இடப்பெயர்ச்சி இம்சைகள்!


அம்மிணியோட போன் அடிச்சுக்கிட்டே இருந்துச்சு. வழக்கமா உடனே எடுக்கிறவங்க ஏன் இன்னும் எடுக்கலன்னு எட்டிப் பார்த்தேன். என் தங்கச்சி பேர் தெரிஞ்சுது. “அண்ணிட்ட கொடு”ன்னு அதட்டுனா. அம்மிணி கையில் குருப்பெயர்ச்சி பலன்கள் புத்தகம். ஆழ்ந்து படிச்சுக்கிட்டிருந்தாங்க.

அம்மிணி பேசிட்டு வச்சுட்டாங்க. “அம்மிணிட்ட என்ன ரகசியம்”னு தலைக்குள்ர பட்டாஸ் வெடிச்சுது.

“என்னவாம்”னு பொறுக்க முடியாம கேட்டேன். “வேற வேலை. பொழுதினிக்கும் என்னைப் பந்தாடணும்” விசாரிச்சா, தங்கச்சி குடும்பத்தோட ஒரு வாரம் டூராம். தனி வீடு. பூட்டிக்கிட்டுப் போக பயம். நீங்களும் அண்ணனும் வந்து இருக்க முடியுமான்னு கேட்டுருக்கா. “அதெப்படி முடியும்”னு நானும் குமுறினேன்.

அம்மிணி நிதானமா சொன்னாங்க. “ஒரு வாரம் தானே. பார்த்துக்கிறேன்னு சொல்லிருங்க.” அடுத்த பட்டாஸ் கண் எதிர்ல வெடிச்ச மாதிரி இருந்துச்சு.

அம்மிணி படிச்சுக்கிட்டிருந்த பக்கத்தைப் பார்த்தேன். அவங்க ராசிக்கு இடப்பெயர்ச்சி அவசியம்னு போட்டுருந்துச்சு.

மகனார் வழக்கம் போல எஸ்கேப். இந்த வீட்டுலேயே இருக்கேன்னுட்டார். “யாராச்சும் தேடிக்கிட்டு வந்தா..” அப்படின்னு ஒரு பிட்டைப் போடவும் அம்மிணி ஆஃப் ஆயிட்டாங்க.

ஒரு வாரத்துக்கு வேண்டிய ட்ரெஸ் மருந்து எடுத்துக்கிட்டாச்சு. எதிர் வீட்டம்மிணி ஜோக் அடிச்சாங்க. “புள்ளைக்கு கல்யாணம் செஞ்சு தனிக்குடித்தனம் வைப்பாங்க. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப வித்தியாசமா இருக்கீங்க. ஹா ஹா.”

அம்மிணி முகம் மாறவும், “ச்சும்மா தமாஷுன்னு” எ வீ அம்மிணி ஓடிட்டாங்க. தங்கச்சி ரெடியா இருந்துச்சு. கொத்துச் சாவியை நீட்டுச்சு. “ஒரே வாரம். வந்துருவோம். தேவையான காய்லாம் ஃப்ரிட்ஜ்ல இருக்கு. பால் பாக்கட் தெனம் வந்துரும். ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ் அண்ணி”ன்னு சொன்னதும் மையமா சிரிச்சாங்க.

கார் கிளம்பிப் போனதும் வாசக் கதவை மூடுனாங்க. கிச்சனுக்குள்ர போனாங்க. டமால் டுமீல்னு உருட்டற சத்தம். டிவி வால்யூமை விட அதிக சத்தம் கிச்சன்ல. “என்னம்மா”னு உள்ர போனா, அம்மிணி அஞ்சாறு எவர்சில்வர் டப்பா, தட்டு, ஒரு டிபன் கேரியர் ஓரங்கட்டி வச்சிருந்தாங்க.

“இதெல்லாம் என்னானு தெரியுதா. ஒங்க அருமை தங்கச்சி ஒவ்வொரு தடவை வரப்போ பலகாரம் தோசை மாவுன்னு போட்டுக் கொடுத்தது. ஒரு தடவை கூடத் திருப்பிக் கொடுத்ததே இல்லை.

எப்போ கேட்டாலும், “மறந்துருச்சி”ன்னு சமாளிக்கும். வாய் முழுக்கப் பொய்யி. குத்து வெளக்கு ஒண்ணு ஒரு தடவை கொடுத்தேன். அதைத்தான் காணோம். எங்கே ஒளிச்சு வச்சாளோ. இந்த ஒரு வாரத்துல கண்டு பிடிக்காம விட்டுருவேனா” கறுவினாங்க.

கம்னு டிவி பார்க்க ரிடர்ன் ஆயிட்டேன். வானிலை அறிவிப்புன்னு ஓடுச்சு. காற்றழுத்த தாழ்வு மண்டலம், வங்கக் கடலில் புயல், அடுத்த 48 மணி நேரத்துக்கு மழைன்னு பீதி கிளப்பவும் டப்புனு சானலை மாத்தினா டொம்னு ஒரு சவுண்டு .

வுழுந்துட்டாங்களான்னு கிச்சன்ல எட்டிப் பார்த்தா, அம்மிணி பெட்ரூம்ல எதையோ சீரியஸா தேடிக்கிட்டு இருந்தாங்க.

