நிழற்சாலை


வாழ்க்கை

கிழிந்த சட்டை

ஏழ்மையைத்

தைக்கிறாள் தாய்

ஒற்றை ஊசியில்...

அறுந்த புத்தகப் பை

வறுமையை

இறுக்குகிறாள் தாய்

துருவேறிய ஊக்கில்!

- தஞ்சை சதீஷ்

காலவெள்ளம்

இறுதியாகக் கல்லறைத் தோட்டத்திற்குள்ளும்

நுழைந்திருந்தது

வெள்ள நீர்

புதையுண்டிருக்கிற சவப்பெட்டிகளின்

இடுக்குகளின் வழியே

வடிகாலற்ற மழைநீர் தேங்கியதில்

மிதக்கத் தொடங்கிவிட்டன

எலும்பு துகள்கள்

எப்போது வேண்டுமெனாலும் விழலாம் என்கிற கதியில்

சரிந்திருக்கிற தோட்டத்தின் பெயர்ப் பலகை

விவாகரத்தின் இறுதிநாள் தீர்ப்புக்காக

பேருந்தில் பயணிக்கிறவனின் கண்ணில் பட்டு

சமிக்ஞையாக ஒளிர்கிறது

கணவனின் நினைவு நாளன்று

கல்லறைக்கு வழிபாடு செய்ய வந்தவள்

இடுப்பில் குழந்தையோடும்

கையில் மெழுகுவர்த்தியோடும்

ததும்பிய கண்ணீரோடும் நிற்க

காலவெள்ளத்தின் ரசவாதங்களை

அசைபோட்டவாறு அலைந்து திரிகிறது

இன்னமும் சாந்தியடையாத

மூதாதைய ஆத்மா ஒன்று!

- வேலாயுத முத்துக்குமார்

காலி மைதானங்கள்

கிழக்கிலிருந்து மேற்காகச் செல்லும்

அகன்ற அந்த மண் தெருவில்தான்

பள்ளி முடிந்து வந்ததும் தொடங்கும்

பச்சைக் குதிரை, கோலிகுண்டு என

விளையாட்டுகள்

ஒளி மங்கிய இருளில் களைப்புடன்

முடிந்தாலும்

மறுநாள் மாலை

மறுபடியும் தொடங்கும்

பசுமை மாறாத பால்யத்தை

அசைபோட்டபடி கண்ணயர்ந்தவனைத்

தட்டி எழுப்பிய

மனைவி சொன்னாள்

‘ஃபோன்ல ரொம்ப நேரமா

கேம் விளையாடிக்கிட்டு இருக்கான்...

அவனைக் கொஞ்ச நேரம்

கிரவுண்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போலாம்ல.’

- காமராஜ்

அதிர்ஷ்டம்

யானைக் கொம்பு

நரிவால்

அதிர்ஷ்டக் கயிறுகள்

கண் திருஷ்டிக் கிழங்கு

விழியுருட்டும் பொம்மைகள்

என்று அத்தனையும் துணைக்கிருக்கின்றன

ஏதும் விற்காத நாளொன்றின்

பசி இரவைக் கடப்பவனோடு.

- கி.சரஸ்வதி

நிலவின் பயணம்

பானை நீரில்

மிதக்கும் நிலவை ஆசையாக

சொப்புக்குள் பிடித்து வந்து

தனக்கு விருப்பமான இடத்தில்

மறைத்து வைத்துவிட்டு

உறங்கப் போய்விட்டாள்

பவித்ரா பாப்பா.

அவள் உறங்கியதை

உறுதிபடுத்திய பின்னரே

விண்ணுலகம்

புறப்பட்டுச் சென்றது நிலா.

- பாரியன்பன் நாகராஜன்

ஹைக்கூ பூக்கள்

புதுப்பிக்கப்படும்

கோயில் கோபுரம்

தூரத்தில் புறாக்கூட்டம்.

இழுவை இயந்திரம்

உழுவதைப் பார்த்தபடி

அசைபோடும் உழவுமாடு.


ஏழையின் வீடு

அருள்புரியும் மகாலட்சுமி

தினசரி நாள்காட்டியில்.


- ரா. கணேஷ்

வீடு


ஆசிரியர் தரும்

வீட்டுப் பாடத்தில்

பாடம்தான் இருக்கிறது

வீடு இல்லை

எனக்கு


தெருவோர நடைமேடையில்

படிந்திருக்கும் மண்ணெல்லாம்

என் உறக்கத்தின்

சாம்பல்தான்


என் வானின்

விண்மீன்களெல்லாம்

என் ஏழ்மையின் அணுக்கள்


என் புத்தகம் தெருவிளக்கின் ஒளிக்கீற்றில்

குச்சு வீடு கட்டி

என் கல்வியைத்

தங்கவைத்திருக்கிறது


மழையின் வீதியில்

என் புத்தகத்திற்கு

நானே கருங்கல் வீடாகியிருக்கிறேன்!


- செ.நாகநந்தினி

ரட்சகர்கள்

அடிபட்டுச் சாலையில்

தனித்துக் கிடப்பவனிடம்

உயிர் இருப்பதற்கான

அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது

மேலும் கீழும் அசையும் உடல்.


மோதிச் சென்ற வாகனத்தை

ஓட்டிய மனிதர் வீடுசேர்ந்திருக்கலாம்

பத்திரமாக.


நடைபாதையில் வசிக்கும்

ஒருவன் தலை தூக்கி

வாயில் இருக்கும் மண் அகற்றுகிறான்

இன்னொரு மனிதன்

நீர் புகட்டி பேச்சுக்கொடுத்துக்கொண்டிருக்கிறான்

ஆம்புலன்ஸ் வரும் வரை

உயிரைப் பிடித்து வைப்பதற்கான

பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன

மரணத்துடன்.

- மகேஷ் சிபி

அன்னை

கவலைப்படாதீங்கம்மா

எந்த ஆஸ்பத்திரிக்கு

வேணும்னாலும்

கூட்டிப் போறேன் எனச்

சொல்லும் மகனிடம்

உன் வீட்டுக்கு

கூட்டிப் போகமாட்டாயா என

ஏக்கத்தோடு பார்த்தாள்

தனி வீட்டில்

தங்கவைக்கப்பட்டிருக்கும்

தாய்.

- காசாவயல் கண்ணன்

அப்பாவின் கால் தடம்

விரத காலங்களில் ஆலயம் சென்று

வீடு திரும்பும் அப்பாவின் வருகையை

நடந்துவரும் நனைந்த பாதங்களின்

அதிர்வினை வைத்தே அறிந்துவிட முடியும்.


அலுவலகம் முடிந்து

வீடு திரும்பும் அவரின் வருகையை

ஹைஹீல்ஸ் ஷூவின்

டக் டக் ஓசை காட்டிக்கொடுக்கும்.

கடைவீதி சென்று வீடு திரும்பும்போது

அவரது வருகையை

கான்பூர் காலணிகளின்

சரக் சரக் ஓசை உணர்த்திவிடும்.

மதுக்கடைகளிலிருந்து

வீடுதிரும்பத் தொடங்கிய நாள் முதல்

அப்பாவின் கால் தடம்

நிலத்தில் பதிய மறுப்பதாக எண்ணியதுண்டு.


இறுதியாய்

ஒருமுறை

பல்வேறு காலதிர்வுகளோடு

வீடு சேர்ந்தவர்

அதே அதிர்வுகளோடு

வெளியேறினார்

அப்பொழுது நாங்கள்தான்

அதிர்ந்துகொண்டிருந்தோம்.


- மகிவனி

x