ஆத்தா... நான் டெஸ்ட்ல பாஸாயிட்டேன்!


அட்டெண்டர் மடிச்சாப்ல ஒரு பேப்பரை நீட்டுனார். வேலையை விட்டுத் தூக்கிட்டாங்களோன்னு பயத்தோட, “என்ன லெட்டர்?”னு கேட்டா, “கொடுக்கிறது மட்டும் தான் என் வேலை. படிச்சுக் காட்டறது இல்ல”ன்னு குமுறிட்டுப் போனார். அவருக்கு எங்கே என்ன நடந்துச்சோ.

அதைப் படிச்சேன். ஹெல்த் டிபார்ட்மென்ட் லெட்டர். இரண்டு வருசத்துக்கு ஒரு முறை முழு பரிசோதனை இலவசமா செஞ்சுக்கலாம். எங்க ஆபிஸ்ல அப்படி ஒரு வசதி. ஈசிஜி... எக்ஸ்ரே... பிளட்... யூரின்... கண்... லங்க்ஸ்னு எல்லா பார்ட்டுக்கும் நடக்கும். டெஸ்ட் முதல் நாள் நடக்கும். ரிசல்ட்டை வச்சுக்கிட்டு டாக்டரைப் பார்க்கிறது ரெண்டாம் நாள். இந்த ரெண்டு நாளும் ஆபிஸ் வேலை பார்க்க வேணாம். அதுலயே ரொம்ப ஆளுங்க குஷி ஆயிருவாங்க.

லெட்டரை அம்மிணிட்ட காட்டுனதும், “கொழுப்பு டெஸ்ட் செய்வாங்களா?”ன்னு அக்கறையா கேட்டாங்க. “எல்லா டெஸ்ட்டும்”னு சீரியசா பதில் சொன்னேன். மகனார் சிரிச்சப்ப தான் கேலி செஞ்சிருக்காங்கன்னு புரிஞ்சிது.

அவங்க சொன்ன நேரத்துக்கு ஹாஸ்பிடல் போயிட்டேன். யூரின், ப்ளட் எல்லாம் கொடுத்தாச்சு. அடுத்தது மூச்சு. ஹூக்கா மாதிரி வாயில் சொருகி இடது கையை மேலே தூக்கினால் இழுக்கணும். மூச்சைத்தான்! இறக்கினால் கீழே விடணும். புஸ் புஸ்ஸுன்னு ஒவ்வொருத்தரும் மூச்சு விட்டப்போ பார்க்க வேடிக்கையா இருந்துச்சு. நர்சம்மா, ஒவ்வொருத்தரோடயும் போராடுனாங்க. அதுல அவங்களுக்கே மூச்சு வாங்குச்சு.

அடுத்து ஆடியோமெட்ரிக்குப் போனா, அதாங்க... காது நல்லா கேக்குதான்னு பார்க்கிற டெஸ்ட். என்கிட்ட ஹெட்போன்ஸ் கொடுத்து மாட்டிக்கச் சொல்லிட்டாங்க. பாட்டு ரெகார்டிங்குக்கு போனாப்ல இருந்துச்சு. சவுண்டு ப்ரூப் ரூம்ல வச்சு கதவை அடைச்சுட்டாங்க. “எந்தக் காதுல மியூசிக் கேக்குதோ அந்தப் பக்கம் கையைத் தூக்குங்க”ன்னு ரூமுக்கு போறதுக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க. கண்ணாடி கதவுக்கு அந்தப் பக்கம் ஒக்காந்துக்கிட்டு மியூசிக் போட்டாங்க.

கையைத் தூக்கினேன். பத்து நிமிசம் மாத்தி மாத்தி கையைத் தூக்குனதுல குழம்பிப் போய் வலது கையைத் தூக்குறதுக்கு பதிலா இடதைத் தூக்கினேன். பத்து நிமிசம் முடிஞ்சப்புறம் வெளியே விட்டாங்க. ஆர்வமாய்க் கேட்டேன். “எனக்கு காது நல்லா கேக்குதா?”ன்னு. அந்த நர்சம்மா பதில் சொல்லாம இருக்கவும் டவுட் ஆயிருச்சு. முன்னாடி வந்து நின்னு வலது கையைத் தூக்கி காது காதுன்னு கத்தவும் பொறுமையா, “டாக்டர் நாளைக்கு சொல்வார்”னு விரட்டிட்டாங்க.

வீட்டுக்கு வந்து மொபைலை சார்ஜில் போட்டுட்டு அலுப்போட சோபாவில் சாஞ்சேன். அம்மிணி வந்தாங்க. “எத்தனை தடவை கூப்பிடறது. டெஸ்ட்லாம் முடிஞ்சிதா... என்ன சொன்னாங்கன்னு கேட்டுகிட்டே இருக்கேன். பதிலே சொல்லாம கம்னு இருந்தா எனக்குப் பயம் வராதான்?”னு கண்ணுல வராத தண்ணியைச் துடைச்சுக்கிட்டாங்க.

கொஞ்சம் இருன்னு சொல்லிட்டு அந்தப் பக்க அறையில் இருந்த மொபைல்ல நோட்டிபிகேஷன் வந்த டொய்ங் சத்தம் துல்லியமாய்க் கேட்கவும்... என்னவாக இருக்கும்னு ஓடுனேன்.

