இசைவலம்: படகில் மிதக்கும் பக்திப் பாடல்!


மார்கழி மாதத்தின் தொடக்கமே அமோகமாக வாய்த்திருக்கிறது ராகா சகோதரிகள் என்று கர்னாடக இசை உலகத்தில் கொண்டாடப்படும் ரஞ்சனி, காயத்ரிக்கு. முதல் மகிழ்ச்சி, ‘மாயோன்’ திரைப்படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்திருக்கும் ‘மாயோனே மாலோனே' பாடலை இந்தச் சகோதரிகள் பாடியிருப்பது. திரையிசை ரசிகர்கள் மட்டுமல்லாமல், கர்னாடக இசை ரசிகர்களும் பிரபலங்களும் இந்தப் பாடலைப் பாராட்டிப் பதிவிட்டுவருகிறார்கள்.

அடுத்த மகிழ்ச்சி, சுவாதித் திருநாள் எழுதிய பஜன் பாடலை இருவரும் பாடியிருப்பது. கர்னாடக இசை உலகில் ராதா - ஜெயலட்சுமி சகோதரிகள், பம்பாய் சகோதரிகளைப் போல் இவர்களும் புகழ் பெற்றவர்கள். அண்மையில் இவர்கள் இருவரும் வாராணசிக்குச் சென்றிருக்கிறார்கள். காசி விஸ்வநாதரைப் போற்றி மன்னர் சுவாதித் திருநாள் எழுதியிருக்கும் ‘விஸ்வேஷ்வர் தர்ஷன் கர் சாலா’ எனும் பஜன் பாடலை, அலைமோதும் கங்கையில் படகில் மிதந்தபடி பாடியிருக்கின்றனர். மிதக்கும் படகில் நம்மை பக்தியில் மூழ்கவைக்கும் இசையைக் கேளுங்கள். சிந்துபைரவி ராகத்தில் அமைந்த பாடலின் தொடக்க ஆலாபனையும் இறுதியில் தம்புராவின் ஸ்ருதியில் ஏகமாகும் குரலும் கேட்பவர்களை நிம்மதியடைய வைக்கும். இடையிடையே விளம்பரங்கள்தான் இடையூறு. அதற்கும் ஒரு வழியை கண்டிருக்கிறார்கள் இந்தச் சகோதரிகள்.

ஏறக்குறைய 6,500 உறுப்பினர்களோடு ஆயிரக்கணக்கான முழுநேர இசை நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கிறது இவர்கள் நடத்தும் www.voncerts.in இணையதளம்.

“யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பார்க்கும் இசை நிகழ்ச்சிகளின் இடையே விளம்பரங்கள் போன்ற நெருக்கடிகள் இருக்கும். எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கரோனா பேரிடர் காலத்தில் ரசிகர்களுக்காக முழுநேர இசை நிகழ்ச்சிகளை அளிப்பதற்காக இந்த இணையதளத்தைத் தொடங்கினோம். ஊரடங்கு உச்சத்தில் இருந்து மே மாதத்திலேயே, மொட்டை மாடியில் இயற்கை ஒலிகளோடு நாங்கள் பாடிய பாடல்களைப் பரீட்சார்த்தமான முயற்சிகளை இதில் காணலாம். மே மாதத்திலிருந்தே முழுநேரக் கச்சேரிகளைப் பதிவிட ஆரம்பித்துவிட்டோம். அந்த வகையில் கரோனா காலத்தில் இணையத்தில் முழுநேர இசை நிகழ்ச்சிகளை வழங்கிய முன்னோடிகள் நாங்கள் என்பதை பெருமையோடு இங்கே பதிவுசெய்கிறோம். கரோனா காலம் இணையத்தின் வழியாக உலகின் எல்லா ரசிகர்களுக்கும் இசையைக் கொண்டு சேர்த்திருக்கிறது. எங்களின் இணையதளத்தில் பின்லாந்து, ஹாங்காங், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தெல்லாம் ‘சப்ஸ்கிரைபர்’கள் வந்திருக்கிறார்கள்.

