என் செல்போனை எங்க வெச்சேன்..?


மச்சானுக்கு மாற்றல் கிடைச்சிருச்சுன்னு தெரிஞ்சதும் அம்மிணிக்கு ஒரே வருத்தம். “எனக்கு ஒண்ணுன்னா... ஒடம்பொறப்புன்னு ஓடி வருவியே”ன்னு அழுதாங்க . “அப்ப... இனிமே வர மாட்டாரா”ன்னு பாதி தெம்பா கேட்டேன். ஸ்பீக்கர்ல போடவும் மச்சான் குரல் கேட்டுச்சு. “ஃப்ளைட்டை புடிச்சு ஒங்க வீட்டு மாடில வந்து எறங்குவேன்”னு பாசமலரின் குரல் கேட்டுச்சு.

அம்மிணிட்ட “உன் ஒதவி தேவை”ன்னு மச்சான் சொன்னாரு. “சொல்லு. உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்”னு அம்மிணியும் அஞ்சாறு பிராமிஸோட ரெடி ஆகவும் மச்சான் சொன்னாரு. “பேக்கிங் செய்யணும். அவரை அனுப்பி வச்சா நல்லா இருக்கும். நல்லா நீட்டா செய்வாரு”ன்னு. அவரு குடி இருந்தது வாடகை வீடு. ஓனர்ட்ட தகவல் சொல்லிட்டாராம்.

அம்மிணி உடனே என்னைப் பார்த்தாங்க. “கிளம்பிட்டேன்னு சொல்லு”ன்னு சந்தோஷமா சொன்னேன். “உங்க அண்ணனுக்கு இல்லாத உதவியா”. அம்மிணிக்கே டவுட் வந்துருச்சு என் உற்சாகத்தைப் பார்த்து.

மச்சான் ஃபேமிலில நாலும் நாலு தினுசு. “எதையும் தூக்கிப் போடாதீங்க”ன்னு எடுத்ததுமே கண்டிஷன் போட்டாங்க. மகனாரும் மகளும் பெரியவங்க பார்த்துக்குவாங்கன்னு எஸ்கேப் ஆக, நாங்க மூணு பேரும் ஒவ்வொண்ணா மூட்டை கட்டுனோம்.

பத்து நிமிசத்துக்கு ஒருக்க அம்மிணியோட போன். “முடிஞ்சிருச்சா. ஏதாச்சும் குடிச்சீங்களா... சாப்டீங்களா”ன்னு. முதல்ல பதில் சொல்லிகிட்டு இருந்தேன். அப்புறம் பேக்கிங் சூடு பிடிச்சதும், “விடும்மா எல்லாம் நல்லா போய்க்கிட்டிருக்கு”ன்னு டப்புனு கட் செஞ்சுட்டேன்.

சாப்பாடு மச்சான் ஏற்பாடு செஞ்சு வச்சிருந்தாரு. அந்தந்த நேரத்துக்கு எல்லாமே வந்துச்சு. மினி லாரியும் ஈவ்னிங் வந்துருச்சு. கட்டிலு பீரோன்னு ஏத்தியாச்சு.

வீட்டைப் பூட்டுனதும் என்னையும் இழுத்துப் பார்க்கச் சொல்லி ஒரு சான்ஸ் கொடுத்தாரு. பூட்டைப் புடிச்சு தொங்கியே காட்டுனேன். அவங்க குடும்பம் போக ஒரு ஏசி காரும் வந்துருச்சு.

அடிச்சு போட்டாப்ல வலிச்சுது. எங்க ஆட்டோக்காரர் கரெக்டா வந்துட்டாரு. வீட்டுக்கு வந்து நல்லாத் தூங்குனேன். பாதி தூக்கத்துல அம்மிணி உலுக்கினாங்க.

“உங்க போனு எங்கே. அதுல தான் என் டெய்லர் நம்பர் வச்சிருந்தேன்”னு. “அங்கேதான் இருக்கும் பாரு”ன்னு திரும்பிப் படுத்தேன்.

“எல்லா எடமும் தேடியாச்சு. கண்ணுலயே படல”ன்னு மறுபடி உலுக்கினாங்க. தூக்கிவாரிப் போட்டுச்சு. தூக்கம் கலைஞ்சு எழுந்து ஒக்கார்ந்தேன்.

“நல்லா யோசிங்க. எங்கே வச்சீங்க”ன்னு அம்மிணி எதிர்ல நின்னு மிரட்டுனாங்க. என் போன் தொலைஞ்சதை விட டெய்லர் நம்பர் போச்சேன்னு தவிப்புதான் அவங்ககிட்ட.

“உன்கிட்ட கூட பேசுனேனே”ன்னு அதையே திருப்பித் திருப்பி சொன்னேன். “பேக்கிங்ல அதையும் சேர்த்து வச்சிட்டீங்களா”ன்னு சீரியசா டவுட் கேக்கவும் அரண்டு போயிட்டேன்.

“உங்க அண்ணனுக்கு போன் அடி”ன்னு சொல்லவும் மச்சானுக்கு அடிச்சாங்க.

“ரொம்ப தேங்க்ஸ் அவரை அனுப்பி வச்சதுக்கு. ரொம்பவே சின்சியர்”ன்னு எனக்குப் புகழாரம் சூட்டுனாரு. அம்மிணிக்கு பத்திக்கிட்டு வந்துச்சு. “நாப்பதாயிரம் ரூவா போனைத் தொலைச்சுட்டு வந்துருக்காரு”ன்னு பாட்டு விட்டாங்க.

