வறுத்தெடுக்கும் பண்பலை ‘வாணலி’கள்!


வானொலி என்பது அறிவியலின் கொடை. பொழுதுபோகவும் அறிவை (நம்மையும் அறியாமல்தான்!) வளர்த்துக்கொள்ளவும் உதவியதில், வானொலியின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அலாரம் டைம் பீஸ் இல்லாதவர்கள்கூட, வானொலியில் செய்தி ஒலிபரப்பாகும் வேளையை வைத்து காலையென்றால் 7.15, முற்பகல் 12.40, மாலையில் 6.30 (மாநிலச் செய்திகள்), இரவு 7.15 மணி என்று உறுதி செய்துகொண்டுவிடுவார்கள். முதலிலிருந்து செய்தியைக் கேட்காவிட்டாலும், “மீண்டும் தலைப்புச் செய்திகள்...” எனும்போது, கேட்கும் தொலைவுக்கு அருகில் வந்து கேட்டுவிட்டு நகருவார்கள்.

நான் ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவாளன். கட்சி உறுப்பினர் அட்டையெல்லாம் கிடையாது. கேட்டாலும், “கட்சியெல்லாம் வேணாம், போய் ஒழுங்கா படின்னேன்…” என்று என் தலைவர் கண்டித்து அனுப்பியிருப்பார். 1971 லோக்சபா, அசெம்பிளி தேர்தல் முடிவுகளை திருவண்ணாமலையில் எதிர்வீட்டு வானொலியில் கேட்டபோது, 2 காரணங்களுக்காக அதைத் தூக்கி அப்படியே தெருவில் போட்டு உடைக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது. ஒன்று, நான் ஆதரித்த ஸ்தாபன காங்கிரஸ் தோற்றது, இன்னொரு காரணம் அது எதிர்வீட்டுடையது!

வானொலி’ வாசித்த அனுபவம்...

காலை, மதியம், மாலை, இரவு என்று அகில இந்திய வானொலியில் என்னென்ன நிகழ்ச்சிகள் என்று மனப்பாடம். காலையில் விரிவாக்கப் பணியாளர்களுக்குச் சொல்வதையெல்லாம் கேட்பேன். மயிலாடுதுறையில் நெல் பயிரில் அசுவினி பூச்சி வந்துவிட்டது என்பதைக் கேட்டு கண்ணமங்கலத்தில் கலங்குவேன். ‘வானொலி’ என்று ஒரு புத்தகமே அச்சிட்டார்கள். அதெல்லாம் பெரிய மனுஷாள் வீட்டுக்குத்தான் கிடைக்குமாம். யாருடைய வீட்டிலோ பார்த்துவிட்டு, திரைகானத்தில் என்னென்ன படங்கள் என்று பார்த்துப் பரவசப்பட்டேன். அந்த வீட்டு மாமி வந்து, “ஏண்டா போன மாசத்து வானொலியைப் பாத்திண்டிருக்க?” என்று கேட்கவும் மனம் ‘குணா’வாகிவிட்டது.

வேலூர், கண்ணமங்கலத்திலிருந்தபோது திருச்சி வானொலி எடுக்காது. விவிதபாரதி ஈனமாகக் கேட்கும். விளம்பரம் மட்டும் தெளிவாகக் காதில் விழும். திருவண்ணாமலையில் ஹவுஸ் ஓனர் பையனும் பெண்ணும் ஒரு சில வருடம் என்னைவிடப் பெரியவர்கள். அப்பா இல்லாதபோது வானொலியில் திரைகானம் வைப்பார்கள். நான் வாசலில் நின்றுகொண்டு கேட்பேன். அவர்களுடைய அப்பா வந்தால் சைகை காட்டினால் நிறுத்திவிடுவார்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் படிப்பதற்காகவே ஏதாவதொரு பாடப் புத்தகத்தை விரித்த நிலையில் தயாராக வைத்திருப்போம். உள்ளே வரும் அவர், மூன்று பேரும் ஒரே சமயத்தில் புத்தகமும் கையுமாக இருப்பதைப் பார்த்து கண்டுபிடித்துவிடுவார்.

