இதை வெச்சே நா சிஎம் ஆகிடுவேன்!


காலை எழுந்ததும் அறைக்கு வெளியே கால் வைத்த பாச்சா, பதறிச் சிதறி பால்கனிக்கு ஓடினான். இது வழக்கம்தானே என்று வாசலைப் பார்த்தபடி வாளாவிருந்தது பறக்கும் பைக். வழக்கத்தைவிட அதிகமாக உடல் நடுங்கியபடி தனக்குத்தானே அவன் உளறிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் பயந்துபோய், “என்னாச்சுய்யா... ஏன் இப்படி பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கே?” என்று கேட்டது. பேச்சுமூச்சே இல்லாத பாச்சா, வாசலை நோக்கி விரல் மட்டும் நீட்டினான். அங்கே... அங்கே... சிங்கிள் காலத்தில் சீமான் படத்துடனான செய்தி அச்சிடப்பட்ட நாளிதழ் கிடந்தது. உடனே இயந்திரக் குரலில் வெடித்துச் சிரித்தது பறக்கும் பைக்!

“ரெடியா?” என்று தம்பிகளை சீமான் கேட்டதும், சட்டென அவருக்குப் பின்னே ஏராளமான கைகள் கிளைத்தன. அவற்றில் செருப்பு முதல் சீமார் வரை சில பல ‘ஆயுதங்கள்’ முளைத்தன.

“யோவ், இவரைத்தான் நீ வாராவாரம் பேட்டியெடுத்து வம்பிழுத்துட்டு இருக்கியே... அப்புறம் எதுக்கு சின்னம்மா போனை அட்டெண்ட் பண்ணின சீனியர் லீடர் மாதிரி பம்முறே?” என்றது.

“அட நீ வேற. ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடியெல்லாம் எதிர்க்கட்சியை எதிர்த்துப் பேசி சின்ன லெவல்ல இருந்தார். இப்ப ஆளுங்கட்சியையெல்லாம் எதிர்த்துப் பேசி அடுத்த லெவலுக்கு வளர்ந்துட்டார். கராத்தேயில ப்ளாக் பெல்ட் வேற... பயப்படாம இருக்க முடியுமா?” என்றான். என்ன சொல்வதெனத் தெரியாமல் மையமாகத் தலையாட்டியது பைக்.

சீமான் இல்லம்.

வலது கையை உயர்த்தி வானத்தைக் குத்தும் சீமான் போஸ்டர்களுக்கே வரலாற்றுக் கால வயதாகிவிட்டதால், புதிய போட்டோ ஷூட்டுக்கு அவரது தம்பிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

“ரெடியா?” என்று தம்பிகளை சீமான் கேட்டதும், சட்டென அவருக்குப் பின்னே ஏராளமான கைகள் கிளைத்தன. அவற்றில் செருப்பு முதல் சீமார் வரை சில பல ‘ஆயுதங்கள்’ முளைத்தன.

மந்திரம் மாதிரி நடந்தேறிய காட்சியைப் பார்த்து, ‘எந்திரன்’ பக்தைகள் மாதிரி வாயிலடித்துக்கொண்டனர் தம்பிகள்.

பயத்தை வெளிக்காட்டாமல் பேட்டியை ஆரம்பித்த பாச்சா, “முன்னாடியெல்லாம் கடந்த காலத்துக்குக் கப்பல்ல போய் கறி இட்லி தின்ன கதையெல்லாம் சொல்லுவீங்க... இப்பல்லாம் எதிர்காலத்துக்கு ஏரோப்ளேன்ல போய் எல்லாத்தையும் திறப்பேன் பிரிப்பேன்னு எகிறியடிக்கிறீங்களே?” என்றான்.

“காலம் நெருங்கிருச்சு” என்று ‘வட சென்னை’ சாமியாரிணி மாதிரி நிலைகுத்திய பார்வையுடன், வாசலை நோக்கி விரைந்தது பறக்கும் பைக்.

