ஈரோடு டூ சிகாகோ: சாதிக்கப் புறப்படும் மாணவி ஸ்வேகா!


மாணவி ஸ்வேகா

ஈரோடு மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் மாணவி ஸ்வேகா. பிளஸ் 2 படித்து வரும் இவர், பொதுத்தேர்வை எழுதுவதற்கு முன்பே கல்லூரிக்குச் செல்ல அட்மிஷன் கிடைத்துவிட்டது. அதுவும் உலகின் ’டாப் 10’ பல்கலைக்கழகங்களில் ஒன்றான, சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி உதவித்தொகையுடன் கூடிய அறிவியல் பட்டப்படிப்புக்கு ஸ்வேகா தேர்வாகியுள்ளார்.

உலகின் புகழ்வாய்ந்த உயர் கல்வி நிறுவனத்தில், தமிழகத்தின் சிற்றூரில் உள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் வியப்பளிக்கிறதல்லவா? நாமும் அதே பிரமிப்புடன் ஸ்வேகாவை தேடிப்பிடித்து உரையாடினோம்.

பெற்றோர் மற்றும் தம்பியுடன் ஸ்வேகா

ஸ்வேகாவின் தந்தை சாமிநாதன், ஓர் விவசாயி. கடந்த 3 மாதங்களாக ஸ்வேகாவின் குடும்பம் வள்ளிப்புரத்தாம்பாளையத்தில் வசிக்கிறது. காரணம், ஸ்வேகாவின் கல்வி மட்டும்தான்.

ஸ்வேகா

படிப்பில் படுசுட்டியான ஸ்வேகாவின் கல்விக் கனவை நிறைவேற்ற, அவர் தற்போது படித்துவரும் சி.எஸ். அகாடமி பள்ளி இருக்கும் வள்ளிப்புரத்தாம்பாளையத்துக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்துவிட்டது. சாமிநாதன் மட்டும் தினமும் பல மைல்கள் பயணம் செய்து, சொந்த ஊரில் விவசாயம் பார்த்துவிட்டு வீடு திரும்புகிறார். தாங்கள் சரியாகப் படிக்கமுடியாமல் போனாலும் தங்களது குழந்தைகள் உயர்கல்வி பெற்று ஒளிர்வதைக் காணக் காத்திருக்கிறார்கள், தந்தை சாமிநாதனும் தாய் சுகன்யாவும். அவர்களது கற்பனைக்கு எட்டாத உயரத்தை அடையவிருக்கிறார் மகள் ஸ்வேகா.

“மத்தியத்தர குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பது மட்டும் எனது அடையாளமாக இருந்தால் போதாது. தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்கிற இலக்கு எனக்கு 9-ம் வகுப்பு படிக்கும்போதே துளிர்விட்டது. அதற்குப் புத்தகங்களில் உள்ளதை மட்டும் படித்து மதிப்பெண்கள் எடுத்தால் போதாது, தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் புரிந்தது” என்கிறார் ஸ்வேகா.

ஸ்வேகா படிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டு, அறிவியல் ஆராய்ச்சி, தலைமைப்பண்பு வளர்ச்சி ஆகியவற்றுக்கும் தருவதால் அவரது வீடு முழுவதும் பதக்கங்களும் கேடயங்களும் நிறைந்துள்ளன. ’ஸ்வேகாவின் கவிதைகள்’ என்ற தலைப்பில் தனது அறிவியல், கல்விக் குறித்த கனவுகளைக் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இவை எல்லாம்தான் தனக்கு தற்போது ரூ.3 கோடி மதிப்பிலான உதவித்தொகையுடன் அட்டகாசமான பட்டப்படிப்பு வாய்ப்பையும் பெற்றுத் தந்ததாகச் சொல்கிறார்.

“காலை 8 மணிக்கு பள்ளிக்குப் போனால் மாலை 3 மணிக்கு பள்ளி விடுவதற்குள் அங்கேயே அத்தனை பாடங்களையும் படித்து முடித்துவிடுவேன். பிறகு இரவு 11 மணிவரை என்னுடைய தனித்திறமைகளுக்கு நேரம் செலவிடுவேன். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், வாலிபால், கோக்கோ ஆகிய விளையாட்டுகளில் பல பரிசுகளை வென்றிருக்கிறேன். என்சிசியிலும் துடிப்புடன் பங்கேற்று வந்தேன். 9-ம் வகுப்பு படிக்கும்போது மரபணுவியல் குறித்த மெண்டலின் விதிகள் பற்றி பள்ளியில் பாடம் நடத்தப்பட்டது. ஆனால், எனக்கு எதுவுமே புரியவில்லை.

