பொக்ரான் குண்டு; கார்கில் போர்: கவிதை மனசுக்காரரின் தீர்க்கங்கள்!


கவிதைகள் எழுதும் கனிவான மனிதரால், கடுமையான பொக்ரான் அணுகுண்டு சோதனை மற்றும் கார்கில் போர் முடிவுகளை நாட்டு நலனுக்காக முன்னெடுக்க முடிந்த விநோதமே, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையின் சாதனைகளாக நினைவுகூரப்படுகின்றன.

மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், 15 வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை கரைத்துக்கொண்டவர். பின்னர் ஜன சங்கம் வாயிலாக அரசியலில் அடியெடுத்ததுடன், அத்வானி உள்ளிட்ட சகாக்களுடன் இணைந்து 1980-ல் பாஜக உதயத்துக்கும் காரணமானார். 3 முறை தேசத்தின் பிரதமராக இருந்த பெருமையும் வாஜ்பாய்க்கு உண்டு.

முதல் முறை(1996) அவரது ஆட்சி 16 நாட்களே நீடித்தது. 2-ம் முறையாக பிரதமரானதில் 1998-99 என இரண்டாண்டுகளில், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் என 2 திடமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் சேர்ந்த மக்கள் ஆதரவு, அவரை அடுத்த முறை தொடர்ச்சியாய்(1999-2004) ஐந்தாண்டுகள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தது. அடுத்து வந்த பொதுத்தேர்தலில் கட்சி சரிவு காண, இளம் தலைமுறையினருக்கு இடம்விட்டு ஒதுங்கினார் வாஜ்பாய்.

மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-ல் பொறுப்பேற்றதும், அடுத்த ஆண்டே வாஜ்பாய்க்கு தேசத்தின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. அவரது பிறந்த தினம் நல்லாட்சி தினமாகவும் கொண்டாடப்படுகிறது. 2018-ல், சிறுநீரகத் தொற்று காரணமான தொடர் சிகிச்சையில் பலனின்றி வாஜ்பாய் காலமானார்.

இந்தியப் பிரதமர்களில் தனித்த அடையாளத்துக்கு சொந்தக்காரர் வாஜ்பாய். வலதுசாரி பின்னணியில் இயங்கியபோதும், அனைத்து தரப்பிலும் நண்பர்களை சேர்த்திருந்தார். இந்தியில் அவர் எழுதிய கவிதைகளும், அந்த கவிதைக்கே உரிய கனிவான மனதும் வாஜ்பாயை அனைவருக்கும் நெருக்கமானவராக மாற்றியது. பொக்ரான் சோதனையின்போது எதிர்க்கட்சிகள் முதல் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகள் வரை திடமாக எதிர்வினையாற்றியதும், கார்கில் போரை இந்தியாவின் பெருமைக்கு உரியதாக்கியதும் வாஜ்பாயின் தீர்க்கங்களில் அடங்கும்.

வாஜ்பாய் ஜெயந்தியை முன்னிட்டு, தேசத்தின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என அவரை வாழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி. வாஜ்பாய் நினைவாக பல்வேறு நலத்திட்டங்களை அவர் பெயரால் வழங்கி வருகிறது பாஜக அரசு.

x