சிரித்துக்கொண்ட சீமான், “என்னைக் காலம்தான் உருவாக்கிக்கிட்டு இருக்கு. காலத்தோட கடைசிக் குழந்தை நான்தான். எனக்கு அப்புறம் நிலம் மட்டும்தான் இருக்கும். நீ இருக்க மாட்டே... ‘ஒரு நாள் முதல்வரா’ என்னை நியமிச்சீங்கன்னா இந்த மண்ணை மாத்திக் காட்டுவேன். ஒரு நாள் அதிபரா என்னை நியமிச்சீங்கன்னா இந்தப் பூமியையே நிலாவுக்கு மேல நிமித்திக்காட்டுவேன்” என்று ஒரே கேள்விக்கு ஒரு டஜன் பதில் சொன்னதை சீனியர் தம்பிகள் சிரித்தபடி ரசித்தார்கள்.

“எல்லாம் சரி. ஒடிசாவையும் சவுத் இந்தியாவுக்குள்ள அடக்கி ஒரு வரைபடப் புரட்சியே பண்ணிருக்கீங்களே... உங்க புவி அரசியல்ல இது புது ஐட்டமால்ல இருக்கு?” என்று கேட்டுவிட்டு சீமானின் முகத்தையே சீரியஸாகப் பார்த்தான் பாச்சா.

அலட்டிக்கொள்ளாத சீமான், அருகில் இருந்த தம்பியிடம் திரும்பி, “அந்த நாடு எந்தத் திசையிலப்பா இருக்கு?” என்றார். அவர் கூகுள் மேப்பில் பார்த்து, “கிழக்குண்ணே” என்றதும், “கிழக்குன்னா வேண்டாம்பா... அது சென்டிமென்டா செட் ஆகாது. விட்ருவோம்” என்று மூக்கைத் துடைத்துக்கொண்டார்.

“ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னவோ உங்களை உங்க ‘ஆயுதம்’ கூட ஒப்பிட்டு மரியாதைக் குறைவாப் பேசியிருக்காராம்” என்று பாச்சா கேட்டதும், “பார்த்தியா... இலங்கை நாடாளுமன்றத்துல இருந்து இந்தியத் தலைவர்கள் வரைக்கும் என்னையப் பத்தியே பேசுறாங்க... இதை வெச்சே நா சிஎம் ஆகிடுவேன். இவங்கள்லாம் எம்எல்ஏ ஆகிடுவாங்க” என்றார். “சிஎம் ஆகிறதெல்லாம் சரி... சிங்கப்பூர்ல இருந்தும் விரட்டுறாங்க... செங்கொடி கட்சிக்காரங்களும் விரட்டுறாங்களே ஏன்?” என்று பாச்சா கேட்டதும், “அதான் சொன்னேன்ல. இது அடுத்த லெவல் அரசியல்” என்று சீமான் குலுங்கிச் சிரிக்க, “தம்பி பேட்டி போதும். வா போகலாம்” என்று பாச்சாவின் கரம் பற்றி இழுத்துச் சென்றது பைக்.

அடுத்தது ஓ.பன்னீர்செல்வம்.

ஓடிடியில் ‘பாவக் கதைகள்’ பார்த்தபடி பவ்யமாக அமர்ந்திருந்தார் ஓபிஎஸ்.

“வழக்கமா ‘பரமார்த்த குரு கதைகள்’ ரேஞ்சுல மேடைகள்ல பேசி மெய்மறக்க வைப்பீங்க. இப்பல்லாம் பரமபிதா கதையெல்லாம் சொல்லிப் பரவசம் தர்றீங்களே?” என்றான் பாச்சா.

“இதைத்தான் ஏசுநாதர் சொல்கிறார்...” என்று ஆரம்பித்தவர், ‘எடப்பாடி இல்லாத இடத்தில் எதற்குக் கதையெல்லாம்?’ என்று முடிவுக்கு வந்தவராய், “அன்னைக்கு கிடைத்த நியூஸ் பேப்பர்ல இருந்த குட்டிக் கதையை நீட்டிமுழக்கிச் சொன்னேன். அதுல எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லங்கிறதையும், இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஈபிஎஸ்ஸிடம் எடுத்துச் சொல்லிட்டேன்” என்றார்.

“அன்னைக்கு வந்த நியூஸ் பேப்பர்கள்ல அதிமுகவுல நடக்கிற குட்டிக் கலாட்டா பத்தியெல்லாம் பத்தி பத்தியா நியூஸ் வந்திருக்குமே... அதையெல்லாம் அவர் முன்னாடி வாசிச்சுக் காட்டியிருக்கலாமே?” என்றான் பாச்சா.

