லென்ஸ் சிமிட்டும் நேரம் - 24


கொச்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கலைத் திருவிழாவுக்கு ( Kochi Muziris Biennale) 2019 மார்ச்சில் சென்றோம். பிள்ளைகளும் கோடை விடுமுறையில் இருந்ததால் குடும்பத்துடன் சென்றோம்.

இந்த கலைத் திருவிழாவை கொச்சியிலுள்ள Kochi Biennale Foundation என்ற அமைப்பு கேரளா அரசாங்கத்துடன் இணைந்து நடத்துகிறது. இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் கல்வி செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக 2010-ல் போஸ் கிருஷ்ணமாச்சாரி மற்றும் ரியாஸ் கோமு ஆகியோரால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

இதன் நான்காம் பதிப்பு விழா 2018 டிசம்பர் 12 முதல் 2019 மார்ச் 29 வரை நடைப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் இவ்விழாவைக் காண வரும் கலை ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

இந்தக் கலைத்திருவிழாவில் பலவிதமான ஓவியங்கள், புகைப்படங்கள், Art installations போன்றவை கொச்சியின் பழமை வாய்ந்த பல கட்டிடங்களின் உள்ளே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. இதற்காக ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது பார்க்கவே அழகாக இருந்தது. கலை வடிவங்களின் கண்காட்சிகளோடு மட்டுமல்லாமல் இசை நிகழ்ச்சிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் போன்ற பல நிகழ்வுகளும் இங்கு நடக்கின்றன.

முதல் நாள் மட்டஞ்சேரி என்ற பகுதிக்கு சென்றோம். அங்கு கண்காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்கள் மற்றும் கலை வடிவங்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து. அங்கு கண்ட பல Art installations எதை மனதில் கொண்டு செய்திருக்கிறார்கள் என புரிந்து கொள்ளவே நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. கலைஞர்களுக்கு புரியுமோ என்னவோ, நம் போன்றோர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.

அஸ்பின் வால் என்ற இடத்தில் தான் அதிகப்படியான ஓவியங்களும், படங்களும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. புகைப்படங்களும் சில இடங்களில் காட்சிக்காக வைத்திருந்தார்கள். அவைகளெல்லாம் ஓரளவு புரிந்து கொள்ளும்படியாக இருந்தது. இரண்டு மூன்று வெவ்வேறு புகைப்படங்களை இணைத்து ஒரே படமாக காட்சிக்கு வைத்திருந்தார்கள். அதில், நாட்டில் உண்மையாக என்ன நடந்து கொண்டிருக்கிறது... ஆனால், மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை முகத்தில் அறைந்தாற் போல் வெளிப்படையாக சொல்ல முயற்சி செய்திருந்தார்கள். மிகவும் சிந்திக்கத் தூண்டிய படங்கள் அவை.

தொழில்நுட்பம் வளர வளர மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளை செய்யவும் இயந்திரங்கள் வந்தாயிற்று. என்றாலும் கலை வடிவங்களை மனிதர்களால் மட்டுமே படைக்க முடியும் என்பதைப் பறை சாற்றுவது போல் இருந்தன இந்தப் படங்கள்.

இந்தப் பயணத்தில் எங்களால் அனைத்து இடங்களுக்கும் சென்று வர முடியவில்லை. ஏனெனில் சின்னவன் சித்து பொறுமை இழக்கும் முன் அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணம் மனதில். கண்காட்சிக்கான நடைபெற்ற இடங்கள் துறைமுகத்தின் அருகிலேயே இருந்ததால் நடுநடுவே சித்துவிற்கு கப்பல்களைக் காட்டிச் சமாளித்தோம். குளிரூட்டப்பட்ட அரங்குகளில் கண்காட்சிகள் நடந்ததால் கோடையின் தாக்கம் எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பெரியவன் மதியை பற்றிக்கூற மறந்துவிட்டேனே... நாங்கள் கொச்சி வந்து இறங்கியதுமே, “எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று சொல்லிவிட்டு தனியாக வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர்சுற்றக் கிளம்பிவிட்டான். இரண்டு நாட்களையும் எங்களது தொல்லை இல்லாமல் மகன் ஜாலியாகக் கழித்துவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் நாம் சிலகாலம் தியாகிகளாகி விடவேண்டுமல்லவா? அதனால் கண்காட்சியை முழுமையாக தரிசிக்க முடியாமலேயே நாங்கள் பயணத்தை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம். அடுத்த பதிப்பில் கண்காட்சியை இன்னும் கொஞ்சம் விசாலமாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது; பார்ப்போம்!

x