உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ககன் தீப் சிங் பேடி அட்வைஸ்!


சென்னை: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி, யோகா மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

உலக உயர் ரத்த அழுத்த தினத்தையொட்டி, சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு மற்றும் முழு உடல் பரிசோதனை திட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி பேசியது - “உயர் ரத்தம் அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவை அதிகமாக மக்களை பாதிக்கும் நோயாக உள்ளது.

உயர் ரத்த அழுத்தம் குறித்து பொதுமக்களுக்கு அதிகமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ரத்த அழுத்தத்தினால் நுரையீரல் பாதிப்பும், தொடர்ந்து இதய பிரச்சினையும் ஏற்படலாம். 24 சதவீதம் மக்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், 10 சதவீதம் மக்களுக்கு ரத்தம் அழுத்தத்துடன் சர்க்கரை நோய் பாதிப்பும் உள்ளது.

அதிக உப்புள்ள உணவு பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.