‘வாத்தியார்’ ஆர்.எஸ்.ஜேக்கப் காலமானார்


ஆர்.எஸ்.ஜேக்கப்

’வாத்தியார்’ என இடதுசாரி தோழர்களால் கொண்டாடப்பட்ட நெல்லையைச் சேர்ந்த ஆர்.எஸ்.ஜேக்கப், வயது மூப்பின் காரணமாக(96) நேற்று இரவு காலமானார். டைரிக் குறிப்புகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, அதே டைரிக் குறிப்புகளால் விடுதலை செய்யப்பட்ட வரலாறும் இவருக்கு உண்டு. சாதிக்கு எதிராக சாட்டை சுழற்றிய ஆர்.எஸ்.ஜேக்கப்பின் கடந்தகாலத்தை இந்தப் பதிவில் பேசுவோம்.

தூத்துக்குடி மாவட்டத்தின் ‘ராஜாவின் கோவில்’ இவரது பூர்வீகம். 3 நாவல்கள், 18 சிறுகதைத் தொகுப்புகள், வரலாற்று களஆய்வுகள் உட்பட இதுவரை 104 நூல்கள் எழுதியுள்ளார். நெல்லை சதிவழக்கில் கைது செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்த இவர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவின் நெருங்கிய நண்பர். தன் பணிக்காலத்தில் சாதியத்துக்கு எதிராக கடுமையாகக் களமாடினார். அவரை மூன்று வருடங்களுக்கு முன்பு காமதேனுவுக்காக சந்தித்திருந்தோம். அப்போது அவர் இந்த நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.

‘’73 வருசம் ஓடிருச்சு. ஒட்டப்பிடாரம் பக்கத்தில் நயினார்புரத்தில் ஆசிரியர் வேலைக்குப் போனேன். டயோசிசனுக்கு சொந்தமான பள்ளிக்கூடம். அதை ஒட்டி இருந்த தேவாலயத்துக்கும் நான் அருட்பணியாளர். அந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்றில் ஒருபங்கு இருந்தாங்க. அவுங்க பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பக்கூடாதுன்னு ஊரு பண்ணையாரு கட்டுப்பாடு. அதுக்கு பயந்தே யாரும் பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டாங்க.

நான் வேலைக்குப் போன புதுசுல, பண்ணையார்கிட்ட சொல்லிட்டுத்தான் பணிக்கு வரணும்னு மிரட்டுனாங்க. நான் அதை சட்டை செய்யல. தலித் வீடுகளில் போய்ப் பிள்ளைங்களை படிக்க அனுப்பச் சொன்னதால் பண்ணையாருக்கு என்மேல் கோபம். பண்ணையார் குதிரையில் தான் வருவாரு. விரும்புன பொண்ணைத் தூக்கிட்டுப் போவாரு. எதுக்க திராணியில்லாம அந்த மக்கள் அழுவாங்க. பதிலுக்கு கம்பப்புல் வீட்டுக்கு வரும். இதையெல்லாம் எதிர்த்தேன். அந்த ஊருல ஒரு கிணறு இருந்துச்சு. அதுலதான் எல்லாரும் தண்ணீர் எடுப்பாங்க. ஆனால் தலித்துகள் கிணத்தைத் தொட்டு நேரடியாக தண்ணீர் எடுக்கக்கூடாது.

போராடிப்பட்ட காயத் தழும்புகளுடன் ஆர்.எஸ்.ஜேக்கப்

வேறு யாராச்சும் இறைச்சுக் கொடுத்தா கொண்டு போகலாம். நான் ஸ்கூலுக்கு போறதுக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னாடியே இந்தக் கிணத்துக்குப் போய் அவுங்களுக்கு தண்ணீர் இறைச்சுக் கொடுப்பேன். பண்ணையார் ஆளுங்க என்னை கொலை செய்யக்கூட முயற்சி பண்ணுனாங்க. அடிப்படையில் நான் ரொம்ப பயந்த சுபாவம். ஆனா இந்த ஊரில் நான் பார்த்த காட்சிங்க என்னைப் போராளியாவே மாத்திடுச்சு. ஒருநாளு பாடம் எடுத்துட்டு இருந்தேன். ஒரு பிள்ளை, ஒரு சாதிப்பேரை சொல்லிட்டு இந்தப்பய என்னை தொட்டுட்டான் சார்ன்னு கத்துனா… உடனே பிள்ளைங்களை ஒருத்தரை ஒருத்தர் கையை பிடிக்கவைச்சு சாதிகள் இல்லையடி பாப்பான்னு பாடவைச்சேன்.