“ஏதாச்சும் ஒரு பொட்டில போட்டுருப்பாரு”ன்னு உறுதியா அம்மிணி சொல்லவும் மச்சான்கிட்டேர்ந்து சவுண்டு வரல.

“என்ன அண்ணே”ன்னு வற்புறுத்தி கேக்கவும், “புது வீட்டுக்கு பாதி சாமான்தான் போவுது. நாலஞ்சு பொட்டி அண்ணி வீட்டுல எறக்கிட்டோம்”னு மெல்ல தகவல் சொன்னாரு.

“உன் வீட்டுக்காரருக்கே தெரியுமே. கட்டும்போதே அடையாளம் செஞ்சோமே”ன்னு என்னையும் மாட்டி விட்டாரு.

அம்மிணி ஆடிட்டாங்க. “எதுல வச்சீங்கன்னு ஞாபகம் இருக்கா”ன்னு என்னையே மறுபடி குடைஞ்சாங்க.

நான் போனைப் பிடுங்கி, “அண்ணி வீட்டுல சொல்லி பிரிச்சு பார்க்கச் சொல்லுங்க”ன்னு கெஞ்சுனேன். “சொல்லிப் பார்க்கிறேன்”னு மச்சான் சொன்னப்பவே பிசுர் அடிச்சுது. அண்ணி டோஸ் விட்டுருப்பாங்கன்னு நல்லாவே தெரிஞ்சுது. அன்னிக்கு நைட் எனக்கு மட்டும் தூக்கம் போச்சு.

மறுநாள் காலைல மச்சான் மெசெஜ் அனுப்பி இருந்தாரு. “அண்ணி வீட்டு பேக்கேஜ்ல இல்லியாம்.”

நான் பதில் போட்டேன். “அப்போ உங்க வீட்டு பேக்கிங்ல பாருங்க”ன்னு. பதிலே காணோம்.

அம்மிணிட்ட, “நீ கேளேன்”னு சொன்னேன். முறைச்சாங்க. மகனார்ட்ட, “ நீ கேளேன்”னு கெஞ்சுனேன். காமெடி சீன் மாதிரி ஆக்கிட்டாங்க.

மகனார் போனாப் போவுதுன்னு கேட்கவும் “அங்கியும் இல்லை”ன்னு மச்சான் சொல்லிட்டாரு.

ஓஞ்சு போய் ஒரு ஓரமா வந்து ஒக்கார்ந்தேன். எதிர்வீட்டு அண்ணாச்சி வந்தாரு. “என்ன போனைத் தொலைச்சுட்டீங்களாமே. கேள்விப்பட்டேன்”னு. நாம சொல்லாமயே ஒவ்வொருத்தரா வந்து விசாரிக்கிறாங்களேன்னு கடுப்பாச்சு. வீட்டுக்குள்ர பேசினது இவருக்கு எப்படித் தெரிஞ்சுது.

“கோவிக்காதீங்க. உண்மையாலுமே பேக்கிங்ல தான் வச்சீங்களா. எனக்கு என்னவோ நீங்க தப்பான ரூட்ல போனைத் தேடறாப்ல தோணுச்சு”ன்னு சொன்னாரு. இந்த ஐடியா அவர் வீட்டு அம்மிணி சொன்னதுன்னு அப்புறம் தெரிஞ்சுது. மைண்ட்ல அன்னிக்கு நடந்ததை ஆரம்பத்துலேர்ந்து ஓட்டிப் பார்த்தேன்.

“ஆங்... ஞாபகம் வந்துருச்சு”ன்னு கத்துனேன். அம்மிணி ஓடி வந்தாங்க. பின்னாலேயே மகனாரும். எ வீ அண்ணாச்சி தன்னையே பெருமையா பார்த்துக்கிட்டாரு.

“நாதான் அவருக்கு சொன்னேன். போன் பேக்கிங்ல போவலன்னு” உடனே எங்க அம்மிணி, எனக்குன்னு கொண்டு வந்த காபியை அவர்ட்ட கொடுத்தாங்க.

மகனாரைப் பார்த்தேன். “ஒரு உதவி பண்றியா. உங்க மாமா குடியிருந்த வீட்டுவரைக்கும் போயிட்டு வரணும்”னு.

பைக்ல ஏத்திக்கிட்டுப் போனான். பூட்டியிருந்த வீட்டுக்குள்ர வாசப்பக்கம் ஒரு ஜன்னல் கொக்கி சரி இல்லாம இருந்தது. அதை மெதுவாத் தொறந்து உள்ர எட்டிப் பார்த்தா ஹால்ல ஒரு ஆணில மஞ்சப்பை தொங்குச்சு. “ஹைய்யா கிடைச்சுருச்சு”ன்னு கத்துனேன்.

அம்மிணிட்ட பேசிட்டு அந்தப் பையில போட்டு நாந்தான் ஆணில தொங்க விட்டது. “மாமாவுக்கு போன் போடுரா. வீட்டுச் சாவி யார்கிட்ட இருக்குன்னு.”

மச்சான் சொன்னாரு. “நாங்க காலி பண்ணப் போறோம்னு சொன்னதுமே வேற ஆளை ஃபிக்ஸ் பண்ணிட்டாரு. சாவியை அவருக்கு கூரியர்ல பத்திரமா அனுப்பச் சொன்னாரு. பெங்களூருவுக்கு அனுப்பிட்டோம். அவங்க அடுத்த மாசம்தான் நாள் பார்த்து குடி வராங்களாம்.”

x