பொய்த்தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை: ‘மார்கழியில் மக்களிசை’ குழு எச்சரிக்கை


மார்கழியில் மக்களிசை மதுரை நிகழ்வில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுடன் பா.ரஞ்சித்

‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி குறித்து இணையத்தில் பொய்த்தகவல் பரப்புவோர் மீது, சட்டப்படி புகார் செய்யப்படும் என அக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் பா.ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கான கலை, இலக்கியத்தை பரவலாக்கும் நோக்கோடும், கலாச்சார மாற்றம் வேண்டியும் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் இதுவரை நடைபெற்ற மார்கழியில் மக்களிசை நிகழ்வுகளை மதுரை மற்றும் கோவைக்கும் இந்த வருடம் விரிவுபடுத்தியுள்ளனர். மதுரை(டிச.18) மற்றும் கோவையில்(டிச.19) முடிந்த நிலையில் டிச.31 அன்று சென்னையில் மார்கழியில் மக்களிசை நடைபெற உள்ளது.

எளிய மக்களின் இசைக்கூறுகள், மண்ணின் மணம் வீசும் பாடகர்கள், நாட்டுப்புற இசைக்கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு மதுரை மற்றும் கோவையில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை நிகழ்வுகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதற்கிடையே வீடியோ ஒன்றைச் சுட்டிக்காட்டி, அதில் இடம்பெறும் முறையற்ற பாடல் வரிகளை மையமாக்கி, மார்கழியில் மக்களிசை நிகழ்வுகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு கிளப்பினர். விசாரணையில் அந்த வீடியோவுக்கும், மார்கழியில் மக்களிசை நிகழ்வுகளுக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவதூறு கிளப்பியவர்களில் சிலர் வருத்தம் தெரிவித்தனர். வேறு சிலர் அந்த அவதூறை வேறுபல வடிவங்களில் தொடர்ந்து வருகின்றனர்.

இதையடுத்து மார்கழியில் மக்களிசை குழுவினர் இன்று சமூக ஊடகம் வாயிலாகவே ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சிகள் குறித்து இணையத்தில் பொய்த்தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மார்கழி என்ற தலைப்பில், மக்களிசை நிகழ்வுகள் தொடர்வதற்கு சர்ச்சை எழுந்தபோது, ‘மார்கழிக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது’ என்று பா.ரஞ்சித் கூறியிருந்தார்.

x