ரசிகர்கள் முன்பாக கச்சேரி செய்வதே மின்சாரம் பாய்வதுபோல் ஓர் அனுபவமாக இருக்கும். ரசிகர்களும் கலைஞர்களுக்கு இணையாகப் பார்ப்பதற்குத் தயாராகும் வைபவமாக இருக்கும். மியூசிக் அகாடமியில் எங்களுக்குப் பக்கவாட்டிலும் ரசிகர்கள் அமர்ந்திருப்பார்கள். இவ்வளவு பேரை நம்முடைய இசையால் திருப்தியடைய வைக்கும் பொறுப்புடன் கூடிய எதிர்பார்ப்பு இருக்கும். ரசிகர்களின் முன்பாக நடத்தும் ஒவ்வொரு இசை நிகழ்ச்சியும் ஒரு தேர்வு. அப்படிப்பட்ட தேர்வை எதிர்வரும் காலத்தில் எதிர்பார்த்து நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம்” என்று சொல்கிறார்கள் இந்த இசைச் சகோதரிகள்!

சுவாதித் திருநாளின் பாடலைக் காண:

https://youtu.be/ClwbhSX-JnQ

பியானோவில் கசியும் இசை!

குர்பானி பாட்டியாவை ஒரு மழலை மேதை என்றே சொல்லலாம். பியானோ எனும் வாத்தியத்தை இவர் நேசிக்க ஆரம்பித்து வாசிக்க ஆரம்பிக்கும்போது, இவருக்கு 10 வயதுகூட ஆகவில்லை. மேற்கத்திய வாத்தியமான பியானோவின் ஸ்வரஸ்தானங்கள் அத்தனையும் இளம் வயதிலேயே இவருக்கு வசமாகின. இந்தியாவின் புகழ்பெற்ற டி-சீரியஸ் நிறுவனம், குர்பானி பாட்டியாவின் பியானோ இசை அடங்கிய முதல் ஆல்பத்தை வெளியிடும்போது இவருக்கு வயது 13!

“ஓ.பி.நய்யார், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால், மதன் மோகன், ஜதின் லலித் போன்ற சென்ற தலைமுறை இசை அமைப்பாளர்களும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசைக் கலைஞர்களின் இசைதான் என்னை வளர்த்தது. வளர்த்துக் கொண்டிருக்கிறது. இனியும் வளர்க்கும்” என்கிறார் குர்பானி. `ஷாவா ஷாவா’ எனும் பெயரில் பஞ்சாபி பாடல்களை பியானோவில் வாசித்து இவர் வெளியிட்டிருக்கும் ஆல்பம், உலக பஞ்சாபியர்கள் அமைப்பினரால் பாராட்டப்பட்டது. பிரபலப் பாடகரான உஷா உதுப்பிடமிருந்து சிறந்த பியானோ கலைஞருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

மூன்று இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் குர்பானி பாட்டியா, கலா தர்ப்பண், பாரதிய கலா ஸ்மிரிதி ஆகிய புகழ்பெற்ற கலாச்சார அமைப்புகளிடமிருந்து சிறந்த இளம் பெண் பியானோ கலைஞருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். நம்முடைய பாரம்பரியமான இந்திய இசையை பாதுகாப்பதற்கான எளிய வழி, அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதுதான் என்று தன்னுடைய இணையப் பக்கத்தில் சொல்லியிருக்கிறார் குர்பானி பாட்டியா. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் நடத்தியிருக்கும் நேரடியான நிகழ்ச்சியின் காணொலி இது. நிகழ்ச்சி முடிந்ததும் பேசுவதற்கு அவரிடம் ஒலிவாங்கியை (அதுதான் மைக்!) கொடுத்திருக்கின்றனர். அதை வாங்கி நன்றி என்று சிரித்தபடி கூறிவிட்டார். அவ்வளவுதான். அவரின் இசை பேசினால் போதும்தானே!

விரல் மூலம் மட்டும் பேச விரும்பும் வித்தகரின் இசை கேட்க:

https://www.youtube.com/watch?v=b182wsYuBt4

ஈஸ்வரியின் குரலில் இயேசுவின் நாதம்!

அதிரவைக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் இசையைக் கேட்டிருக்கிறோம். ஆனால், மயிலிறகால் வருடும் இனிமையான தோத்திரப் பாடல்களைப் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். ‘திருவிளையாடல்’ தருமி பாணியில் பிரிக்க முடியாதது என்னவோ என்று கேட்டால், ஆடி மாதமும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களும் என்று தைரியமாகச் சொல்லலாம்.