அம்மிணி சத்தமாய் முணுமுணுத்தது துல்லியமாய்க் கேட்டுச்சு. “நம்ம கூப்டா காதுலயே விழாது. மொபைல் சத்தம்மட்டும் கரெக்டா கேக்கும். காரியக்கார செவிடு” அம்மிணி திட்டுனது நல்லா கேக்கவும் மறுபடி சந்தோஷம். காதுல ஒரு பிரச்சினையும் இல்லைன்னு.

மறுநாள் அப்டமன் டெஸ்ட் (வயிறு ஸ்கேனிங்). வெளியே காத்திருந்தப்போ ஆபிஸ் அண்ணாச்சிங்க எல்லாரும், “உனக்கு எவ்ளோ... உனக்கு எவ்ளோ?”ன்னு முதல் நாள் ஸ்கோரை விசாரிச்சுக்கிட்டோம். மெடிக்கல் புக்கைக் கையில கொடுத்திருந்தாங்க. குறைச்ச ஸ்கோர் அடிச்சவங்க முகத்துல அத்தன குஷி.

“இனிமே ஒழுங்கா வாக்கிங் போகணும்”னு ஒரு தொப்பை சொல்லுச்சு. “நொறுக்குத் தீனிய தொடவே கூடாது”ன்னு இன்னொருத்தர் சீரியசா சொன்னாரு. அவருதான் ஆபிஸ்ல சீட்டு சீட்டா போய் திங்கிறதுக்கு எதுனாச்சியும் இருக்கான்னு நோண்டுவாரு.

எல்லாரும் அமைதியா இருங்க. “ஒவ்வொருத்தரையா டாக்டர் பார்ப்பாரு”ன்னு நர்ஸ் சொன்னாங்க. அவங்க மேஜைல எங்க மெடிக்கல் புக்கை வாங்கி வச்சுக்கிட்டாங்க. என் முறை வந்துச்சு.

“படுத்துக்குங்க”னாரு டாக்டர். ஒடம்பு லைட்டா ஒதறுச்சு. படுத்தேன்.

“ஷர்ட் பனியனை மேலே தூக்குங்க... பேன்ட்டை தளர்த்துங்க”ன்னு சொல்லிக்கிட்டே போனாரு.

உள்ளுக்குள் ஒரு உதறல் லேசாய். இன்னிக்கு தான் அப்டமன் டெஸ்ட். வெளியே போஸ்டரில் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிய முற்படுவது கிரிமினல் குற்றம்... ப்ளா ப்ளா என்று திட்டி எழுதியிருந்துச்சு. அதைப் படிச்சுத் தொலைச்சுட்டு உள்ளே வந்ததுல கெக்கே புக்கேன்னு அடி வயித்துல சிரிப்பொலி சானல் ஓடுச்சு.

கொழ கொழன்னு எதையோ ஜெல்லைத் தடவி கிச்சு கிச்சு மூட்டினார். “இப்படித் திரும்புங்க... அப்படித் திரும்புங்க... மூச்சை இழுத்துப் பிடிங்க.”

நைசா அவர் முகத்தைப் பார்த்தேன். மானிட்டரைப் பார்க்க முடியாததால்.

டாக்டர் மூஞ்சில குழப்பம் தெரிஞ்சுது. வயித்து மேல நாற்கர சாலையே போட்டுட்டார் ஜெல்லைத் தடவி.

ஏதோ முனகிட்டே தலையை ரெண்டு பக்கமும் ஆட்டுனார். மானிட்டரைப் பார்த்துட்டு என் வயித்தையும் பார்த்தார். அப்புறம் என்னைப் பார்த்தார்.

“எழுந்து ஒக்காருங்க. இந்தாங்க. துடைச்சுகிட்டு சட்டையைப் போட்டுக்குங்க”னு நிதானமாச் சொன்னார். முகத்துல மாஸ்க் தலைல தொப்பி போட்டிருந்தாரு. அதனால கண்ணு மட்டும் தெரிஞ்சுது. அதுவும் மூக்குக் கண்ணாடிக்குள்ர.

“நீங்க எந்த ஏரியால வொர்க் பண்றீங்க?”ன்னு கேட்டார். “அக்கவுன்ட்ஸ்”னு சொல்லும்போதே பீதி கெளம்புச்சு. “ஆமா... உங்க பொழுதுபோக்கு என்ன?”ன்னு சம்பந்தம் இல்லாம கேட்டாரு. “எழுதறது”ன்னு சொன்னதும் “வாழ்த்துகள்”னாரு.

“இன்னும் எழுத வேண்டிய கரு உங்ககிட்ட நிறைய இருக்கு. அப்டமன் டெஸ்ட்ல தெரிஞ்சுது எழுதுங்க. ஆல் தி பெஸ்ட்”னு சொல்லிட்டு தொப்பியையும் மாஸ்க்கையும் கழட்டுனாரு.

அடப்பாவி. என் க்ளாஸ்மேட் சுந்தர்! பள்ளில ஒண்ணா படிச்சோம். டாக்டராகணும்னு அவனுக்கு ஆசை. என்னைப் பார்த்ததும் அடையாளம் தெரிஞ்சிருச்சாம். கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம்னு நினைச்சானாம்.

நீங்க ஏதாச்சும் சீரியசா நினைச்சீங்களா. கொஞ்சம் இருங்க... நீங்க அடிக்க வரதுக்குள்ர ஓடிடறேன்!

x