எனக்கு ஓட்டுநர் பணி கொடுங்கள்!


அமைச்சரிடம் பேசும் சோனியா...

கால் நூற்றாண்டுக்கு முன்பே, ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரை உருவாக்கிய பெருமை தமிழகத்துக்கு உண்டு. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி தான் அந்தப் பெண்மணி. 3 குழந்தைகளுக்குத் தாயான வசந்தகுமாரி, 1993-ல், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார்.

பேருந்து ஓட்டும் வசந்தகுமாரி...

பெண் என்பதற்காக எத்தகைய சலுகையும் கோராமல், தினமும் இரவு 10 மணி வரை நாகர்கோவில் டு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தை ஓட்டினார் வந்தகுமாரி. அவரிடம் அடிக்கடி கேட்கப்பட்ட ஒரு கேள்வி: ”ஆண்களுக்கே சவாலான இந்த வேலையை நீங்க எப்படி செய்றீங்க?” என்பதே.

அந்தக் கேள்வியை சிரிப்பால் கடந்து, 24 ஆண்டுகள் பணி செய்து 2017-ல் ஓய்வுபெற்றார் வசந்தகுமாரி. அவரைப் பார்த்து ஊக்கம் பெற்று கனரக வண்டிகளை ஓட்டும் பணியில் இணைந்த பெண்கள், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் உண்டு. 2020 டிசம்பரில், ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரின் புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பகிர்ந்தது பலருக்கு நினைவிருக்கலாம். அவருக்கு முன்பே 2015-ல், டெல்லியின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரானார் சரிதா.

இந்நிலையில், 2022 புத்தாண்டு தினத்தன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியது. 25 வயதான சோனியா, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அமரிந்தர் சிங் ராஜா சென்று கொண்டிருந்த காரை வழி மறித்து, தனக்குப் பேருந்து ஓட்டுநர் பணி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

“உங்களது பெற்றோர் என்ன செய்கிறார்கள்?” என்று அமைச்சர் கேட்க, “அப்பா இறந்துவிட்டார். அம்மா மட்டும்தான் எனக்கு இருக்கிறார். அவர் ஹரியாணாவில் வசிக்கிறார்” என்று சொன்னார் சோனியா. ”உங்களால் பேருந்து ஓட்ட முடியுமா?” என்று அடுத்த கேள்வியை அமைச்சர் கேட்க, “நிச்சயமாக” என்று புன்முறுவலுடன் உறுதியாகச் சொன்னார் சோனியா.

உடனடியாக, போக்குவரத்துத் துறையின் பெண் உயரதிகாரி ஒருவரை அலைபேசியில் அமைச்சர் அழைத்தார். அலைபேசியை ஸ்பீக்கர் மோடுக்கு மாற்றிவிட்டு, ”ஹரியாணாவைச் சேர்ந்த சோனியாவிடம் கனரக லைசென்ஸ் உள்ளது. இதுவரை தனக்கு யாருமே உதவவில்லை என்கிறார் அவர். எப்படி வண்டியைச் செலுத்துகிறார் என்று அவரை ஒரு மாதம்வரை சோதித்துப் பார்த்துப் பேருந்து ஓட்டும் பணி கொடுக்கலாம்” என்கிறார் அமைச்சர்.

மறுமுனையில் இருக்கும் பெண் அதிகாரியோ, “பேருந்தின் ஆண் நடத்துநர்கள் மோசமாக நடந்து கொள்வார்களே” என்கிறார். “அதை நான் சகித்துக் கொள்வேன்” என்று சற்றும் தாமதிக்காமல் சொல்கிறார் சோனியா.

இதுதான் இன்றைய நிலைமை. விரல்விட்டு எண்ணக்கூடிய பெண்கள்தான் இன்று இந்தியாவில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் ஒன்றாக இத்துறை இன்றுவரை நீடிக்கிறது. ‘பொதுப் போக்குவரத்து சேவைப் பணி பெண்களுக்குப் பாதுகாப்பானது அல்ல’ என்ற சூழல்தான் அதற்கு முதன்மையான காரணம். பஞ்சாபின் வசந்தகுமாரியாக சோனியா மாறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

x