குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் ‘ஸ்மோக் பிஸ்கெட்’ விற்பனை @ திருப்பூர்


திருப்பூர்: கோயில் திருவிழாக்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவார்கள். கோயில் திருவிழாக்களின் போது குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நொறுக்கு தீனிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும் உண்டு. அதனை விற்கும் வியாபாரிகளுக்கும் உண்டு. பஞ்சு மிட்டாய் தடையை தொடர்ந்து, தற்போது ஸ்மோக் பிஸ்கெட் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி தேர்த் திருவிழாவின் போது, குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மோக் பிஸ்கெட்டுக்கு மூலப்பொருளான லிக்யூடு நைட்ரஜன் 11 லிட்டரை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து, அங்கு கடை வைத்திருந்த கண்ணன் என்பவரை எச்சரித்தனர்.

இது தொடர்பாக அவிநாசியை சேர்ந்தவர்கள் கூறும்போது, “அவிநாசிலிங் கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவில், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய, லிக்யூடு நைட்ரஜன் பயன்படுத்தி ‘ஸ்மோக் பிஸ்கெட்’ விற்பனை செய்யப்படுவது உடனடியாக தடை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் உடலுக்கு உபாதை ஏற்படுத்தக்கூடிய, குறிப்பாக குழந்தைகளின் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ‘ஸ்மோக் பிஸ்கெட்’ விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர்கள் வாங்கி வாயில் போட்டால் வாய், மூக்கு, காது வழியாக புகை வெளியேறும். இதனை சிறுவர், சிறுமிகள் காசு கொடுத்து வாங்கி ஒரு விதமான ஆர்வத்தில் சாப்பிடுகின்றனர். ஆனால், இந்த பிஸ்கெட்டில் வைக்கப்படும் லிக்யூடு நைட்ரஜன் அளவு சிறிது கூடினாலும், நுரையீரல் உடனே பாதிக்கப்படும் என்ற ஆபத்தை உணர்வதில்லை. கண்களும் பாதிக்கப்படுகின்றன.

அவிநாசி சித்திரை தேர்த் திருவிழாவின் போது ஸ்மோக் பிஸ்கெட்டுக்கான மூலப்பொருள் லிக்யூட் நைட்ரஜனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினர். (கோப்புப்படம்)

குழந்தைகள் வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் செய்யும் பல விஷயங்கள் ஆபத்தை உண்டாக்குகின்றன. தற்போது அபராதம், சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும், இவற்றை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முழுமையாக ஒழிக்க முடியும்” என்றனர்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறும்போது, “பல்வேறு இடங்களில் திருவிழாக்கள் நடக்கும். அந்தந்த பகுதிகளிலுள்ள அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது ‘ஸ்மோக் பிஸ்கெட்’ விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்யப்பட்டால் பொது மக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்” என்றனர்.