வாசலுக்குப் போனா அடுத்த வீட்டுக்காரர் நின்னுகிட்டு இருந்தாரு. “இன்னிக்கும் போச்சா”ன்னு புலம்புனாரு. மாசம் ஒரு தடவை அங்கே ட்ரான்ஸ்ஃபார்மர்ல புட்டுக்குமாம். ஈபிக்கு போன் செஞ்சு அவங்க வந்து சரி செய்யணுமாம்.

பத்து நிமிசம் அவரோட பேசுனதுல டாபிக் எல்லாமே கலவரப்படுத்தற மாதிரியே பேசினாரு. கலவரக்காரர்னு பேரே வச்சுட்டேன் மனசுக்குள்ர.

தங்கச்சி வீட்டுல இன்வர்டரும் இல்லை. பகல் நேரம்கிறதால வெளிச்சம் இருந்துச்சு. அதுவும் ரெண்டு மணி நேரத்துல கூவிருச்சு. வானம் திடீர்னு கும்மிருட்டு ஆகவும் டமால்னு இடி சத்தம்.

நாங்க இருக்கிற எடம் என்ன மழை அடிச்சாலும் பிரச்சினை இல்லாத மேட்டுப் பகுதி. தங்கச்சி வீடு கட்டுனது கொஞ்சம் தாழ்வான பகுதி. ஈவ்னிங் வரை அடிச்ச மழைல தெருவெல்லாம் தண்ணி. ஜன்னலைத் தொறந்து எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்தேன்.

கலவரக்காரர் முகம் பளிச்சுனு தெரிஞ்சுச்சு. “நைட் பூரா மழை பேஞ்சா வீட்டுக்குள்ர தண்ணி பூந்துரும். இப்படித்தான் 1977-ல”ன்னு கத்துனாரு.

“சாரல் அடிக்குது”ன்னு ஜன்னலை படக்குனு மூடிட்டேன். கிச்சன்லேர்ந்து ஒரு கெட்ட வாடை வந்துச்சு. அம்மிணி புளிச்சுப் போன மாவுல தோசை ஊத்திக் கொடுத்தாங்க.

ஈபிக்கு போன் அடிச்சா, “மழை நிக்கட்டும். வந்துருவோம்”னு பதில். நைட்டெல்லாம் கொசுக்கடில தூக்கம் அவுட்.

காலைல கண் முழிச்சு வாசல்ல பார்த்தா கூடைல பால் பாக்கட். இவ்ளோ ரணகளத்துலயும் பால் பாக்கட்டைப் பொறுப்பா போட்டுட்டு போயிருந்தாரு. சூடா காபி எறங்கவும் லைட்டா தெம்பு வந்துச்சு.

“தங்கச்சி வீட்டைப் பூட்டிட்டு நம்ம வீட்டுக்கே போயிரலாமா”ன்னு கெஞ்சலாம்னு வாயைத் தொறந்தேன்.

வாசல்ல கார் நிக்கிற சத்தம். எட்டிப் பார்த்தா தங்கச்சி குடும்பம். ஒரே நாள்ல திரும்பிட்டாங்கன்னு இன்ப அதிர்ச்சி. நைட்ல மழை இல்லாததுனால தண்ணி எல்லாம் வடிஞ்சுருந்துச்சு. வானம் கூட கொஞ்சம் வெளுத்தாப்ல இருந்துச்சு.

“நாங்க ப்ளான் பண்ண எடத்துல பேய் மழையாம். வந்துராதீங்கன்னு வார்னிங் வந்துச்சு. அதான் திரும்பிட்டோம்”னு தங்கச்சி சொல்ல, அவ புருசன் “கிளம்பிட்டோம். வேற எங்கியாச்சும் போவலாம்னா கேட்டாத்தானே”ன்னு நொந்துக்கிட்டாரு.

ஜாலியா போவலாம்னு போட்ட ப்ரோகிராம்ல மண்ணுன்னு கடுப்பு அவருக்கு.

“நீங்க கிளம்புங்க. இதே கார்ல எறக்கி விடச் சொல்றேன்”னு தங்கச்சி பெருந்தன்மையா சொல்லவும், அம்மிணி ஏற்கெனவே எடுத்து வச்ச ஐட்டங்களோட கார்ல போய் ஏறிக்கிட்டாங்க.

கார்ல போகிறச்ச சொன்னேன். “என்னதான் நம்ம வீட்டுதுன்னாலும் ஒரு வார்த்தை சொல்லிட்டுக் கொண்டு வரலாம்ல”ன்னு.

“ஏன் அவ கேக்க வேண்டியதுதானே என்ன எடுத்துக்கிட்டுப் போறேன்னு. எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு கேப்பா”ன்னு பதிலடி கொடுத்தாங்க. கூடவே இதையும் சொல்லிப் பொலம்புனாங்க.

“அந்தக் குத்து வெளக்கை அடுத்த தடவை சான்ஸ் கிடைச்சா எடுத்துரணும். எங்கே ஒளிச்சான்னே தெரியலியே... நெளிநெளியா எவ்ளோ வேலைப்பாடு!”

x