இளசை சுந்தரம்: இனிமையும் இலகுவுமாக இளம் தலைமுறையினரை வழிநடத்தியவர்


ஆசிரியர், இலக்கியச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், வானொலி இயக்குநர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட இளசை சுந்தரம் மறைந்துவிட்டார். இளசை சுந்தரம் வானொலிக்கு ஆற்றிய சேவைகள் மறக்க முடியாதவை. இலக்கியக் கூட்டங்கள், நாடகங்கள் என பல தளங்களில் விரிந்தது அவரது இயங்குலகம். எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது மாணவர்களுடனான அவரது உறவு.

“ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றது எந்த ஊர் ரயில் நிலையத்தில்?” என்று கேட்பார். கேள்வியைக் கேட்ட பின்னர், திருதிருவென மாணவர்கள் முழித்துக்கொண்டிருப்பதைப் புன்னகையுடன் கவனிப்பார்.

தான் கற்றுக்கொண்டவற்றை எளிமையாகவும், ரசனைபூர்வமாகவும் இளம் தலைமுறையினருக்குக் கடத்தும் ஆற்றல் அவருக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. அந்த ஆற்றல், ஏராளமான மாணவர்களின் பள்ளிக் கல்வியைத் தாண்டி பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் பெரும்பங்கு வகித்தது. குறிப்பாக, விநாடி-வினா நிகழ்ச்சிகளை அவர் தொகுக்கும் பாங்கே அற்புதமாக இருக்கும். அதில் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வும் மிளிரும்.

அறந்தாங்கி வடகரை முருகன் கோயிலில், ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவந்த பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார். அப்போது, விநாடி - வினா நிகழ்ச்சியில் அவர் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்பார். அதற்காக, அவர் கொடுக்கும் ‘க்ளூ’ க்கள் மாணவர்களிடையே வெகு பிரபலம். “ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றது எந்த ஊர் ரயில் நிலையத்தில்?” என்பதுதான் அந்தக் கேள்வி. கேள்வியைக் கேட்ட பின்னர், திருதிருவென மாணவர்கள் முழித்துக்கொண்டிருப்பதைப் புன்னகையுடன் கவனிப்பார். “சீக்கிரம் சொல்லுங்க... நேரமாச்சு” என்பார். “இப்படியே எவ்வளவு நேரம் ஆக்குவீங்க. டைம் ஆச்சு” என்பார். விடை - மணியாச்சி!

அதை மாணவர்கள் தாங்களாகவே சொல்லிவிட்டால் கூடுதலாகவே பாராட்டுவார். முந்தைய ஆண்டில் பங்கேற்று வினா ரகசியத்தைத் தெரிந்துகொண்ட சீனியர் மாணவர்கள் மூலம் கேள்வி கசிந்துவிட்டாலும் பொருட்படுத்த மாட்டார். அதே கேள்வியை மீண்டும் கேட்பார்.

ஒருமுறை, “இந்தியாவின் முதலாவது குடியரசுத் துணைத் தலைவர் யார்?” எனக் கேட்டுவிட்டு, பதில் வருவதற்கு முன்னர் க்ளூவையும் கொடுத்தார். “அவரது பெயரின் இரண்டாவது பகுதி - ஒரு கடவுளின் பெயர். முதல் பாதி - ஒரு நடிகையின் பெயர்” என்றார். சினிமா ஆர்வம் கொண்ட சிறுவன் ஒருவன், உடனடியாக, “ராதாகிருஷ்ணன்” எனச் சொல்ல அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது. அவரும் வெகுவாக ரசித்தார்.

பொது அறிவு மட்டுமல்ல, சிலேடைகளிலும் மாணவர்களிடம் ரசனையையும் ஆர்வத்தையும் விதைத்தவர்களில் முக்கியமானவர் இளசை சுந்தரம். ஒருமுறை, மாணவர்களிடம் அவர் கேட்ட கேள்வி.

“கிணற்றுக்குப் பக்கத்தில் நின்று பல்தேய்த்துக்கொண்டிருக்கும் ஒருவரிடம் அவரது நண்பர் வந்து நலம் விசாரிக்கிறார். அப்போது சைகையில் அவர் என்ன பதில் சொல்வார்?” என்று கேட்டார். பல்வேறு பதில்கள் பறந்துவந்தன. ஒரு சிலவற்றை ரசித்தவர், “அவர் எங்கு நின்றுகொண்டிருந்தார்? கிணற்றின் அருகில்தானே... ‘வெல்’ (well) என்று அதைக் காட்டி சைகையில் சொல்லியிருப்பார்” என்று சொன்னார் இளசை சுந்தரம். கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது!

x