பாதிரியாருக்கு விடுதலை... கைவிடப்படுகிறாரா கன்னியாஸ்திரி?


இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் கேரளத்தில் இரு வழக்குகள் பேசுபொருளாகின. ஒன்று திரைத் துறை தொடர்பானது, மற்றொன்று மத அமைப்புகள் தொடர்பானது. இரண்டும் இரு வேறு முனைகள் என்கிறபோதும், இரண்டிலுமே பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பது இரண்டையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது.

ஆக்கபூர்வ மாற்றமும் அதிர்ச்சித் தீர்ப்பும்

பிரபல மலையாள நடிகை 2017-ல் காரில் கடத்தப்பட்டு பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு, இன்றுவரை அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. அதில் தொடர்புடைய நடிகருக்கு எதிரான சாட்சிகள் தற்போது வலுப்பெற்றிருக்கின்றன. நடிகையும் 5 ஆண்டுகள் கழித்துப் பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். தான் சிறுமைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டபோதும் சிலர் தனக்குத் துணையாக இருந்ததைக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ‘பாதிக்கப்பட்டவர்’ என்கிற அடையாளத்தில் இருந்து ‘போராடி மீண்டவர்’ என்கிற அடையாளத்தைப் பெற 5 நெடிய ஆண்டுகள் ஆனதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல்

இது ஒருபக்கம் இருக்க, நாடு முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கல் வழக்கில் ஜனவரி 14 அன்று தீர்ப்பு வெளியானது. ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல், 2014 முதல் 2016 வரை தன்னைத் தொடர்ந்து பலமுறை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக, கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி 2018-ல் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த வழக்கில், ஃபிராங்கோ குற்றமற்றவர் என்று கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, கன்னியாஸ்திரிகளை மட்டுமல்லாமல், நாடு முழுதும் உள்ள பெண்கள் மத்தியிலும், பாலினச் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெகுண்டெழுந்த பெண்கள்

இந்தத் தீர்ப்பில் ஃபிராங்கோ குற்றமற்றவர் என்பதற்குச் சொல்லப்பட்ட காரணங்களைப் பெண்ணியவாதிகள் பலர் கேள்விக்குள்ளாக்கினர். ‘கன்னியாஸ்திரியின் முரண்பட்ட வாக்குமூலம் தீர்ப்புக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆதாரங்கள் அனைத்தும் பிஷப்புக்கு எதிராக இருக்கும்போது எப்படி அவர் விடுதலை செய்யப்படலாம்?’ என்றும் விமர்சனங்கள் எழுந்தன. நாடு முழுதும் பெண்கள் பலர், கேரளக் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தனர். சமூக வலைதளங்களில் #withthenuns (கன்னியாஸ்திரிகளுக்குத் துணைநிற்போம்), #Avalkoppam (அவளுக்கு ஆதரவு) என்கிற ஹேஷ்டேக்குகளோடு பெண்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகப் பெண்கள் எழுதிய கடிதங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன.

சவாலான போராட்டம்

பிஷப் ஃபிராங்கோ தன்மீது நிகழ்த்திய பாலியல் வன்முறை குறித்து 2018 ஜூன் மாதம் காவல் துறையில் புகார் செய்யும் முன், திருச்சபை உயர் மட்டத்தில் இதுகுறித்துச் சொல்லியிருக்கிறார் அந்தக் கன்னியாஸ்திரி. பிறகு போப்பின் அலுவலகத்தையும் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்தான், காவல் துறையில் புகார் அளித்தார். அப்போதுகூட உடனே நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ‘சேவ் அவர் சிஸ்டர்ஸ்’ என்று, கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக ஆங்காங்கே போராட்டங்கள் வலுப்பெற்ற பிறகே விசாரணை தொடங்கியது. அதன் பிறகும் பிஷப் ஃபிராங்கோ கைது செய்யப்படவில்லை. அதனால், அவரைக் கைது செய்து விசாரிக்கக் கோரி 2018-ல் மனுத் தாக்கல் செய்தார் கன்னியாஸ்திரி. அதை வலியுறுத்தி மேலும் இரு பொதுநல வழக்குகள் தொடரப்பட, அதைத் தொடர்ந்தே பிஷப் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல்.

