கருப்பைக்கு வெளியிலும் குழந்தை வளருமா?


ஆரம்பக்கால டேட்டிங் ஸ்கேன் மிக முக்கியமான ஒரு பாதிப்பைக் கண்டறியவும் உதவுகிறது. எக்டோபிக் கர்ப்பம் (Ectopic pregnancy) எனப்படும் பாதிப்புதான் அது. கரு கருப்பையில் பதியாமல், கருப்பைக்கு வெளியே தங்கும் நிலை இது.

அதாவது, கருமுட்டை மற்றும் விந்தணு சேர்ந்து, ஃபெலோப்பியன் குழாய் என்ற கருக்குழாயில் உருவாகிவிடுவதுண்டு. அப்படி உருவாகும் கருவானது, கருப்பையில் வந்து பதிந்து, வளராமல், கருக்குழாயிலேயே வளரும் நிலை ஏற்படுவதுண்டு. இது நூற்றில் ஒருவர் அல்லது இருவருக்கு (1-2%) தான் ஏற்படும்.

தாயின் உயிருக்கே ஆபத்து!

இருப்பினும் சரியான நேரத்தில் கண்டறியப்படாமல் சிகிச்சைக்கு வரத் தாமதமாகும்போது, கருக்குழாய் வெடித்து பெரும் ரத்தக்கசிவு ஏற்படக்கூடும். அதனால் தாயின் உயிருக்கே பேராபத்து விளையக்கூடும். எனவே ஆரம்பக்கால டேட்டிங் ஸ்கேன் மிகவும் முக்கியத்துவம் அடைகிறது.

பொதுவாக Trans-abdominal என வயிறு வழியாக இந்த ஸ்கேனிங் மேற்கொள்ளப்படுகிறது. தேவைப்படும்போது, பிறப்புறுப்பு வழியாகவும் (Transvaginal Ultrasound) மேற்கொள்ளப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகையால், கருப்பைக்கு உள்ளே அல்லது வெளியே குழந்தை வளர்கிறதா என்பதை இந்த 7-8 வாரத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் உறுதி செய்துவிடும். அதுமட்டுமின்றி கருப்பையில் இருப்பது குழந்தைதானா, எத்தனை குழந்தைகள் என்பதையும் கண்டறிய உதவும். குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறதா, அதன் வளர்ச்சி மற்றும் இதயத்துடிப்பு சரியாக இருக்கிறதா என்பதுவரை உறுதி செய்துகொள்ள இந்த ஸ்கேன் கைகொடுக்கும்.

கதிரியக்க பாதிப்பு உள்ளதா?

இனி பொதுவாக நிலவும் மற்ற சந்தேகங்களான, கர்ப்ப காலத்தில் எத்தனை முறை இந்த ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், வளரும் கருவிற்கு இது பாதுகாப்பானதுதானா, இதில் கதிரியக்கம் போன்ற பாதிப்புகள் எதுவும் உள்ளனவா போன்றவற்றுக்கு வருவோம். பொதுவாக மூன்று அல்லது நான்கு முறை கர்ப்ப காலத்தில் இது தேவைப்படுகிறது. Ultra high frequency sound waves எனும், மனிதக் காதுகளால் கேட்க முடியாத ஒலிக்கற்றைகள் மற்றும் அவற்றின் எதிரொலிகளைக் கொண்டுதான், இந்த அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயங்குகிறது. இதில் கதிரியக்கம் போன்ற எந்தவித பாதிப்புகளும் இல்லை.

ஆகவே இது தாய்க்கும், சேய்க்கும் முற்றிலும் பாதுகாப்பானதுதான் என்று வரையறுத்துக் கூறுகின்றனர் மருத்துவர்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்பக்கால டேட்டிங் ஸ்கேன் மூலமாகக் கர்ப்பிணிப் பெண்ணின் கரு வளர்ச்சியையும், வாரங்களையும் உறுதி செய்து கொண்ட நாம், ஸ்கேனிங் பற்றிய முழுமையான புரிதலோடு, அடுத்து என்ன என்பதை இனி வரும் வாரங்களில் தொடர்ந்து அறிவோம்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
’டேட்டிங் ஸ்கேன்’ தேவையா?

x