அசத்தல் ஆயிஷா மாலிக்!


பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆயிஷா மாலிக் பதவிப் பிரமாணம் ஏற்கிறார்.

பாகிஸ்தான் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் பதவியேற்றிருக்கிறார். 4 மாதங்களாக நீடித்த பாகிஸ்தான் நீதித்துறை மற்றும் பிற்போக்காளர்களுடனான போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஆயிஷா மாலிக்.

லாகூர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்து வந்தவர் ஆயிஷா மாலிக். லாகூரின் பாகிஸ்தான் சட்டக் கல்லூரியிலும் தொடர்ந்து ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலும் சட்டப்படிப்புகளையும் முடித்தவர். பாகிஸ்தான் உயர் நீதிமன்றங்களில் ஆக்கிரமித்திருக்கும் நீதிபதிகளில் ஆயிஷா மாலிக் மட்டுமே மெரிட் அடிப்படையில் முன்நின்றார். அந்த வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பலமுறை பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் வயது சீனியாரிட்டியின் அடிப்படையில் அவருக்கும் முன்பாக 3 நீதிபதிகள் இருந்தனர். எனவே, ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு தடைகள் எழுந்தன.

சக நீதிபதிகள் மட்டுமன்றி வழக்கறிஞர் சங்கங்கள் பலவும், ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்ற பணிகள் புறக்கணிப்புக்கும் அவை அறைகூவல் விடுத்தன. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குறிப்பாக தலைமை நீதிபதி குல்சார் அகமது, நாட்டின் மனித உரிமைகள் ஆணையம், பல்வேறு எம்பிக்கள், முக்கியமாக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பெருவாரியான ஆதரவு ஆகியவை ஆயிஷா மாலிக் பக்கம் இருந்தன. சக நீதிபதிகளை விட சட்ட அறிவு மிக்கவர் என்பதைவிட முற்போக்கானவர், பல வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளுக்கு சொந்தக்காரர் என்பதும் ஆயிஷா மாலிக் மீதான ஆதரவுக்கு காரணமாக இருந்தன.

நிராகரிப்புகளுக்கு மத்தியில் அண்மையில் மற்றுமொரு முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பரிந்துரையானபோது, பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தில் பலமணி நேர விவாதங்கள் அனல் பறந்தன. 9 பேர் கொண்ட குழுவில் 5 பேர் ஆதரவாகவும், 4 பேர் எதிராகவும் முடிவுகளை தெரிவிக்க, முதல் சுற்று வெற்றியை ஈட்டினார் ஆயிஷா மாலிக். தொடர்ந்து பாராளுமன்ற குழுவின் பரிசீலனை, பாகிஸ்தான் அதிபரின் அனுமதி ஆகியவையும் நிறைவேறியதில், இன்று(ஜன.24) வெற்றிகரமாக, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் பொறுப்பேற்றார்.

ஆயிஷா மாலிக்

ஆயிஷாவுக்கு ஆதரவளித்தவர்களில் பெரும்பாலானோர், நாட்டின் பாலின பாகுபாட்டுக்கு எதிரான முன்னகர்வாக அவரது பதவி பிரமாணத்தை கொண்டாடுகிறார்கள். மேலும் ஆயிஷாவை பின்தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நாட்டின் சட்டத்துறையில் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரப்படி, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த நீதிபதிகளில் 17 சதவீதம் மட்டுமே பெண்கள். அதிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 4.4 சதவிதம் மட்டுமே. 1956ல் நிர்மாணிக்கபட்ட நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி பொறுப்பேற்பதற்கு 2022 வரை பாகிஸ்தான் காத்திருந்திருக்கிறது.

உயர் நீதிமன்றத்தில் ஆயிஷா மாலிக் வழங்கிய துணிச்சலான தீர்ப்புகள் பலவும் மனித உரிமை மற்றும் பெண்ணுரிமை ஆர்வலர்களால் விதந்தோதப்படுபவை. அப்படியொரு தீர்ப்பினை கடந்தாண்டு ஆயிஷா பிறப்பித்திருந்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணிடம் விரல்களால் கன்னித்திரை பரிசோதிக்கும் நடைமுறைக்கு எதிராக ஆயிஷா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு சேர்ப்பது மட்டுமன்றி, பாகிஸ்தான் அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் இந்த நடைமுறை இருப்பதாகவும் தீர்ப்பளித்து, அந்த பிற்போக்கு நடைமுறைக்கு முடிவு கட்டினார்.

2031 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக்கின் பதவிக் காலம் நீடிக்க உள்ளது. இந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தானின் பிற்போக்குத்தனமான வேறுபல நடைமுறைகளுக்கும் ஆயிஷா முற்றுப்புள்ளி வைப்பார் என அவரை ஆதரிப்பவர்கள் தீர்மானமாக நம்புகின்றனர்.

x