போராடிய கன்னியாஸ்திரிகள்

ஒடுக்கப்படும் குரல்கள்

கேரளக் கன்னியாஸ்திரிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு 4 ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டத்தில், கன்னியாஸ்திரி மட்டுமல்ல, அவருக்கு ஆதரவாக நின்றவர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டனர். பாலியல் புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக நின்ற 5 கன்னியாஸ்திரிகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர். குறிப்பாகக் கன்னியாஸ்திரி லூசி, திருச்சபை விதிகளை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, திருச்சபைப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டார். பெரும் போராட்டத்துக்குப் பிறகே அவரால் திருச்சபைக்குள் நுழைய முடிந்தது. போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய சகோதரி அனுபமாவும் பெரும் இன்னல்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். அனுபமாவுடன் சேர்ந்து மேலும் மூவருக்கு வேறு மடத்துக்கு மாற்றல் வழங்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடிய அனுபமா, இப்படித் தங்களைப் பந்தாடுவது பெரும் மன உளைச்சலைத் தருவதாக ஊடகங்களில் தெரிவித்தார். தன் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து 2019 டிசம்பரில் லூசி எழுதிய ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ என்கிற சுயசரிதையில், கத்தோலிக்கத் திருச்சபைகளுக்குள் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்துப் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2020-ல் ஃபிராங்கோ மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் குற்றச்சாட்டைக் கூறினார். இவர், ஏற்கெனவே நடைபெற்றுவந்த கன்னியாஸ்திரி வழக்கின் சாட்சிகளில் ஒருவர் என்பதால், இவரது புகார் பதிவுசெய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்டவரே குற்றவாளியா?

பொதுவாக, தங்களுக்குப் பாலியல் தொந்தரவு அளிக்கும் ஆண்கள் குறித்து பெண்கள் அவ்வளவு எளிதாக யாரிடமும் சொல்லிவிடுவதில்லை. பெரும்பாலானோர் தங்களுக்குள்ளேயே குமுறித் தீர்ப்பார்கள். விதிவிலக்காகச் சிலர் தங்களுக்கு நெருங்கியவர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். அரிதாக மிகச் சிலரே, தனக்கு நேர்ந்த அநீதியைப் பொதுவெளியில் சொல்லி குற்றமிழைத்தவரை அம்பலப்படுத்துவார்கள். கேரளக் கன்னியாஸ்திரியும் இப்படியான பல்வேறு மன அலைக்கழிப்புக்குப் பிறகே, தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்துப் புகார் சொல்ல முன்வந்திருப்பார். ஆனால், ‘புகார் சொல்வதில் ஏன் இவ்வளவு தாமதம்’ என்று நீதிமன்றம் அதையும் கேள்விக்குள்ளாக்கியது.

கன்னியாஸ்திரியின் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவருடன் அந்தக் கன்னியாஸ்திரி தகாத உறவில் ஈடுபட்டதாகப் பிறழ்சாட்சி கூற, அதைத் தொடர்ந்து கன்னியாஸ்திரியின் ஒழுக்கம் விமர்சிக்கப்பட்டது. ஒழுக்கமும் தூய்மைவாதமும் கன்னியாஸ்திரிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியக் குணங்களாகச் சொல்லப்பட்டிருக்கையில், அவற்றையே அவருக்கு எதிரான ஆயுதமாகவும் சிலர் கையில் எடுத்தனர். பாலியல் தொந்தரவுக்குப் பிறகும் தொடர்ந்து ஏன் பிஷப்புடன் பேச வேண்டும் என்றெல்லாம், விமர்சனக் கணைகளைத் தொடுத்தனர். இதற்குத்தான், தான் பயந்ததாகக் கன்னியாஸ்திரி கூறியுள்ளார்.

இருவருக்கும் ஒன்றல்ல...

பொதுவெளியில் தன் கண்ணியம் கெட்டுவிட்டால், தான் ஏற்றிருக்கும் கன்னியாஸ்திரி என்கிற பொறுப்புக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே, ஃபிராங்கோ மீது புகார் கொடுக்கத் தயங்கியதாகவும் கன்னியாஸ்திரி தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவர் அச்சப்பட்டதுபோலவே, இறுதியில் அவரது நடத்தை கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

ஒருபக்கம் கன்னியாஸ்திரியின் நடத்தை குறித்துப் பலரும் மலினமான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் சைரோ - மலபார் திருச்சபை 2021-ம் ஆண்டுக்கான காலண்டரில், ஃபிராங்கோவின் படத்தை அவரது பிறந்த தேதியுடன் வெளியிட்டது. அதைக் கண்டித்து திருச்சூரிலும் கொல்லத்திலும் காலண்டர் எரிப்புப் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, “குற்றம் நிரூபிக்கப்படாதவரை அவர் பிஷப்பாகவே தொடர்வார். அவரது பணிகள் மட்டுமே விலக்கிவைக்கப்பட்டுள்ளன” என்று திருச்சபை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பிஷப் ஃபிராங்கோவுக்கு எதிராக இதுவரை அளிக்கப்பட்டிருக்கும் அதிகபட்சத் தண்டனை, அவரது பணிகள் விலக்கப்பட்டிருப்பது மட்டும்தான். கைது செய்யப்பட்டு சில நாட்களிலேயே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.

பொதுவாகப் பாலியல் வழக்குகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆணுக்கு அவன் கடந்துவர வேண்டிய அவச்சொல்லாக மட்டுமே இருப்பது, பெண்ணுக்கோ வாழ்க்கையையே பணயம் வைக்கிற பெரும் போராட்டமாக மாறிவிடுகிறது. கேரளக் கன்னியாஸ்திரி வழக்கிலும் அதுதான் நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் எப்போது தீர்வு என்பதுதான், ஒட்டுமொத்தப் பெண்களின் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் வலிநிறைந்த கேள்வி!

x