ஒரே சமையல்... ஓகோன்னு வாழ்க்கை!


நத்தை சேகரிப்பு...

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் இருக்கிறது கிலுவத்தூர். சின்னஞ் சிறிய இந்த கிராமத்தில் கணவர், பிள்ளைகளுடன் சராசரியான குடும்பப் பெண்ணாக வாழ்க்கை நடத்துகிறார் ஆனந்தி. சாதாரண பூனம் சேலை. நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. கழுத்தில் மஞ்சள் கயிறு. மூக்கில் சிறு பொட்டாக மூக்குத்தி. காதில் தங்கத் தோடு என அச்சு அசலாக கிராமத்துப் பெண்மணிக்குரிய இலக்கணமாக இருக்கிறார் ஆனந்தி.

ஆனந்தி

பொழுது விடிந்தால் இன்றைக்கு என்ன சமைக்கலாம் என்பது தான் பெண்கள் மனதில் பிரதான கேள்வியாக எழும். ஆனால், ஆனந்திக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. அந்த அளவுக்கு விநோதமான சமையல் சக்கரவர்த்தியாக இருக்கிறார். பின்னே, முள்ளு முள்ளாக இருக்கும் சப்பாத்திக்கள்ளியில் உண்மையிலேயே சப்பாத்தி செய்து அசத்துகிறாரே ஆனந்தி.

சேப்பங்கிழங்கு, அல்லிக்கிழங்கு, அல்லித்தண்டு, கோரைக்கிழங்கு, புளியமர இலை, வயல் நண்டு, நத்தை, தோட்டத்தில் முளைக்கும் குப்பைக் கீரைகள், பனங்காய் என்று இயற்கையில் கிடைக்கும் அனைத்திலும் அறுசுவை சமையல் செய்கிறார் ஆனந்தி. இந்தக் கட்டுரையின் பிரதான விஷயம் அதுவல்ல... ஆனந்தியின் சமையல் வித்தைகள் அனைத்தும் யூடியூப் வீடியோக்களாக பல லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன, பகிரப்படுகின்றன என்பதுதான் விசேஷம்.

நத்தை சேகரிப்பு...

ஆனந்தி சமைப்பதை வைரலாக்குவதற்காகவே அவரது கணவர் சக்திவேல், ’மை கன்ட்ரி புட்’ என்னும் யூடியூப் சேனலை வைத்திருக்கிறார். இன்றைய தேதியில் இந்தச் சேனலுக்கு 17 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். ஆனந்தியின் சமையலை யூடியூப் வழியே பார்க்கும் பலரும் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றுக்கு 50 பேருக்கோ, 100 பேருக்கோ அன்னதானம் சமைத்துக் கொடுக்குமாறு சொல்லி அவருக்கு பணம் அனுப்பி வருகிறார்கள்.

அந்த வகையில், மாமனார், மாமியார் உள்ளிட்ட தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பங்களிப்போடு சமையலை முடித்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்கிறார் ஆனந்தி. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பெரிய குடும்பத்துக்கு சமையல் செய்வது போலத்தான் தெரிகிறது ஆனந்தியின் சமையல் களம். திறந்தவெளியில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக அமர்ந்து காய்கறி நறுக்குவதும், மசாலாக்களை அரைப்பதும், விறகு வைத்து அடுப்பு கூட்டுவதும், காற்று, மழையில் அடுப்பெரிக்க அல்லாடுவதும், ஒருவழியாக கூட்டுமுயற்சியில் சமையல் தயாராவதும் பார்க்கப் பார்க்க அந்தச் சமையலை ருசிக்கத் தூண்டுகிறது.

ஆனந்தி

தங்களது பிறந்தநாள் மற்றும் மண நாளுக்கு சமையல் செய்யப்படுவதில் தொடங்கி, ஏழைமக்கள் அதைப் பசியாறுவது வரை யூடியூபில் பார்த்து மகிழ்கிறார்கள் ஸ்பான்சர்கள். எவ்விதமான டெக்னாலஜியும் பயன்படுத்தாமல் இயல்பாக இந்த வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன. அநேகம் பேரால் விரும்பிப் பார்க்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

“இதுக்காண்டி பெரிசா ஒண்ணும் செலவாயிடாது. பெரிய சமயலு இல்லன்னா, 100 ரூவாகூட செலவில்லாம ஒரு சமையல முடிச்சுடுவேன். உதாரணத்துக்கு, நத்தைக்கறி சமையலுன்னா அதக் கடையில போயி காசுகொடுத்தா வாங்கப்போறம்? நானும், மாமியா, புள்ளங்கள்லாம் வயலுக்குப்போயி நத்த புடுச்சுடுவோம். அப்பறம் அதைக் கொண்டாந்து வூட்டுல இருக்கிற பொருள வைச்சே ஈசியா சமச்சுடுவோம். அதுபோலத்தான் வயல்ல, கொல்லையில, வாய்க்கால்ல, ஆத்துல, மரத்துல, செடியில, கொடியில, காட்டுல கெடக்கிறதயெல்லாம் எல்லோருமா போயி தேடிக்கொண்டாந்து சமையல் செய்வோம். அதனால பெருசா செலவுக்கே வேலையில்ல.

பொறந்த நாளு, அது இதுன்னு பெரிய சமையலுன்னா தான் சாமான் வாங்கவேண்டியிருக்கும். ஆளும் கூடுதலா தேவையாயிருக்கும். அதையும் எங்கவீட்டு ஆளுங்களே கூடி பேசிக்கிட்டே சமைச்சுடுவோம். மசாலா எல்லாமே நாங்களே அரைச்சுடுவோம். வெறவு அடுப்புலதான் சமைப்போம். இருக்கிறத வைச்சு கிடைக்கிறத சமைப்போம். அதுதான் எங்க சப்ஸ்கிரைபருங்களுக்குப் புடிக்குது. இதுல வர்ற காசுல என்னோட வேலை செய்யுற எல்லாருக்கும் சம்பளம் கொடுத்துடுவேன்” என்று பேச்சிலும் அழகு சேர்க்கிறார் ஆனந்தி.

