வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி


வீராணம் ஏரி

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் வீராணம் ஏரி, தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாது சென்னை மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரி அதன் மொத்த கொள்ளளவான 47.5 அடியை முழுவதுமாக எட்டியுள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந்தேதியும், கல்லணை 16-ந்தேதியும் திறக்கப்பட்டன.

கீழணையில் இருந்து ஆகஸ்ட் 29-ந்தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு மூலமாக வீராணம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பல்வேறு ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரிக்கு முழு அளவில் தண்ணீர் சென்று சேரவில்லை.

அதனால் அப்போது வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்ட இயலாது போனது. வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முழுவதும் பெய்து, அதிக அளவில் நீர் வந்த போதிலும் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த வகையில் ஏரியின் நீர் மட்டம் குறைவாகவே பராமரிக்கப்பட்டது.

தொடர் மழைக்குப் பின்னர், தற்போது மழை இல்லாத நிலையில் கடந்த ஒரு வாரமாக கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாற்றின் மூலமாக 1600 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்தும் விவசாய தேவைக்காக நீர் அதிகம் திறக்கப்படாத நிலையில் ஏரி வேகமாக நிரம்பியது. தற்போது வீராணம் ஏரி, தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.

வீராணம் ஏரியில் 47.50 அடிக்கு நீர் மட்டம் இருக்கும் நிலையில் டெல்டா பாசனத்திற்கு 1000 கன அடியும், சென்னை குடிநீருக்கு 61 கன அடியும் திறக்கப்படுகிறது. ஏரியில் தற்போது 15.60 அடி உயரத்திற்கு, 14 65 மில்லியன் கன அடி என்றளவில் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது

சம்பா பயிரிடப்பட்டுள்ள நிலையில் கடலை, வெற்றிலை ஆகியவையும் காட்டுமன்னார்குடி, லால்பேட்டை, குமராட்சி பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் வீராணம் ஏரியில் தேவையான நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x