப் பல பாணி இசையும் பளிச்சிடுகிறது. ’ஏதோ நினைவுகள்... கனவுகள் மனதிலே மலர்ந்ததே’ பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அந்தப் பாடலை சுமநேச ரஞ்சனி எனும் ராகத்தில் இளையராஜா அமைத்திருப்பார். அந்த ராகத்தை அடிப்படையாக வைத்து இந்தப் பாடலின் ஒரு சரணத்தை அமைத்திருக்கிறேன்” என்றார் இசையமைப்பாளர் ஜீவராஜா.

“நான் ஓர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். முறையாக சங்கீதம் படித்து, மேடை நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பாடியிருக்கிறேன். பின்னணிப் பாடகர்களே நீண்ட நாட்களுக்குப் பாடாமல் இருந்தால் தங்களின் குரல்வளம் பாதிக்கும் என்பதற்காக ஸ்மூலில் பாடிவருகின்றனர். இது எங்களைப் போன்றவர்களுக்கு பெருமையான விஷயம். பாடப்பாடத்தானே ராகம்?!” என்கிறார் ஸ்மூல் பாடகிகளின் ஒருவரான கீதா.

ஏதோ கரோக்கி கிடைக்கிறது என்பதற்காக ஸ்மூலில் பாடினோம் என்றில்லாமல், ஸ்மூலிலேயே பல புதுமைகளை இந்தக் குழுவினர் செய்துவருகின்றனர். ஒரு கர்னாடக ராகத்தை எடுத்துக்கொண்டு, அதில் அமைந்த திரைப் பாடல்களைப் பாடுவது, இசை குறித்த கேள்வி, பதில் நிகழ்ச்சிகளை நடத்துவது என அசத்துகின்றனர். மருத்துவர்கள், தொழில்முனைவோர் எனப் பல துறைசார்ந்த பிரமுகர்கள் இவர்களின் குழுவில் இருக்கின்றனர். மூத்த இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களிலும் அவர்களைப் போற்றும் வகையில் அவர்களின் படைப்புகளை குழு உறுப்பினர்களைக் கொண்டு பாடச் செய்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில், குழுவில் இருக்கும் உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் மனதை ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஸ்மூல் வழியாகவே நடத்துகின்றனர். குடும்ப உறுப்பினர்களும் பங்குபெறும் வகையில் குழு நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்துகின்றனர்.

ஸ்மூல் ஃபிரீஸர்ஸின் இந்தப் பாடல் மன இறுக்கத்தைப் போக்கி உங்களையும் ஆசுவாசப்படுத்தும்!

ஸ்மூல் பாடகர்களின் உற்சாகப் பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=xwLJFVzsOww

x