ஆனந்தி

பிளஸ் 2 வரையே படித்திருக்கும் ஆனந்தி, 10 வருடம் திருப்பூரில் வேலைபார்த்திருந்தாலும் இன்னும் ஒரிஜினல் கிராமத்துப் பெண்மணியாகவே இருக்கிறார். “சப்பாத்திக்கள்ளி, புளிய இலைன்னு எப்படி விதவிதமா ரெசிபி பிடிக்கிறீங்க” என்று அவரிடம் கேட்டோம்.

‘’எங்க மாமியாவோட அம்மாக்கு 100 வயசு ஆவுது. இன்னும் ஆரோக்கியமா இருக்காங்க. அவங்கள மாதிரியே எங்க சொந்தக்காரங்க பலபேரு 90, 95,100 வயசைக் கடந்தும் இன்னும் திடகாத்திரமா இருக்காங்க. அவங்கட்ட பேசுனாலே ஆரோக்கியத்துக்கான ரகசியம் கெடைச்சுடும். அவங்க காலத்துல எதையெல்லாம் சாப்பிடுவாங்க? எப்படி செஞ்சு சாப்பிடுவாங்கனு கேட்டு, அவங்க சொல்றத வைச்சுத்தான் இப்படி விதவிதமான ஆரோக்கிய உணவுகளை சமைக்கிறோம்” என்று சொன்னார் ஆனந்தி.

குழுவினருடன் ஆனந்தி

ஆனந்தியின் கணவர் சக்திவேலும் பிளஸ் 2 வரைதான் படித்திருக்கிறார். இந்த யூடியூப் ஐடியா அவருடையதுதான். வீடியோ எடுப்பது, அவற்றை இணைப்பது, பதிவேற்றுவது என அனைத்து வேலைகளையும் அவர்தான் பார்க்கிறார். தவிர்க்க முடியாத தருணங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் இந்தக் குழுவின் சமையல் கமகமக்கிறது. தினமும் எடுக்கப்படும் வீடியோக்கள் உடனுக்குடன் சேனலுக்குப் போகிறது. இப்படி இதுவரைக்கும் சுமார் 1,000 வீடியோக்கள் வரை எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறது ஆனந்தி அண்ட் கோ.

சக்திவேலு

எப்படி உதித்தது இந்த யூடியூப் யோசனை என சக்திவேலுவிடம் கேட்டபோது, “’திருப்பூர்ல சலூன் வைச்சிருந்தேன். அப்ப முடிவெட்டறது, ஷேவிங் செய்யுறது, மசாஜ் செய்யுறது, பிளீச் செய்யுறது எல்லாத்தையும் டிஜிட்டல் கேமராவுல எடுத்து சும்மா அப்படியே நெட்ல அப்லோடு செய்வேன். அதை யாராவது பார்க்கிறாங்களான்னுகூட எனக்குத் தெரியாது. அதையெல்லாம் ஒருகட்டத்துல வெளிநாட்டுல நிறையப்பேரு விரும்பிப் பார்த்திருக்காங்க. அதுல ஒருத்தர் எனக்கு போன் பண்ணி, ‘நீ போடுற வீடியோவெல்லாம் நல்லாயிருக்கு. இன்னும் நெறையாப்பேரு பார்த்தாங்கன்னா இதுக்கு காசு வரும். அதுக்கு சில வேலைகளைச் செய்யணும்‘னு சொல்லி, அதையெல்லாம் சொல்லியும் கொடுத்தாரு.

ஆனந்தி டீம்...

அப்புறம்தான் எனக்கும் ஒரு ஐடியா கெடச்சுது. வெறும் சலூன் கடைய மட்டும் வீடியோ போடாம வீட்டுல இருந்தும் வீடியோ எடுக்கலாம்னு முடிவு செஞ்சேன். என் மனைவி நல்லா சமைப்பாங்க. அதையெல்லாம் செல்போன்ல எடுத்துப்போட ஆரம்பிச்சேன். வியூவர்ஸ் அதிகமானாங்க. திருப்பூர்ல சுத்தி இருக்கிற தோட்டம், தொறவு, வயல், வாய்க்காலுக்கெல்லாம் போயி அங்க என்ன கிடைக்குதோ அதை வைச்சு சமைச்சு வீடியோ போட்டோம். எல்லாத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. அப்பறம் கரோனா வந்துடுச்சு. அங்க கடையும் வைக்க முடியல, வீட்டைவிட்டு வெளிலயும் போவமுடியல.

அதனால கடைய மூடிட்டு இங்க ஊருக்கே வந்துட்டோம். இங்க வந்தப்புறம் சொந்தக்காரங்க எல்லாரும் இருந்ததால நெறையா வெரைட்டியா சமைக்க முடியுது. அவங்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க முடியுது. எல்லோரும் ஒண்ணா சந்தோசமா இருக்க முடியுது. இதன்மூலமா இன்னும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் கிடைச்சிருக்காங்க. எங்களுக்கும் போதிய வருமானம் கெடைக்குது” என்று மகிழ்ந்தார்.

இயற்கையோடு இயைந்து வாழவேண்டும் என்றும், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றும் சொன்னார்கள் நம் முன்னோர்கள். அதை அனுபவித்து ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனந்தி- சக்திவேல் தம்பதி.

x