இந்து குழுமத் தலைவருக்கு உயரிய விருது: தமிழக முதல்வர் வாழ்த்து!


மாலினி பார்த்தசாரதி

இந்து குழுமத்தின் தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு, கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையத்தின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையத்தின் முன்னாள் மாணவரான மாலினி பார்த்தசாரதி, இதழியல் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக 2022-ம் ஆண்டுக்கான விருதைப் பெறுகிறார். கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையம் மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.

விருது தொடர்பாக கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தினசரிகள் மற்றும் மாதமிருமுறை இதழ் ஆகியவற்றை வெளியிடும், 143 ஆண்டு பாரம்பரியம் மிக்க `தி இந்து’ குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் மாலினி பார்த்தசாரதி உள்ளார். ‘இந்து குழும'த்தின் செய்தி உள்ளடக்கங்களை டிஜிட்டல் பரிமாணத்துக்கு மாறச் செய்ததில் மாலினி பார்த்தசாரதியின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வழங்கியுள்ளார். ’இந்திய இதழியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்திருக்கும் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவராகப் பணியாற்றும் மாலினி பார்த்தசாரதி அவர்களுக்கு, கொலம்பியா கல்வி மையத்தின் உயரிய விருது வழங்கப்படுவதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்க அவரை வாழ்த்துகிறேன்’ என்று அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

x