லூர்து மேரி ராஜேஸ்வரி எனும் இயற்பெயருடைய எல்.ஆர்.ஈஸ்வரியின் வித்தியாசமான பாணியிலான குரல் திரைப்பாடல்களுக்கு ஒருவிதமான மயக்கத்தைத் தந்தது என்றால், அவர் பாடிய அம்மன் பாடல்கள் பக்தர்களுக்குத் துள்ளலுடன் ஆடக்கூடிய புதிய பக்தி அனுபவத்தைத் தந்தன. இதே பாணியில், எளிமையான கிறிஸ்தவப் பாடல்களை மக்களிடையே பரப்பியவர் ‘டேப்’ ராதாமாணிக்கம். ‘டேப்’ எனப்படும் தாளவாத்தியத்தை வாசித்தபடியே அவர் பாடுவார். அதனால் அவர் பெயரிலேயே டேப் ஒட்டிக்கொண்டது. அரசியல் கட்சி சார்ந்த பாடல்களை மட்டுமே தொடக்கத்தில் பாடிவந்த ராதாமாணிக்கம், இயேசுவின் வாழ்க்கையைப் பாட்டில் சொல்லும் ‘தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்’ பாடலை எழுதிப் பாடியது அவரது கலை வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுமுதல் எளிய கிறிஸ்தவப் பாடல்களை அவர் மக்களிடையே கொண்டு சேர்த்தார். அவரின் பல பாடல்களைத் தன்னுடைய தேமதுரக் குரலால் பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. கேட்கும்போதெல்லாம் காதில் தேன் பாய்ச்சும் அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் ‘இயேசு பிரான் எங்கள் இயேசு பிரான்’ பாடல். நீங்களும் கேட்டுப் பாருங்கள். அதன் மகிமையை உணர்வீர்கள்!

https://www.youtube.com/watch?v=H9Dekf6YGg8

மொழி வேறு உருக்கம் ஒன்று!

‘நவே குருதஸ்ய’ எனும் புகழ்பெற்ற பாடலை எழுதியவர் துக்காராம். சம்சார சாகரத்தில் மூழ்கி கரைசேர முடியாத சோகம், லௌகீக வாழ்க்கையின் அர்த்தமற்ற வியாக்கியானங்கள், தீர்ப்புகள், தண்டனைகள், போதும்டா சாமி.. உன் தாள் பற்ற உன்னுடைய வரத்தை நாடுகிறேன் இறைவா.. என்று இறைவனை வேண்டும் பாடல். ஏறக்குறைய இதே தொனியில் அர்த்தத்தை வெளிப்படுத்தும் பாடலை சிம்பி எனும் வாத்தியத்தை வாசித்தபடி ஒருவர் பாடுகிறார். துக்காராம் எழுதிய பாடலை கானவ்யாவும் கினியா பிசாவ் எனும் இறை கீதத்தை முமுபானாவும் பார்சிலோவில் பாடும் காணொலி இது. பாடல் எழுதப்பட்டிருக்கும் மொழி எதுவாக இருந்தாலும் உருக்கம் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதுதானே!

இந்தியாவின் பழமையானதும் தற்போது காணக் கிடைக்காததுமான இசை வாத்தியம் ஜலதரங்கம். இந்த வாத்தியத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் சீதா துரைசாமி. இவருக்குப் பின் இந்த வாத்தியத்தைக் கையிலெடுத்திருப்பவர் அவரின் பெயர் சொல்லும் பெயர்த்தியான கானவ்யா துரைசாமி.

நியூயார்க்கில் பிறந்த கானவ்யா, தனது 7-வது வயதில் அவரின் பாட்டி சீதா துரைசாமியின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரிடமிருந்து அரிய வாத்தியமான ஜலதரங்கத்தை வாசிக்கும் முறையைக் கற்றார். கலாக்ஷேத்ராவில் நாட்டியமும் பயின்றார். அதோடு வீணை, ஹார்மோனியம் போன்ற வாத்தியங்களையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். அத்தனையும் அவரது இசைத் திறனில் தெரிகிறது!

உருக்கும் இசையைக் கேட்க: https://www.youtube.com/watch?v=eBB3Pah0uQM

x