கல்லூரி வாழ்க்கையில் வானொலியில் பாட்டு கேட்பது குறைந்துவிட்டது. ஏற்காட்டில் இருந்த ஓராண்டில் (1974-75) இலங்கை வானொலி, அதுவும் மதியம் 2 மணி தொடங்கி ‘ஆசிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்’ ஒலிபரப்புகளைக் கேட்பேன். தெலுங்கு, கன்னடம், மலையாளம் பழக அது நல்ல வாய்ப்பாக இருந்தது. சில மாதங்கள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் அனைத்தையும் தமிழிலேயே பேசினேன்.

இரவின் மடியில்…

படித்து முடித்து, மதுரையில் வேலைக்குச் சேர்ந்து ஒரு லாட்ஜில் (1982) தங்கியிருந்தேன். அப்போது இரவு 7 மணிக்கு மேல் அங்கு தங்கியிருந்த இளைஞர்கள் அனைவரும், ‘இரவின் மடியில்’ கேட்க மொட்டை மாடியில் கூடிவிடுவோம். ஒவ்வொரு பாட்டு முடியும்போதும் கண்களில் கண்ணீர் பெருகியிருக்கும். வானொலியை எந்த அளவுக்கு ஜனரஞ்சகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இலங்கையர்கள் நல்ல வழிகாட்டிகள். மயில்வாகனம் சர்வானந்தா, ராஜேஸ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, கே.எஸ். ராஜா, புவனலோஜனி, நாகபூஷனி கருப்பையா இன்னும் பலரெல்லாம் உடன் பிறந்த அண்ணன், அக்காவைப் போலவே தோன்றும். அந்தக் குரல்கள்தான் இலங்கை, அந்தக் குரல்கள்தான் ஈழம், அந்தக் குரல்கள்தான் என்னுடைய ரத்தம் என்று இன்று நினைக்கும்போதும் நெஞ்சம் கனக்கிறது.

“இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்” என்று அவர் சொல்லும் போதே அத்தனை இனிக்கும். மறந்தும் ஒரு வார்த்தைகூட ஆங்கில கலப்பு வராது. விளம்பரத்தில் கூட, ‘இணை அனுசரணை வழங்குவோர்’ என்று தான் சொல்வார்களே தவிர நம்மவர்களைப் போல, ‘கோ - ஸ்பான்சர்’ என்று தமிழைக் கொல்ல மாட்டார்கள். ‘பொங்கும் பூம்புனல்’, ‘இசையும் கதையும்’ என்று அழகழகாய் நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தருவார்கள். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ சினிமாவைப் பார்த்தபோது, இவையெல்லாமும் நினைவுக்கு வந்து நான் கதறி அழுதேன். அதைப் பார்த்துவிட்டு அருகில் இருந்தவர் நான் மிகையாக அழுவதாக எரிச்சல் பட்டார்.

வெள்ளிக்கிழமை பார்த்து...

சமீப காலமாக இரவில் 10 அல்லது 11 மணிக்கு வேலையெல்லாம் முடிந்து, பழைய பாடல்களைக் கேட்க வானொலியை நாடும்போதுதான் 2 தலைமுறைகளின் இடைவெளியும், 2 நாடுகளின் ஊடக நிர்வாக அக்கறையும் புரிகிறது. சென்னை வானொலி நிலையத்தில் நல்ல தொகுப்பாளர்கள் சிலர் இன்னமும் இருக்கின்றனர். இலங்கையில் ஒருவரைக்கூட மோசம் என்றோ சுமார் என்றோ கூட ஒதுக்க முடிந்ததில்லை. இந்திய வானொலி நிலைய இயக்குநர்கள், திரைப்படப் பாடல்கள்தானே என்று கேட்பதில்லையோ? அகில இந்திய வானொலியையும், தூர்தர்ஷனையும் நிர்வகித்தவர்களில் பலர் சாடிஸ்ட்டுகளோ எனச் சந்தேகித்திருக்கிறேன்.

