நட்சத்திர விவாகரத்துகளும், சாமானியர்களின் அங்கலாய்ப்புகளும்


தனுஷும் ஐஸ்வர்யாவும் ஏன் விவாகரத்து செய்துகொண்டனர் என்று சம்மந்தபட்ட இருவரைவிடவும் அதிகம் யோசித்து களைத்திருக்கிறது பொதுச்சமூகம். திடீர் நாட்டாமைகளாக மாறியவர்கள் பலரும், மேற்படி தம்பதியரை, அவர்களின் பெற்றோரையும், அதிகம் அறியப்படாத குழந்தைகளையும் உள்ளடக்கி, குற்றச்சாட்டுகளை சுமத்தி மானசீக குறுக்குவிசாரணைகள் நடத்தி நீதிபரிபாலனம் பேணியாகிவிட்டது. விவகாரத்து என்பதே ஏதோ கூடாத காரியம்போலவும், இந்த செலிபிரிட்டிகள் அனைவரும் மணவாழ்வின் புனிதத்தை கெடுக்க வந்தவர்கள் என்றும் பொங்கித் தணிந்தாயிற்று.

இனியாவது ஆறஅமர தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்து அறிவிப்புகளை முழுதுமாய் ஒருமுறை வாசித்துப் பார்த்தால், இந்த திடீர் நாட்டமைகள் நாணிக்கோணுவார்கள். மிகவும் தீர யோசித்து, விவாதித்து, ஊறப்போட்டு, இதற்கு மேல் இதர சாத்தியங்களே என்ற புள்ளியில் பிரிவதென்று முடிவு எடுத்ததையும், அதையும் கூட முதிர்ச்சியும், பக்குவமும் மிக்க வார்த்தைகளால் பொறுப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது இந்த முன்னாள் ஜோடி. அவர்கள் விடுத்திருக்கும் அறிவிப்பை உள்ளார்ந்து வாசித்தவர்களால், அவர்களை வாழ்த்த மட்டுமே முடியும்.

செலிபிரிட்டியாக இருப்பதற்கு கொடுக்கும் விலைகளில் ஒன்றாக தங்கள் அந்தரங்கம் களவாடப்பவடுவதையும், ஊரார் வாயில் அவலாக அரைபடுவதையும் வேதனையுடன் அவர்கள் கடக்க நேரிட்டிருக்கலாம். இதையும் கடந்த வாழ்க்கை அவர்களுக்கு இருக்கிறது. 18 வருட மண வாழ்க்கையை முறித்துக்கொள்வது என்பது அத்தனை எளிதானது அல்ல. அதிலும் சூழலின் அழுத்தத்துக்கு ஈடுகொடுத்து, சகல கேள்விகளுக்கும் தயாரானவர்களாக மனமொத்தே இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள். பிரிவதற்கு மனமொத்து முடிவெடுக்க முடிந்தவர்களால், சேர்ந்து வாழ மனமொத்துப் போக முடியாதது ஏன் என்ற விசித்திரமான கேள்விக்கு அவர்களிடமும் அநேகமாக பதில்கள் இருக்காது.

தனுஷ் - ஐஸ்வர்யா மட்டுமல்ல, நம்மைச் சுற்றியும், பகிரங்க விவாகரத்தோ அல்லது அப்படியான அறிவிப்புக்கு வழியின்றியோ, நான்கு சுவற்றுக்குள் சேர்ந்து வாழத் தலைப்பட்டவர்களின் அந்தரங்கத்தை பிராண்டுவதற்கு முன்னர் நாம் அடைந்தாக வேண்டிய தெளிவுகள் ஏராளம் இருக்கின்றன. நினைத்த மாத்திரத்தில் சேர்ந்து வாழ்வதில் மட்டுமல்ல, பிரிய முடிந்ததிலும் இந்த செலிபிரிட்டிகள் கொடுத்து வைத்தவர்கள். சாமானியர்களுக்கு இந்த இரண்டுமே அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை.

இந்தக் காழ்ப்பே செலிபிரிட்டிகளின் விவகாரங்கள் சந்திக்கு வந்ததுமே போலி அக்கறையுடன், ரணகளப்படுத்தி ஆறுதல் அடைகிறோம். சேர்ந்து வாழ்வதிலும், வாழ்க்கை கசந்த விநாடியில் அதிலிருந்து விடுபடவும் சாமானியருக்கும் சாத்தியமாகும்போது இந்த காழ்ப்புகள் தேய்ந்துபோகும்.

விருப்பமில்லா வாழ்வுக்குள் தம்பதியரை இழுத்துப்பிடித்து கட்டாய மணவாழ்க்கைக்கு ஆட்படுத்தும்போதே சமூக சீர்கேடுகள் வேர்விடுகின்றன. திருமணத்துக்கு அப்பாலான உறவுகளும், வாழ்க்கைத்துணைக்கு கேடு செய்யும் மனநிலையும், குழந்தைகள் மீதான பொறுப்பற்ற தன்மையும் மேலோங்குகின்றன. மாறாக, பிரிந்தபோதும் குடும்பக் கடமைகளை சேர்ந்தே தோளில் சுமப்போம் என நண்பர்களாக பழக முடிந்த முன்னாள் தம்பதிகளால் குழந்தை வளர்ப்பு பெரிதாய் தடம்புரள வாய்ப்புகள் குறைவது.

இம்மாதிரி பொதுவெளியில் வெடிக்கும் விவாகரத்து விவகாரங்களில் கவனித்தாக வேண்டிய இன்னொரு அம்சம், இதிலேயும் பெண்களே சுலபமாக குறிவைத்து சாய்க்கப்படுகிறார்கள். தனுஷை விட ஐஸ்வர்யாவே அதிகளவிலான கணைகளையும், கிண்டல்களையும் எதிர்கொள்கிறார். இத்தனைக்கும் பின்புலத்தில் சூப்பர் ஸ்டாராக தந்தையை கொண்டவருக்கே இந்த நிலைமைதான் வாய்க்கிறது. திருமண பந்தத்திலிருந்து வெளியேற முற்படும் சாமானிய பெண்கள் அடையும் துயரம் இவற்றைவிட கொடூரமானது. இந்த சாமானிய பெண்களுக்கும் திருமண முறிவு சாத்தியமாகும்போது, இந்த அவல சமூகம் வாயடைத்துப் போயிருக்கும்.

தனுஷ்- ஐஸ்வர்யா இடையிலான முதிர்ச்சி மேலிடும் பிரிவை கூராய்வதைவிட, அவர்களை வாழ்த்த முற்படுவதே நமக்கும் முதிர்ச்சி சேர்க்கும்.

x