கண்மணி குணசேகரனுக்கு அமெரிக்க தமிழர்கள் விருது


விருது வழங்கும் நிகழ்வு

நடு நாட்டு எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு, ‘வட அமெரிக்கா வன்னியர் சொந்தங்கள்’ என்ற அமைப்பின் சார்பில். ‘வாசம்’ விருது அளிக்கப்பட்டுள்ளது.

விருது நிகழ்வு

வன்னியர் வாழ்வியலை முன்னெடுக்கும் கலை இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் பொருட்டு, 'வன்னியர் சொந்தங்கள் வட அமெரிக்கா' அமைப்பின் சார்பில் ‘வாசம்’ என்ற விருதும் பணமுடிப்பும் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. முதலில் பெருவிழாவாக நடத்த தீர்மானிக்கப்பட்டு, பரவிவரும் கரோனா சூழல் கருதி எளிய நிகழ்ச்சியாக விருத்தாசலம் அருகே மணக்கொல்லையில் உள்ள அவரது இல்லத்தில் தைப் பொங்கல் நாளன்று நடைபெற்றது.

அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பியிருக்கும் திருமதி ரோகிணிமூர்த்தி, பாலா ஆகியோரோடு பத்ரகோட்டை பூவராகமூர்த்தி, இலக்கிய விழா தொகுப்பாளர் ரோகினி, சுந்தர், பார்வதிபுரம் முருகன், வல்லம் சௌந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வல்லம் ஓவிய சகோதரர்கள், தாங்கள் வடிவமைத்த கண்மணி குணசேகரனின் ஓவியமொன்றை பரிசளித்தனர்.

கண்மணி குணசேகரன்

அமெரிக்க வாழ் வன்னியர் சங்கங்களின் சார்பில் வழங்கப்படும் விருதுக்கான பாராட்டுப் பட்டயத்துடன், பண முடிப்பும் பழத் தட்டில் வைத்து கண்மணி குணசேகரனிடம் வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில், ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுமெனவும் இதன்மூலம் வன்னியர்களின் வாழ்வு மேன்மையைச் சொல்லும் கலை இலக்கியப் படைப்புகள் சமூகவெளியில் கூடுதல் கவனம் பெறுமென்றும் வாசம் அமைப்பினர் வாழ்த்துரையில் தெரிவித்தனர்.

x