வீட்டுக்கு வந்த பிறகு யூடியூபில் அதுபற்றித் தேடிப் பார்த்தேன். அமெரிக்காவின் புகழ்வாய்ந்த மாசச்சூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்களின் வீடியோக்கள் என்னை ஈர்த்தன. ஆனால், அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு விளங்கவில்லை. பத்து பதினைந்து முறை விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன். மெல்லப் புரியத் தொடங்கியது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் உரைவீச்சுகளை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தேன். நாளடைவில் அமெரிக்கர்களின் ஆங்கிலம் சகஜமாகிப் போனது. அப்படியே யூடியூப் வழியாக புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் அறிந்துகொண்டேன் ஆங்கிலமும் சரளமாகப் பயின்றேன்” என்கிறார் ஸ்வேகா.

அறிவியல் துறை சார்ந்து நடத்தப்படும் சர்வதேச அளவிலான போட்டிகளில் 5 முறை வென்றிருக்கிறார் ஸ்வேகா. அதில் ஒன்று, நெகிழிக்கு மாற்றாகப் பாக்குமட்டைக் கொண்டு குவளை தயாரித்தற்காகப் பெற்றிருக்கிறார். மற்றொன்று, டெல்லியைச் சேர்ந்த ஒரு மாணவர், அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு மாணவரோடு இணைந்து, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள பள்ளி மாணவர்களின் கற்றல் முறை குறித்து ஆன்லைனிலேயே ஆய்வேடு சமர்ப்பித்துப் பெற்றிருக்கிறார்.

நல்லாசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகள் இன்றி இத்தனை பெரிய உயரம் சாத்தியமா? நிச்சயமாக இல்லை என்று ஆமோதிக்கிறார் ஸ்வேகா. தனது பள்ளி ஆசிரியர்கள் சிறந்த கல்வியுடன் ஆக்கமும் ஊக்கமும் எப்போதுமே அளித்ததாகக் குறிப்பிடுகிறார். அதிலும் கரோனா பெருந்தொற்றுக்கு சற்றுமுன்பு தங்களது பள்ளிக்கு வந்த ’டெக்ஸ்டிரிட்டி குளோபல் குரூப்’ என்ற கல்வித் தொண்டு நிறுவனத்தின் நடத்துநர் சரத் விவேக் சாகர் என்பவரின் வழிகாட்டுதல் பேருதவியாக இருந்ததை நெகிழ்ந்து பகிர்ந்துகொண்டார்.

”சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும்தான் தரமானக் கல்வியும் உயரிய வாய்ப்பும் கிடைக்கும் என்கிற மாயையைப் போக்கியது எனது ஆசிரியர்களும் வழிகாட்டியும்தான். நான்கு மாதங்களுக்கு முன்புவரை எனக்கென ஒரு மடிக்கணினிகூட இல்லை. அலைபேசி வழியாகவே அத்தனை தகவல்களையும் சேகரித்தேன், நான் உருவாக்கிய அறிவியல் திட்டங்களை, ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தேன்.

சிகாகோ பல்கலைக்கழகம் பற்றி நானேதான் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அதில் நான் ஏன் படிக்க விரும்புகிறேன், அதிலும் எதற்காக அறிவியல் படிக்க ஆசைப்படுகிறேன் என்பவற்றை எழுதி அனுப்பினேன். 9-ம் வகுப்பு முதல் இதுவரை நான் பள்ளிப்படிப்பை எப்படிப் படித்துள்ளேன், என்னுடைய தனத்திறமைகள் எல்லாவற்றையும் ஆன்லைன் வழியாகவே சோதித்தார்கள்.

ஒரு மாணவரிடம் திறமை இருப்பது தெரிந்தால், அவர்களது குடும்பப் பின்னணியைப் பொறுத்து அவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிர்ணயித்து வழங்கும் திட்டத்தை சிகாகோ பல்கலைக்கழகம் கடைபிடித்து வருகிறது. அந்த வகையில்தான் என்னுடைய பன்முகத் திறமைகளை அங்கீகரித்து, என்னுடைய எளிய விவசாயக் குடும்பச்சூழலை அனுசரித்து 3 கோடி ரூபாய்க்கு உதவித்தொகையுடன் சிகாகோ பல்கலையில் படிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளார்கள்.

பிளஸ் 2 தேர்வை முடித்ததும் 2022 ஆகஸ்டில் அமெரிக்கா சென்று, 4 ஆண்டுகள் உயிரியல் அறிவியல் பட்டப்படிப்பை படித்து அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தக் காத்திருக்கிறேன். நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல. நம்முடைய இலக்குதான் முக்கியம்” என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் சாதனைப் பெண் ஸ்வேகா.

x