1980-களில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் டிவியில் ஒலியும் ஒளியும் ஒளிபரப்பாகும். ஒரு திரைப்படத்தில் கணவர் இறந்து அவருடைய மனைவிக்கு தாலி அறுப்பதைப் பாடலோடு வெகு சவிஸ்தாரமாகக் காட்டியிருப்பார்கள். அதில் பாடல் நயமோ, இசையோ, காட்சியமைப்போ எதுவுமே நன்றாக இருக்காது. மிக நல்ல பாடல்களை கடைசியில் தள்ளி, கடைசி பத்தி இருக்கும்போது மென்னியைப் பிடிப்பது நேயர்களுக்கான விசேஷ சேவை! இந்தத் தாலியறுக்கும் பாடலை மட்டும் நட்ட நடுவாகவே - அதிலும் வெள்ளிக்கிழமையாகவே பார்த்து ஒளிபரப்புவார்கள்.

பாட்டுக்கா பஞ்சம்?

இப்போது சென்னை பண்பலையில் கோல்டு, ரெய்ன்போ என்றெல்லாம் இருக்கிறது. இதில் கோல்டுக்குத் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்ப குறைந்த நேரம்தான் கிடைக்கிறது. ஆனால், நல்ல பாடல்களாகத் தருகிறார்கள். இளைய தலைமுறைதான் பழைய பாடல்களைத் தருகிறது. ஏனோ சில பாடல்களை வாரத்துக்கு இரண்டு மூன்று முறைகூட ஒலிபரப்புகிறார்கள். திடீரென்று, ஒரு படப்பாடல் என்று, தியேட்டரில் டீ ஸ்டால் வசூல் ஏற வேண்டும் என்பதற்காக அந்தக் காலத்தில் போட்ட படு கண்றாவியான பாடல்களைக்கூட கர்ம சிரத்தையாக ஒலிபரப்புகிறார்கள். விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது, சென்னை வானொலியிடம் பல ஆயிரக்கணக்கில் நல்ல பாடல்கள் கைவசம் இருந்திருக்க வேண்டும். பாட்டுகளுக்கா பஞ்சம்?

அறிவிப்பாளர்களின் சேட்டைகள்

அலுத்துப்போய் பாடல் கேட்க வருகிறவர்களின் பொறுமையைச் சோதிப்பதைப் போல, அறிவிப்பாளர்களின் குரல்களும் சேட்டைகளும். ஒருவர், ‘நல்ல நல்ல பாடல்கள் அடுத்து வருகின்றன’ என்று சொல்லியே மோசமான பாடல்களைத் தொடர்ந்து ஒலிபரப்புகிறார். இதில் அடிக்கடி மணியைச் சொல்வது வேறு! இதென்ன டெல்லி போகும் ரயிலா, தவறவிட்டுவிட்டால் பிளாட்பாரத்திலேயே தங்க வேண்டும் என்பதற்கு? ‘நூத்தி ஒண்ணு நாலு - இங்கே எல்லாமே தூளு’ என்கிறார்கள். தமிழ் அகராதியில் தூளு என்றால் என்ன பொருளோ? ஒரு பாட்டு முடிந்து 20 அல்லது 30 விநாடிகளுக்கு அறிவிப்பே கிடையாது. என்னைப் போல ரத்தம் கொதித்த ‘அந்தக் கால இளைஞர்கள்’ யாராவது அறிவிப்பாளரைக் கடத்தி போயிருப்பாரா என்று சந்தேகப்பட்டு மகிழ்ந்துகொண்டிருக்கும் வேளையில், மீண்டும் குரல் கேட்டுவிடுகிறது.

