நிழற்சாலை


கைகூடாத தவங்கள்

நள்ளிரவு உறக்கத்தில்

எங்கோ புரண்டுபடுத்த பிள்ளை

விடியலில் விழிப்பு தட்டி

நீட்டிய என் கரம் தேடிவந்து

தலை சாய்த்து உறங்குகையில்

இன்னொரு நீளுறக்கத்துக்கான

ஆசையைத் துறந்த புத்தனாகத்தான்

எழுந்தாக வேண்டியிருக்கு

ஒவ்வொரு விடியலிலும்...

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

நட்சத்திரக் கனவுகள்

பலூன் பலூனாய்ப் பூக்குது

பாப்புக்குட்டியின் கனவுமரம்

அச்சோ நட்சத்திரத்தின் முனை பட்டுவிடுமோ

என்ற கவலை வேறு

நட்சத்திரங்களை வேண்டுமானால் வேறு வானத்துக்கு அனுப்பிவிடுவோமா என்றாள் அம்மா

பாவம்மா

குறுக்கே குறுக்கே ஓடாம

குனிஞ்சு பலூனைத் தொடாம

சமத்தா இருன்னு சொல்லேம்மா

நானே கேக்கறேன்

நட்சத்திரம் கேக்காதா

என்றொரு கேள்வி வேறு


நட்சத்திரத்துக்கு ஆசைதான்

பாப்புக்குட்டி சொன்னதைக் கேட்க

பலூன் உடைந்துவிடுமோ என்றுதான்

வானத்திலேயே

சுற்றுகிறதாம்

அந்தப் பாசக்கார நட்சத்திரம்.


- உமா மோகன்

மேக மெத்தை

மழை ஓய்ந்திருந்த

வானத்தில்

நகரும் மேகங்களைக் கண்டவன்

அப்பா அங்க இருக்குற

வெள்ளை மேகத்து மேல

நாம படுக்க முடியுமா

படுத்தா கீழே விழுந்திருவோமா

சொல்லுப்பா என்கிறான்

மகனின் கேள்விக்கு

படுக்க முடியுமென்று விடையளித்தேன்

ஒரு கவிஞனின் பதில்

வேறு என்னவாக இருந்துவிடப்போகிறது!

- மகேஷ் சிபி

உறுத்தல்


ஓனர் குழந்தையை

காரிலேற்றி

ஊர்சுற்றிக் காட்டும்போது

நினைவுக்கு வருகிறது

அவசரமாய்

வேலைக்குக் கிளம்புகையில்

காலைக் கட்டிப்பிடித்து

ஒரு ரவுண்டுக்கு கெஞ்சிய

மகளின் முகம்.

- காசாவயல் கண்ணன்

கருணைச் சாமி!

அருள் வந்தவுடன்

ஆட்டை வெட்ட

அரிவாளோடு காத்திருக்கும்

பூசாரியை சோதிக்கவே

இன்னும் அவருக்குள்

இறங்காமல் இருக்கிறார் சாமி

என ஊர் பேசியது

கருணை கொண்ட சாமி

காப்பாற்ற எண்ணி

இந்நேரம் இறங்கியிருக்குமோ

ஆட்டுக்குள்!

- ப்ரணா

பறத்தலின் பசி


பசியாற்ற விதவிதமான

பழங்கள்

நவதானியக் குவியலென

தேடாமல் அலையாமல்

கிடைத்துவிடுகிறது

கூண்டுக் கிளிக்கு

பறக்க வேண்டுமென்ற

கனவு மட்டும்

நிறைவுறாமல்

நீள்கிறது

அமுதசுரபியாலும்

அடங்கிவிடாத பசியாக!

- கவிப்ரியா

சாட்சியம்


பசுமரக் கிளைகள் ஒடித்துக்

கண்கள் செருக ரசித்துண்ட

காலத்தின் நினைவுகள் உந்த


நாடாகிப்போன காட்டை ஊடறுத்துச் செல்லும்

கால் தடம் பதிக்க வழியற்றக்

கருஞ்சாலைகளில்

நடக்கிறது யானைக் கூட்டம்


கிடைத்ததை உண்டு திரியும்

அவற்றின் எச்சத்தில்

தென்படும் நெகிழிப் பைகள்

மட்காமல் சுமக்கின்றன

மனிதக் குரூரத்திற்கான சாட்சியத்தை!


- கி.சரஸ்வதி

பற்றுதல்


அடித்த

துடைப்பத்தின்

குச்சிகளில்

ஒன்றைப்

பிடித்தவாறே

உயிர் விட்டிருந்தது வண்டு.


- ந.சிவநேசன்

கடற்கரைக் கவிதை

மணல் வீடு

கட்டிய குழந்தை

அழைக்காமலேயே

அந்த வீட்டிற்குள்

குடிபெயர்ந்துவிட்டது

அலை கடல்

பிரபஞ்சம் அளவு மனம்

நிறைந்த

மகிழ்ச்சியில்

வீடு சேர்ந்த குழந்தையின்

பாதங்களில் ஒட்டியிருந்தன

நட்சத்திரத் துகள்கள்.

- ப.தனஞ்ஜெயன்

x