புதுச்சேரி மாற்றுத்திறனாளி மாணவியின் மேல்படிப்புக்கு கைகொடுத்த தமிழக அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளி


புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள விழித்திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவியின் மேல் படிப்புக்கு தமிழக அரசின் உதவி பெறும் சிறப்பு பள்ளி கை கொடுத்துள்ளதால் இன்று முதல் அவர் தனது படிப்பை தொடங்குகிறார்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஆனந்தரங்கப் பிள்ளை அரசு சிறப்பு பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்றது. இந்தச் சிறப்பு பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவி சண்முகப்பிரியா பொதுத்தேர்வில் 442 மதிப்பெண் பெற்றார். முழுமையாக பார்வைத்திறன் இழந்த இவர் ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்பு பள்ளியில் படித்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியா, ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதை தன் விருப்பமாக கூறினார்.

ஆனால் புதுச்சேரியில் உயர் படிப்புக்கு அரசு சிறப்பு பள்ளி இல்லை. இதனால் மாணவி மற்றும் அவர் குடும்பத்தார் மிகவும் வருத்தடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக அரசின் உதவி பெறும் சிறப்பு பள்ளியான தேனாம்பேட்டையில் இயங்கும் சிறுமலர் சிறப்பு பள்ளியின் நிர்வாகிகள் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டனர்.

மாணவி சண்முகப்பிரியாவுக்கு மேல்படிப்பு மற்றும் விடுதி செலவுகளை முழுமையாக ஏற்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து மாணவியை தமிழக அரசின் உதவி பெறும் சிறப்பு பள்ளியில் அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். இதன்படி இன்று முதல் மாணவி சண்முகப்பிரியா மேல்நிலை படிப்பை மகிழ்வுடன் தொடங்கி தன் கனவினை நோக்கி அடுத்த நகர்வை எடுத்துள்ளார்.

x