காங்கிரஸைக் கண்டித்து விவசாயிகள் போராட்ட அறிவிப்பு


மேகேதாட்டு

மேகேதாட்டுவில் உடனடியாக அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடத்த அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் விவசாய அமைப்புகள் சார்பில் போராட்டம் அறிவித்துள்ளனர்.

மேட்டூர் அணை

மேட்டூருக்கு மேலே ஒகேனக்கல் அருகில் தமிழக எல்லையான மேகேதாட்டு என்ற இடத்தில், காவிரிக்கு குறுக்கே ஒரு அணையைக் கட்ட கர்நாடக அரசு நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழகம் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அந்த அணையை உடனடியாகக் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2022 ஜன.9-ம் தேதி, பெங்களூரில் பாதயாத்திரை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு ஊர்கள் வழியாக ஜன.18-ல் மேகேதாட்டுவை அடைந்து, அங்கு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து தமிழகத்திலும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் விவசாயிகள். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் இதுகுறித்து தெரிவித்ததாவது:

பி.ஆர்.பாண்டியன்

’’கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டவேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கிலும், தமிழக நலனுக்கு எதிராகவும் கர்நாடக காங்கிரஸ் கட்சி இப்படி அறிவித்துள்ளது.

தமிழக விவசாயிகளின் ஒன்றுபட்ட தீவிர போராட்டத்தால் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதற்கு நிரந்தரத் தலைவரும் தேர்வு செய்யப்பட்டு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலோடு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆணையத்தை மிரட்டும் உள்நோக்கத்தோடு, அரசியல் லாப நோக்கத்தோடு முடிந்துபோன காவிரிப் பிரச்சினையை மீண்டும் காங்கிரஸ் கட்சி கிளறுவது தமிழக நலனுக்கு எதிரானது.

இதற்குத் தோதாக கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்த பிறகு உடனடியாக அணை கட்டுமானப் பணி தொடங்கும் எனவும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு

இதனால் தமிழக விவசாயிகள் மீண்டும் போராட்டத்துக்கான சூழலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கர்நாடகத்தின் இந்த போக்குக்குத் தகுந்த பதிலடியாக காவிரியிலிருந்து கடலில் கலக்கும் உபரிநீரைத் தடுத்து, மேட்டூர் அணை மூலம் பாசனம் பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ஒகேனக்கல்லுக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் உள்ள ராசிமணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

ராசிமணல் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அராஜகப் போக்கைக் கண்டித்தும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்துள்ளோம். ஜன.16-ம் தேதி பூம்புகாரில் பேரணி தொடங்கி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, மேட்டூர் பகுதிகள் வழியாகச் சென்று ஜன.18-ம் தேதி, ஒகேனக்கல் ராசிமணல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

காங்கிரஸ் கட்சி, காவிரி மட்டுமன்றி முல்லை பெரியாறிலும் அணையை உடைத்து புதிய அணை கட்ட வேண்டும் என்கிற விஷமப் பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்தத் தமிழக விரோதப்போக்குக்கு முடிவுகட்டும் வகையில், வரும் 28-ம் தேதி மதுரையில் அனைத்து விவசாயிகள், சமூக சேவை அமைப்புகள் ஆகியவை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளோம்.

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்துக்கு எதிராக கர்நாடகம், கேரளாவில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், தற்போது அதைக் காங்கிரஸ் கட்சி கையில் எடுப்பதுவும் தோல்வியிலேயே முடியும் என்று எச்சரிக்கிறோம்” என்றார் பி.ஆர். பாண்டியன்.

தமிழக விவசாயிகளை நிம்மதியாகவே இருக்க விடாதா இந்த தேசியக் கட்சிகள்?

x