பெண்களை மதிக்க மகன்களுக்கு கற்றுக் கொடுப்போம்!


பாலியல் துன்புறுத்தல்களும் அதையொட்டிய மாணவிகளின் தற்கொலைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொதுச் சமூகத்தை கவலைக்குள்ளாக்கி வருகின்றன. அதிலும் அண்மைக் காலமாக பள்ளிச் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலால் மனம் உடைவதும், அந்த உளைச்சல் தாங்காது தவறான முடிவெடுப்பதுமாக கலங்கடித்து வருகிறார்கள். அப்படி வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முன்னர், இந்தச் சமூகத்துக்கு சில கேள்விகளையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். செத்துப்போன இந்தச் சிறுமிகளின் ஆவி கணக்காய் அந்த வரிகள் இன்னும் சமூகத்தை உலுக்கிக்கொண்டிருக்கின்றன.

அப்படியொரு மாணவி (கரூர்) எழுதி வைத்த வாசகம் இது: ’பாலியல் தொல்லையால் சாகும் கடைசி மாணவியாக நான் இருக்க வேண்டும்’. அது சாத்தியமே இல்லை என்பதுபோல தொடரும் துயர சம்பவங்களின் வழியே, வேறுபல மாணவிகள் பதில் சொல்லி விட்டார்கள். அவர்களில் ஒருவரான இன்னொரு மாணவி (மாங்காடு) தனது தற்கொலை சாசனத்தில் இப்படி எழுதியிருக்கிறார்: ‘பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத்தர வேண்டும்’.

16 அல்லது 17 வயது கொண்ட இந்தச் சிறுமிகள் தற்போது உயிரோடு இல்லை. இவர்கள் எழுப்பிய கோரிக்கைகள் அமைதியின்றி உலவிக் கொண்டிருக்கின்றன. இதில் மாங்காடு மாணவியின், ‘பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத்தர வேண்டும்’ என்பதற்கு பதில் தேடிவிட்டால், இனி வருங்காலத்திலேனும் இதுபோன்ற துயரங்களைத் தவிர்க்கலாம்.

பெண்களுக்கு எதிரான சீண்டல்கள், குற்றங்கள் அனைத்துக்குமே பெண்ணையே காரணமாக்கி வந்திருக்கிறோம். முக்கியமாக, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களுக்கு அவர்களின் உடை, தோற்றம், நடந்துகொள்ளும் விதம் ஆகியவையே காரணம் என கற்பித்துக்கொண்டிருக்கிறோம். பாதிக்கப்படும் நபரையே குற்றவாளியாக்கும் போக்கு இது. தவறியும், குற்றம் இழைக்கும் ஆணை நோக்கி விரல் சுட்ட மறுக்கிறோம். இங்கேதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்சினை வளர்ப்பு முதலே வேர் விடுகிறது.

பெண்ணை மதிக்காது வளர்வதுதான் ஆண்மைக்கு அழகு என்பதை, எப்படியோ ஆண் குழந்தைகளின் மனதில் பதிய விட்டிருக்கிறோம். ஒரே குடும்பத்தில் வளரும் மகள் - மகன் மத்தியில் எத்தனையோ பாகுபாடுகளைத் திணிக்கிறோம். உணவில் தொடங்கி உடுத்தும் ஆடை வரை பெண்ணின் வளர்ப்பில் விதிக்கும் ஒவ்வொரு விசித்திரமான கட்டுப்பாடும், ஆண் குழந்தையையும் சேர்த்தே பாதிக்கிறது. பிறகு, பெண்ணை சக மனுஷியாய் பார்க்காது, தான் ஒரு விசேஷ உயிரினம் போல தரையில் கால் பாவாது நடக்க ஆரம்பித்து விடுகிறான். பிஞ்சில் பதிந்த இந்த எண்ணம் அவர்கள் வளரும்போக்கில் தானும் வளர்ந்து, அவர்களுக்கே விபரீதமாகப் பின்னாளில் மாறுகிறது.

குடும்ப வளர்ப்பில் இந்தப் பிற்போக்கு ஊறிப்போயிருக்கிறது எனில், அறிவுக் கண்ணை திறக்கவேண்டிய கல்வி நிலையங்கள் வேறுவிதமாய் பாலின பேதத்தை திணிக்கின்றன. இருபாலர் பள்ளிகள் மட்டுமல்ல, பெண்கள் மட்டுமே பயிலும் பள்ளியிலும், அவர்களின் உடல் சார்ந்து, உடை சார்ந்து ஆசிரியைகள் மேற்கொள்ளும் அடக்குமுறை சொல்லி மாளாது.

அண்மையில் கேரளாவின் சில பள்ளிகளில் ஆண் - பெண் இருபாலருக்கும் பாலியல் பேதமற்ற சீருடைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இவை செய்திகளாக வெளியானபோது, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண்கள், பலவிதமாய் தங்கள் மனக்குமுறலைக் கொட்டினார்கள். அதேபோல உணவு விஷயத்திலும் இன்னொரு பாகுபாட்டை விதைக்கிறோம். ஆண் என்றால் வலிமை; பெண் என்றால் மென்மை என ஒரு உளுத்த கற்பிதத்தை திணித்து, சோற்றிலும் பாகுபாட்டை பரிமாறுகிறோம். இந்தப் பாகுபாட்டிலிருந்து கிளைப்பதே பின்னாளில் பிரச்சினையாகவும் விபரீதமெடுக்கின்றன.

