எனது முதல் வாசகரே அப்பா தான்!


அனிதா பொன்னீலன்

இலக்கிய உலகில் அனைவராலும் அன்புடன் “அண்ணாச்சி” என அழைக்கப்படுபவர் பொன்னீலன். சாகித்ய அகாடமி விருதுபெற்று எழுத்தாளரான இவர், இளம் படைப்பாளிகளை உச்சிமுகர்ந்து பாராட்டுபவர்; இலக்கிய உலகுக்கு வரவேற்பு செய்பவர்.

இப்போது இவரது மகள் அனிதா பொன்னீலன், ‘சாதியைப் பேசத்தான் வேண்டும்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை மொழிபெயர்ப்பு செய்து முடித்திருக்கிறார். சென்னை புத்தகக் காட்சியில் இந்த நூல் வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், பொன்னீலன் வீட்டு அடுத்த இலக்கிய வாரிசு என அனிதாவைக் கொண்டாடுகிறது படைப்புலகம்.

அனிதா பொன்னீலன்

எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்குள் தன்னை திணித்துக் கொள்ளாமல், நல்ல கதைக்காக காத்திருக்கும் தேர்ந்த நடிகரைப் போல, இலக்கிய உலகில் காத்திருப்பை தவமென நிகழ்த்துபவர் அனிதா. இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான ’ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு’ வெளியாகி 6 ஆண்டுகள் ஆகிறது. அடுத்ததாக இப்போது ‘சாதியைப் பேசத்தான் வேண்டும்’ என்னும் கட்டுரைத் தொகுப்பை மொழியாக்கம் செய்திருக்கிறார். அனிதாவை குமரி மாவட்டத்தில் உள்ள மணிக்கட்டிப் பொட்டல் கிராமத்தில் காமதேனுவுக்காக சந்தித்தோம்.

“அப்பாவைப் பார்த்தே வளர்ந்ததால் அப்பாவின் கம்யூனிஸ பிடிப்பு எனக்குள்ளும் உண்டு. எங்கள் கிராமத்தில் அன்றைய நாளில் பெண்பிள்ளைகள் தனியாகப் பேருந்து ஏறி நாகர்கோவில் செல்லமுடியாது. ஆண்களோடு பேசும் சுதந்திரமும் எங்கள் கிராமப்பக்கம் தலைக்காட்டவில்லை. அப்போதே எங்களுக்கு இதில் எல்லாம் சுதந்திரம் கொடுத்த அப்பா, சமூகத்தின் பல கட்டமைப்புகளையும், முரண்களையும் களையும் முற்போக்கு சிந்தனையுடன் வளர்த்தார். அதனால் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்யும் நோக்கமும் இயல்பாகவே என்னுள் பிறந்தது. பிறமொழிப் புத்தகங்கள் அதிகமாகப் படிப்பேன். அவற்றில் சில என்னை உலுக்கும்போது அவைகளை தமிழுக்கு மொழிபெயர்க்க விரும்புவேன்.

புத்தகம்

அப்படித்தான், ’ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு’ புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்தேன். போஸ்னியா நாட்டைச் சேர்ந்த ஸ்லெட்டா பிலிப்போவிக் என்னும் சிறுமியின் டைரிக் குறிப்புகளே அந்தப் படைப்பு. வாழ்க்கையில் பதின் பருவத்துக்கே உரிய உற்சாகத் துள்ளலோடு அந்தச் சிறுமியின் நாட்கள் நடைபோட்டது. குழந்தைகளின் உலகுக்கே உரிய குறும்பு, பொழுதுபோக்கு என மகிழ்ச்சியின் உச்சத்தில் நகர்ந்து கொண்டிருந்தது அந்தச் சிறுமியின் பொழுதுகள். அவளுக்கு அவளது பெற்றோர்கள் ஒரு டைரியை பரிசாகக் கொடுத்தார்கள். அந்தச் சிறுமி அதில் தனது அன்றாட வாழ்க்கைக் குறிப்புகளை எழுதிவந்தாள்.

இந்நிலையில் அந்நாட்டில் போர் வந்துவிட்டது. அமைதியாகப் போய்க்கொண்டிருந்த அந்தச் சிறுமியின் வாழ்வை போர் எப்படி குலைத்துப் போட்டது என்பதை, அந்தப் புத்தகம் ஒரு சிறுமியின் மனநிலையில் இருந்து தெளிவாக விவரிக்கும்” என்று விழிகள் விரிக்கிறார் அனிதா பொன்னீலன்.

இப்போது இவர் மொழியாக்கம் செய்திருக்கும், ‘சாதியைப் பேசத்தான் வேண்டும்’ நூலின் மூலத்தை எழுதியவர் சூரஜ் யங்டே. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பட்டியலினப் படைப்பாளியான அவரது நூலையே, தமிழுக்கு கொண்டுவருகிறார் அனிதா.