சின்னவயசுல இருந்தே எது நடந்தாலும் டைரியில் எழுதிடுவேன். இதையெல்லாம் அதேமாதிரி எழுதி வைச்சுருந்தேன். அதே காலக்கட்டத்தில் சுப்பாரெட்டியார், திம்முரெட்டியார்ன்னு இடதுசாரி தோழர்களோடு நட்பு ஏற்பட்டுச்சு. என்னோட கொள்கைகளும், இடதுசாரி சிந்தனையும் ஒத்துப்போச்சு. அது இடதுசாரி இயக்கங்கள் தடைசெய்யப்பட்டிருந்த காலம். பாலதண்டாயுதத்தை போலீஸார் வலைவீசி தேடுனாங்க. சுப்புவும், திம்முவும் கம்யூனிஸ்ட் தோழர்கள் கூட்டத்துக்கு இடம் கேட்டாங்க. பள்ளிக்கூடத்தை கொடுத்தேன். அதையும் டைரியில் எழுதி வைச்சுருந்தேன். பாலதண்டாயுதத்துக்கு அடைக்கலம் கேட்டாங்க. நான் தேவாலயத்தில் தங்கவைச்சேன். இதையெல்லாம் அன்றாட நிகழ்வாக டைரியில் எழுதியிருந்தேன்.

டைரிக்குறிப்பின் அடிப்படையில் போலீஸார் என்னைப் பிடித்தனர். பாடம் நடத்திட்டு இருந்தப்போ, வகுப்பறைக்கே வந்து சட்டையைக் கிழிச்சாங்க. நெல்லை சதிவழக்கில் நானும் சேர்க்கப்பட்டு மூன்றரை வருசம் ஜெயிலில் இருந்தேன். பாலதண்டாயுதம் எங்கேன்னு கேட்டு அடிச்சாங்க. கொடைக்கானலுக்கு சுற்றுலாபோன நீதிபதி சுப்பிரமணியம், வழித்துணைக்கு இருக்கட்டும்னு என்னோட டைரியை எடுத்துட்டுப் போயிருக்காரு. அதை ஓய்வுநேரத்துல வாசிச்சதில், பண்ணையாரின் கொடுமை உட்பட சகலத்திலும் என்னோட சமூக அக்கறையை தெரிஞ்சுருக்காரு.

என் டைரிகுறிப்புகள் நீதிபதிக்கு நான் குற்றமற்றவன் எனக் காட்ட, விடுதலையானேன். சிறைசென்று வந்தவனுக்கு மீண்டும் வேலை கொடுக்கக்கூடாது என டயோசிசனிடம் என் மாமாவே முறுக்கிக்கொண்டு நின்றார். ஆனால், டயோசிசனின் அப்போதைய பொறுப்பாளர் ரெவரண்ட் கேரட் மீண்டும் வேலைதந்தார். ‘நானும் இங்கிலாந்தில் அடிப்படையில் கம்யூனிஸ்ட்டாக இருந்து வந்தவன் தான்’ என அவர் சொன்னது, இப்போதும் நினைவில் இருக்கிறது’’ என நினைவு கூர்ந்திருந்தார்.

தன் வாழ்வின் கடைசிக்காலம் வரை எழுத்து, ஆவணப்படுத்துதல் என இயங்கிவந்த ஆர்.எஸ்.ஜேக்கப், நெல்லை சாந்தி நகரில் வசித்துவந்தார். வயது மூப்பின் காரணமாக நேற்று நள்ளிரவு அவர் காலமானார்.

x