நிழற்சாலை


கோணல் விகிதம்

கிழிந்த நோட்டை மடித்துத் தருபவனிடம்

கொசுறாய் இன்னொரு பூவை நீட்டுகிறாள் சிறுமி

போதாத கூலியை வாங்கிய பிறகும்

ஆழமாகவே ஊன்றி

வருடுகிறான் செடிகளை

நஷ்டத்தில் பேரம் முடிந்தபோதும்

தேநீர் அருந்த அழைக்கிறான்

வியாபாரி

பிழைக்கத் தெரிவதற்கும்

வாழத் தெரிவதற்கும்

ஒரே அர்த்தம்தான்

நன்னிலத்தில்.

-ந.சிவநேசன்

அர்ச்சனை

குழந்தை பூப்பறிக்கிறது...

எட்டாத உயரத்திலிருக்கும்

பூக்களை மட்டும்

சாமிக்கென விட்டுவிட்டு!

- திருப்பூர் சாரதி

வாழ்த்து

ஒழுகும் இடங்களில்

ஓட்டு வீட்டின் மீது

யாரோ ஒருவரின்

திருமண பேனர்

போர்த்தப்பட்டிருக்கிறது

மழைக்காலங்களில்

ஓட்டு வீட்டாரின்

வாழ்த்து மழையில்

நனைகிறது அது.

- ச.ஜெய்

சதுப்பு சாபம்

பல்லுயிர்கள் எங்களோடு

கைகோத்து வளர்கின்றன

அலையாத்தித் தாவரங்களை

அரவணைத்து வாழ்கிறோம்

வலசை போகும் பறவைகளுக்கு

உறைவிடம் தருகிறோம்

நீர்வாழ் விலங்குகள் எங்களோடு

நெருங்கிப் பழகுகின்றன

பருவமழை பெய்யத் தொடங்கியதும்

பூ நாரைகளின் கால் பதிக்க

எங்கள் மீது உலா வரும்

நினைத்தாலும் உங்களால்

செயற்கையாய் படைக்க முடியாது

இயற்கை படைத்ததால் என்றும்

ஈர நெஞ்சமுடன் வாழும்

சதுப்பு நிலங்களான எங்களை

நகர் விரிவுத் திட்டங்களில்

பலியாக்க முயலும்

உங்களுக்கு

மழை வெள்ள நாட்களில்

நிச்சயம்

எங்கள் நினைவு வரும்...

மிச்சம் இருக்கட்டும் ஈரம்.

- கா.ந.கல்யாணசுந்தரம்

தின்னும் பசி

வெகுநேரமாக எதையோ

கொத்திக் கொத்தி

தின்று விழுங்கும்

அப்பட்சியின் எதிரில்தான்

அமர்ந்திருந்தது

நான் எனும் உடல்

கொத்துதலுக்கும் விழுங்குதலுக்குமான அவசரத்தை

மிக அண்மையில் இருந்துதான்

சிலாகித்துக்கொண்டிருந்தன

இக்கண்கள்

இன்னும் கொஞ்சம் அருகில்

செல்லலாம் என நெருங்குகையில்

படபடத்து சிலிர்த்துப் பறந்த

அப்பறவை விட்டுச்சென்ற

இறகில்

இன்னும் இருந்தது

தின்ற திணையும்

தின்னும் பசியும்.

- கருவை ந.ஸ்டாலின்

பரிசு

சிரித்த முகம் புரட்டிப்போடுகிறது

எப்படி எதிர்கொள்வதென

கடன் வாங்க நண்பர்கள் யாரும் மீதமில்லை

பெருந்தொற்று வேலையிழப்பு

எப்படி சொல்லிப் புரியவைப்பது

மழலை மொழியும் விரிந்த விழியும்

பிறந்த நாள் பரிசு தேடும்

இயலாமையின் இருத்தலோடு

வீட்டிற்குள் நுழைகையில்

அப்பாவென கத்தியபடி

கட்டிக்கொண்டான்

கையில்

‘சான்டா' கொடுத்த பரிசு.

- ஆனந்தகுமார்

வன வாசம்

யாராவது

கதவைத் தட்டும்போதெல்லாம்...

மரங்கொத்தியின் ஞாபகம்

மரக்கதவிற்கு!

-இரா.ரமேஷ்பாபு

தரிசனம்

பயணக்களைப்பு

கோயிலில்

சாமியைப் பார்க்கும்

முன்னமே

உறங்கிப்போன

குழந்தை

சிரித்துக்கொண்டிருக்கிறது

உறக்கத்தில்.

குழந்தைக்கு மட்டும்

கனவில் சாமியின்

சிறப்பு தரிசனம்.

- பாரியன்பன் நாகராஜன்

வயிற்றின் ரேகைகள்

நடந்தது நடப்பது

நடக்கப்போவது

தொழிலில் நஷ்டம் கஷ்டம்

குடும்ப விருத்தி

கவர்மென்ட் வேலை

கிடைக்குமா கிடைக்காதா

பிள்ளைகளோட படிப்பு

அவர்களோட எதிர்காலம்

எல்லாத்தையும்

கைரேகை பார்த்து

சொல்வேன் தாயி

ஜோசியம் பாரு தாயி

நாங்க ஜோசியமெல்லாம்

பார்க்கிறதில்ல தாத்தா

சரி தாயி

கொஞ்சம் சோறு இருந்தா போடு.

- மகேஷ் சிபி

பசியின் வார்த்தைகள்

அய்யா ஊருக்குப் போகணும்

ஒரு ஒன்பது ரூவா

கம்மியா இருக்கு என

கையேந்திய பாட்டியிடம்

பாக்கெட்டில் துழாவி

பத்து ரூபாயெடுத்து நீட்டினேன்

மகராசனா இருப்பாவென

வாயாற வாழ்த்தி நகர்ந்தவள்

நேற்று சிக்னலில் அச்சு அசலாய்

வார்த்தை மாறாமல்

அதையே ஒப்பித்துக்கொண்டு நின்றாள்

போக வேண்டிய ஊரோ

கொண்டாடும் உறவோ

அவளுக்கில்லை என்பதை

ஒவ்வொரு முறையும்

உமிழ்நீர் இறக்கி

உதிர்க்கும் பசியின் வார்த்தைகள்

உணர்த்தியே விடுகின்றன

இப்போதெல்லாம்

எதற்கும் இருக்கட்டுமென

கூடுதல்

சில்லறைகளோடுதான்

வெளியே கிளம்புகின்றன

என் பாக்கெட்டுகள்.

- காசாவயல் கண்ணன்

x