அதைப்பற்றியும் நம்மிடம் அவர் விரிவாகவேப் பேசினார். “சூரஜ் யங்டே மிகப்பெரிய அறிஞர். என்னதான் படித்தாலும், உயர் நிலையை அடைந்துவிட்டாலும் பட்டியலின மக்களின் நிலை அத்தனை எளிதில் மாறிவிடுவதில்லை. அதை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் சூரஜ். உயர்நிலையை அடையும் பட்டியலினவத்தவர்களே தங்களைப் பட்டியலினத்தவர் என அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்குகிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவதோ, ஒரு பிரதான கட்சிக்குத் தலைவராக வருவதோ சிரமமாகத்தானே இருக்கிறது. அதனால்தான் இந்த நூலுக்கு, ‘சாதியைப் பேசத்தான் வேண்டும்’ என்று தலைப்பிட்டோம்.

பொன்னீலன்

இன்றைக்கு சாதி தேவையில்லை என்பதைத் தாண்டி, சாதியின் நிகழ்கால இருப்பை இந்தப் படைப்பு ஆழமாக முன்வைக்கும். இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்ததன் மூலம் சாதியின் இன்னொரு மறுபக்கத்தை மாறுபட்ட கோணங்களில் புரிந்துகொள்ள எனக்கும் வாய்ப்பளித்த எதிர் வெளியீட்டுக்கும் தோழர் அனுஷ் மற்றும் தோழர் கார்த்திகைப் பாண்டியன், ராம் தங்கம் ஆகியோருக்கு நான் நன்றிசொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார் அனிதா.

இந்த நூலை எழுத முழுதாக ஒருவருடம் உழைத்திருக்கிறார் அனிதா. அவரை எழுதத் தூண்டியதில் பொன்னீலனின் பங்களிப்பும் அதிகம். தனது வீட்டுக்கு வரும் இலக்கிய நண்பர்களிடமெல்லாம் அனிதாவின் பெயரைக் குறிப்பிட அவர் தவறியதே இல்லை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகளின் பெயரைச் சூட்டினேன் என அனிதாவின் பெயர்க்காரணம் சொல்லி சிலாகிப்பார். அப்பாவுக்குத் தப்பாதப் பிள்ளையாக பொன்னீலனின் இலக்கிய வாரிசாகவும் உருவெடுத்துள்ளார் அனிதா.

பேச்சின் மையமாக அப்பாவைப் பற்றியும் பேசினார் அனிதா. “என் படைப்பின் முதல்வாசகரே அப்பா தான். எழுதிவிட்டு அவரிடம்தான் முதலில் வாசித்துக் காட்டுவேன். கேட்டுவிட்டு மார்க் போடுவார். அவருக்கு திருப்தியான பின்புதான் அடுத்த அத்தியாயத்துக்கு நகர்வேன். அப்பா சிறந்த படைப்பாளி மட்டுமல்ல, தேர்ந்த வாசகரும் கூட. ஒன்றை வாசித்துவிட்டால் அந்த ரசனையிலும் உணர்ச்சியை வெளிப்படுத்துவார்.

இந்த புத்தகத்துக்காக ஒரு வருடமாக அப்பாவின் வீட்டிலேயே தங்கியிருந்தேன். என் கணவர் அசோக்குமார் சேலத்தில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். என் மகள் நிவேதிதாவை என் அக்கா வீட்டில் விட்டுவிட்டுத்தான் புத்தகம் எழுதும் பணியைத் தொடங்கினேன். இடையில் அப்பாவுக்கு ஆஞ்சியோ செய்திருந்ததால், அவருக்கு கொஞ்சம் ஓய்வும் தேவைப்பட்டது. அதனால் என் எழுத்தை மதிப்பீடு செய்ய அப்பாவால் முடியவில்லை. அதனால் இந்த புத்தகத்தை முடிக்க ஓராண்டு இழுத்துவிட்டது.

சூரஜ் எழுத்தில் வெளிவந்த மூலப் புத்தகத்தில் நல்ல மொழிநடையும், ஆளுமையும், பட்டியலின மக்களின் வலி மிகுந்த உணர்வும் இருந்தது. அதை சிதைத்துவிடக் கூடாதென ரொம்பவே மெனக்கிட்டேன். சமீபத்தில், அப்பா வாசித்துவிட்டு, ‘நல்லா வந்துருக்கு அம்மு’ எனச் சொன்னார். அது நிறைவாக இருக்கிறது. இந்த உலகில் சாதி இல்லை என்பவருக்கும், சாதியின் தீவிரம் குறைந்துவிட்டதென பேசுபவருக்கும் சாதியின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் படைப்பாக நிச்சயம் இது இருக்கும்’’ என்று நம்பிக்கை வார்த்தைகளுடன் நமக்கு விடை கொடுத்தார் அனிதா பொன்னீலன்.

x