‘லவ் குரு’ என்று ஒரு அலைவரிசையில் இளைஞர் பேசிக்கொண்டேயிருக்கிறார். காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்க்கு குரு அவசியமா? இன்னொரு அலைவரிசையில் ஒருவர், தான் காதலித்த பெண்ணின் பெயரைச் சொல்லாமல் - அவர் குடியிருக்கும் பகுதி, அவர் படித்த கல்லூரி, அவர் வேலை செய்யும் இடம் என்று எல்லா அடையாளங்களையும் சொல்லி அவருக்கு பாட்டை டெடிகேட் செய்தார். இதைவிட கேடுகெட்ட டெடிகேஷன் இருக்க முடியுமா? ஏராளமான நேயர்கள் கேட்கும் நிகழ்ச்சியில் இதெல்லாம் நல்லதற்கா?

சூரியன் எஃப்எம் அறிவிப்பாளர் இலங்கைக்காரர். யாழ்ப்பாணம் சுதாகர். காற்று மண்டலத்தைக் கற்கண்டு மண்டலமாக மாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் அபாரம். ஆனால், எம்ஜிஆர், சிவாஜி படங்களைத் தவிர மற்றவர்களுடைய படங்கள் இலங்கையில் அதிகம் ஓடியிருக்காதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு ஒதுக்குகிறார். ஜெய்சங்கர் படமாவது வருகிறது, ரவிச்சந்திரன், ஏவிஎம் ராஜன், முத்துராமன் படப் பாடல்கள் எல்லாம் பாடகர்கள் (எஸ்பிபி, பிபி சீனிவாஸ்) பாடல்களாக மட்டும் வருகின்றன. அதுமட்டும்தான் ஒரே குறை!

பாடல்களை ஒலிபரப்பும் முன்னர் படத்தின் பெயர், பாடகர்கள் பெயர்களைச் சொன்னது ஒரு காலம். பிறகு இசையமைப்பாளர், கவிஞர் பெயர்களையும் சேர்த்தார்கள். யாழ்ப்பாணக்காரர் ஒரு படி மேலே போய் டைரக்டர், தயாரிப்பாளர், அந்தப் பாடல் எந்த ராகத்தில் அமைந்தது, அந்தத் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் - வெள்ளவத்தையில் எந்தத் திரைப்படக் கொட்டகையில் திரையிடப்பட்டது என்றெல்லாம்கூட ரசனையோடு சேர்த்துச் சொல்கிறார்.

அறிவிப்பாளர்கள் திருத்தமாக, தெளிவாகப் பேச வேண்டும். பல அறிவிப்பாளர்களிடம், பாடல்களை அறிவிப்பதில் சீர்மையும் ஒழுங்கும் இல்லை. ஒரு பாட்டுக்கு ‘டிஎம்செளந்தரராஜன் அவர்கள்…’, இன்னொரு பாட்டுக்கு, ‘டிஎம்எஸ்’, மற்றொரு பாடலுக்கு, ‘சுசீலா அம்மா…’ பாடியது என்று. எனக்குத் தெரிந்து பி. சுசீலா தான் பாடியிருக்கிறார். அதே குரலில் அவருடைய அம்மாவும் எப்போது பாடினாரோ?

படம் பெயர் சொன்னால், பாடகர் பெயர் சொல்வதில்லை, பாடகர் பெயர் சொன்னால் அது அவர் பாடிய பாடலாக இருப்பதில்லை. ஒரு அறிவிப்பாளர், கேட்டு முடிந்த பாட்டு வரியை மீண்டும் சொல்லி, அதைக் கேட்டீர்கள் என்று கெட்ட கோபத்தைக் கிளப்புகிறார். அதான் கேட்டாகிவிட்டதே அந்த வரியை ஏன் சொல்ல வேண்டும்? அதைவிடக் கொடுமை, சிலர் நான்கு அல்லது ஐந்து வார்த்தை பேசுவதற்குள் வாயால் காற்றை இழுத்தும் - விட்டும் காற்று மண்டலத்தை கார்பன் டை ஆக்சைடு மண்டலமாக மாற்றிவிடுகிறார்கள்.

இவையெல்லாம் யார் மனதையும் புண்படுத்த அல்ல, புண்பட்ட நேயரின் உள்ளத்தை அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்குக் காட்ட, அவ்வளவே. இன்னும் கொஞ்சம் அக்கறை, இன்னும் கொஞ்சம் ரசனை தேவை!

x