பாலின பாகுபாடின்றி மகன்களைச் சரியாக வளர்ப்பது என்பதில் பெரிய புரட்சியெல்லாம் செய்ய வேண்டியதில்லை. குடும்பத்தில் இருப்பவர்கள், வளரும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக செயல்பட்டாலே போதும். வீடுகளில் தாய் - தந்தை மற்றும் இதர வளர்ந்த ஆண் - பெண் இடையிலான மதிப்பீடுகளை அலசியே, தன்னிச்சையாக ஆண் குழந்தையின் மனப்போக்குகள் இறுக ஆரம்பிக்கின்றன.

தாயை மதிக்காத தகப்பனை பார்த்து வளரும் ஆண் குழந்தையும், அப்படியே வெளிப்பட வாய்ப்புக்காக காத்திருக்கும். மாறாக, பெண்ணை அவமதிக்காத, பேதம் கற்பிக்காத பெரியவர்களை பார்த்து வளரும் ஆண் குழந்தை, சிறப்பான ஆண் மகனாக பின்னாளில் மிளிர முடியும். தான் ஆண் என்பதை சதா நிறுவும், குடும்பத் தலைவனைப் பார்த்து வளரும் ஆண் குழந்தையும் அதே பித்தேறி அலையும். பிற்பாடு சமூக வெளியில் அந்த ஆதிக்க உணர்வை தன்னையறியாது வெளிப்படுத்தி சந்தி சிரிக்கும்போது, தலைகவிழ்ந்து நிற்கும். எனவே, பெண்களை மதிக்கும்படி மகன்களை வளர்ப்பதில் தாயை விட தந்தைக்கே அதிக பங்கு சேர்கிறது.

பையன்களை சரியாக வளர்ப்பதில் பெண்களை மதிப்பதோடு இதர பிற்போக்குத்தனங்களையும் உதற உதவ வேண்டும். ஆதிக்க மனநிலை எதுவாக இருப்பினும் அது குழந்தை வளர்ப்பை பாதிப்பதாக மாறிவிடும். நமது சமூகத்தில் அனைத்து ஆதிக்க போக்குகளின் அடிப்படையும் ஆணாதிக்கமாகவே இருக்கின்றது. உதாரணமாக, சாதிய அடுக்குகளை எடுத்துக்கொண்டால், அதன் வேர் ஆதிக்க மனநிலைக்கே அழுத்தம் தருகிறது. ஆண் குழந்தைகளுக்கு சரியான வளர்ப்பைக் கொடுக்க விரும்புவோர் இதுபோன்று மறைமுகமான ஆதிக்க மனநிலை கொண்டிருப்பின், ஆண் குழந்தைகளின் வளர்ப்பு முழுமை பெறாது.

பெண்ணை உதாசீனப்படுத்துவதன் வழியே, தன்னை நிலை நிறுத்திக்கொள்வதுதான் ஆண்மை என்பது காலம்காலமாக ஆண்கள் கைக்கொண்ட காரியமாக இருக்கிறது. ஆனால், தன்னை மதிக்காத எந்த ஆணையும், பெண்கள் துச்சமாகவே மதிப்பார்கள். அவன் மீது அவளுக்கு துளியும் மரியாதை எழப்போவதில்லை. ஆண்- பெண் உறவும், புரிதலும், மரியாதையும் அங்கே பரிதாபமாய் அடிபட்டுப்போகும். அதன் பிறகு தனது புரிதலையும், பக்குவத்தையும் உயர்த்திக்கொண்டு, ஆண் மாற்றம் கண்டாலும், பெண்கள் அவனைப் பொருட்படுத்தப் போவதில்லை. அவர்களின் தனிப்பட்ட உறவின் சமன்பாடுகளும் சிதைந்துபோயிருக்கும்.

இயல்பான மனிதத்தன்மையை துறந்துவிட்டு, ஆண்மையின் பெயரால் புனைவான திமிர்களை வளர்த்துக்கொள்ளும் ஆண், அந்தரங்கமாய் அடிபடுவான். அவனது உலகம் மிகவும் நெருக்கடியும், சிக்கலும் சூழந்ததாக மாறிவிடும். எனவே, ஆணின் நலத்துக்காகவாவது அவனது வளரும் போக்கில் பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பது நல்லது. இல்லையேல் திருமண வாழ்க்கை மட்டுமல்ல, நட்பு, சகாக்கள் என சகலமும் குலைய வாய்ப்பாகிவிடும். பெண் அளவுக்கு ஆழமோ, அழுத்தமோ வாய்க்கப்பெறாத ஆண் மேலும் குன்றிப் போய்விடுவான்.

எனவே, ஆண் குழந்தைகளையும் முறையாக வளர்ப்போம். அவர்களையும் கண்காணிப்போம். பெண்களைச் சக உயிரியாய், மனுஷியாய் மதிக்க கற்றுக்கொடுப்போம். மகள்களுக்காக மட்டுமன்றி, மகன்களுக்காகவும் இது நடக்கட்டும். 16 வயது பெண்ணுக்கு உதித்த பொறுப்புணர்வு எல்லோருக்கும் வாய்க்கட்டும்.

x