“எதையும் நேரடியாச் சொல்றது என் பாணி இல்லப்பா. அமைதியா ஒரு இடத்துல உட்கார்ந்தா ஆட்டோமேட்டிக்கா என்னைச் சுத்திக் கூட்டம் வரும்” என்று அலைகடலென கூட்டத்தைத் திரட்டிய அனுபவத்தை, ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொன்னார் ஓபிஎஸ்.

“அதான் தெரியுமே சார்... ரஜினி நடிச்ச ‘தர்மயுத்த’த்தை விட பழைய படமாச்சே அது. ஆனாக்கா, கட்சித் தேர்தலெல்லாம்கூட தர்மத்தின்படி தான் நடந்திருக்குன்னு சொல்லியிருக்கீங்களே... அதுக்கும் ஸ்க்ரிப்ட் ஆடிட்டர்தானா?” என்றதும் அமைதியின் திருவுருவமாம் பன்னீர்செல்வமே ஆவேசமானார்.

அடுத்தவர் உதயநிதி.

“வள்ளல் உதயநிதி... வருங்கால ஜனாதிபதி” என... கொடுக்கிற போஸ்ட்டுக்கு மேலே கூவிக்கொண்டிருக்கும் அமைச்சர்களின் வீடியோக்களைப் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தார் முதல்வர் மகன்.

“சினிமாவுல உங்க கெரியரை பில்டப் பண்ண சிரிப்பு நடிகர் சந்தானம் கிடைச்ச மாதிரி, அரசியல்ல உங்களை அடுத்த லெவலுக்குக் கொண்டுபோக சீனியர் அமைச்சர்கள்லாம் அரும்பாடு படுறாங்களே... உங்க அருமை அமைச்சர்களுக்கெல்லாம் தெரியுது. அப்பாவுக்குத் தெரியாதா?” என்று அவரிடம் கேட்டான் பாச்சா.

“நான் எதையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரலைங்க. நான் ரொம்ப அடக்கமான ஆளுங்கங்க. அப்பா தளபதி போஸ்ட்ல இருந்து தலைவர் போஸ்ட்டுக்குப் போய்ட்டார்ங்க. அதனால எங்க கட்சிக்காரங்க எம்எல்ஏ போஸ்ட்ல இருந்து என்னை மினிஸ்டர் போஸ்ட்டுக்கு மாத்த ஆசைப்படுறாங்கங்க” என்றார் உதயநிதி.

“ஆனா அவர் இளைஞரணி செயலாளர் பொறுப்புலேயே ஏழெட்டு தலைமுறையைப் பார்த்துட்டார். நீங்க இளைஞரணிச் செயலாளரா எத்தனை வருஷம் இருப்பீங்க?” என்று பாச்சா கேட்டதும், “அதெல்லாம் ‘அன்பில்’ நிறைந்தவர்கள் கையிலதான் இருக்கு” என்று அமைதி தவழ புன்னகைத்தார்.

“நீங்க செங்கல்லைத் தூக்கிக்காட்டி எலெக்‌ஷன்ல ஜெயிச்ச மாதிரி... சீமான் செப்பலைத் தூக்கிக்காட்டி கலெக் ஷனை... சாரி, கவர்மென்டையே பிடிச்சிடுவார் போல இருக்கே?! அவர் சிஎம் ஆனா நீங்கதான் எதிர்க்கட்சித் தலைவரா?” என்று பாச்சா கேட்டதும், “நான் தான் சொல்லியிருக்கேனே... அவரை எங்கே பார்த்தாலும் ‘அண்ணே’ன்னு சொல்லுவேன்... அவர் ‘தம்பி’ன்னு கூப்பிடுவார்னு. அதெல்லாம் அரசியல்ல சாதாரணம்” என்றார் உதயநிதி.

“இது ‘அவர்’ டயலாக்காச்சே?” பாச்சாவிடம் பைக் கேட்க, “இதெல்லாம் அரசியல் நாகரிகமாம்பா. நம்பு” என்று சொல்லி பைக்கைக் கிளப்பிப் பறந்தான் பாச்சா.

x